Aran Sei

2ஜி-க்கு இணையான ஊழல் – தமிழக பாஜகவை பாதிக்கும்- சுப்பிரமணியன்சாமி கருத்து

டிபிஎஸ் வங்கி லக்‌ஷ்மி விலாஸ் வங்கியுடன் (எல்விபி) இணைவதை தடை செய்ய வேண்டும் என பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணிய சுவாமி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

லக்‌ஷ்மி விலாஸ் வங்கியில் இருந்த நிர்வாக பிரச்சினைகள், வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), டி பி எஸ் மற்றும் எல் வி பி இணைப்புத் திட்டத்தை கடந்த மாதம் அறிவித்தது. இந்நிலையில், சுப்பிரமணியன் சுவாமி வியாழன் அன்று நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டையும், மத்திய அமைச்சரவையின் முடிவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“வங்கித் துறையின் அளவீடுகளில் டிபிஎஸ் வங்கியை விட லக்‌ஷ்மி விலாஸ் வங்கி இருபது மடங்கு பெரியது. இந்தியாவில், லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் கிளைகள் 550 இருக்கின்றன. ஏறத்தாழ நூறு வருடங்கள் பழைமையான கரூரை சேர்ந்த லக்‌ஷ்மி விலாஸ் வங்கி, பின்தங்கிய, வங்கி வசதி இல்லாதிருந்த மக்களுக்கு வங்கி சேவைகளை கொண்டு சேர்த்தது. நவம்பர் 17, 2020 அன்று அலுவலக நேரம் முடியும் போது, லக்‌ஷ்மி விலாஸ் வங்கியின் மொத்த சொத்துக்களும் டிபிஎஸ் வங்கிக்கு மாற்றப்பட வேண்டும் எனும் இணைப்புத் திட்ட வரைவை ரிசர்வ் வங்கி வெளியிட்டது” எனத் தொடங்கும் கடிதத்தில், ரிசர்வ் வங்கி இணைப்பு குறித்து கருத்து தெரிவிக்க போதுமான அளவு நேரத்தை எல்.வி.பி பங்குதாரர்களுக்கு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

நவம்பர் 20 ஆம் தேதி, அலுவலக நேரம் முடிவடைதற்கு முன், பங்குதாரர்களுக்கு மாற்றுக் கருத்துகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. எழுபத்திரண்டு மணி நேர அவகாசம் பங்கு தாரர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. இது மிகக் குறைவான கால அவகாசம் என்று குறிப்பிட்டுள்ள சுப்பிரமணிய சுவாமி இதன் பின் இருக்கும் நோக்கத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.

“சில பங்குதாரர்கள் இத்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர். ஆனால், ரிசர்வ் வங்கி பங்குதாரர்களின் மறுப்புகளை கணக்கில் எடுக்காமல், அவசர அவசரமாக நவம்பர் 25 ஆம் தேதி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு திட்ட வரைவை சமர்ப்பித்துவிட்டது. இதைத் தொடர்ந்து, 27-ஆம் தேதி திட்டம் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டது” என கடிதத்தில் சுப்பிரமணியன்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இணைப்புத் திட்டத்தில், பங்குகளையும், பத்திரங்களையும் (Bond) தள்ளுபடி செய்துவிட்டு, டிபிஸ் வங்கி எல்விபியின் கணக்குகளில் வைக்கப்பட்டிருக்கும் பணத்தை மட்டுமே கைப்பற்றும் என அறிவிக்கப்பட்டது அவசியமற்றது எனும் சுப்பிரமணியன் சுவாமி இது இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்கத்தை, நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறது என்று கூறியுள்ளார்.

“பங்குதாரர்கள் பத்திரதாரர்களின் நலனை கருதாமல் [பங்குதாரர்கள், பத்திரதாரர்களுக்கு வர பணத்தை தள்ளுபடி செய்து விட்டு] , ரிசர்வ் வங்கி அவசரகதியில் அமல் செய்திருக்கும் இந்தத் திட்டம், அபத்தமானதாக, அவசியமில்லாததாக, மோசடியாக இருப்பதால் ‘2ஜி அலைக்கற்றை ஊழலை’ போலவே இருக்கிறது. 2ஜி ஊழல் வழக்கில் நடந்தது போலவே இந்த திட்டமும் வருகின்ற தமிழக தேர்தலில் கட்சிக்கும் (பாஜக), அதன் கூட்டணிக்கும் மோசமான முடிவுகளுக்கு காரணமாக இருக்கலாம்” என குறிப்பிட்டுள்ளார்.

ஆர்பிஐ பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை, அதன் செயல்பாட்டில் முறைகேடு நடக்கிறது என்று கூறியுள்ள சுப்பிரமணியன் சுவாமி “இரு வங்கிகளின் இணைப்பு நிறுத்தப்பட்டு, திட்டம் குறித்து முறையே தணிக்கை நடத்தப்பட வேண்டும். டிபிஎஸ் வங்கிக்கு எதிராக அதன் தாய்நாட்டிலும், சர்வதேச அளவிலும் இருக்கும் பண மோசடி குற்றச்சாட்டுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும். சிபிஐ பெரிய அளவிலான ஊழல் வழக்குகளில் ஆர்.பி.ஐ-யை விசாரித்ததில்லை என்பதனால், ஆர்.பி.ஐ-ன் இயக்கம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆர்.பி.ஐ-ன் ஆரோக்கியமான செயல்பாடு அரசிற்கு முக்கியமானதாக இருக்க வேண்டும். எனவே, விசாரணை முடியும் வரை ரிசர்வ் வங்கி ஆளுநர் காலவரையற்ற விடுப்பில் அனுப்பப்பட வேண்டும். ஆர்.பி.ஐ மற்றும் ஆலோசனை குழுக்கள் புதிதாக அமைக்கப்பட வேண்டும்” என்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுப்பிரமணியன்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்