Aran Sei

மகனின் உடலைக் கேட்டு போராடிய தந்தை மீது வழக்கு – தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

றந்துபோன மகனின் உடலைக் கேட்டு போராட்டம் நடத்திய தந்தையின் மீது, தீவிரவாத தடுப்புச் சட்டமான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ், ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பவர் மாதம் 30 ஆம் தேதி, புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுவன் அதர் முஸ்தாக், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடன், சேர்த்து மேலும் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்

ஸ்ரீநகர் – பாராமுல்லா தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், டிசம்பர் 29ஆம் தேதி இரவு துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும், மறுநாள் அதிகாலையில் துப்பாக்கிச் சத்தம் அதிகமாக கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக தி வயர் கூறுகிறது.

“அவர்களை சரணடைச் சொன்னோம், ஆனால் அவர்கள் சுடத்தொடங்கினார்கள். இரவு நேரத்தில் நடவடிக்கையை நிறுத்தி வைத்திருந்தோம். அவர்கள் சரணடைய மறுத்ததால் காலையில் நடவடிக்கையை தொடங்கினோம்” என்று பாதுகாப்பு படையின், தலைமை கட்டளை அதிகாரி எச்.எஸ்.சஹி தெரிவித்ததாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெல்லட் குண்டுகளும், காஷ்மீர் இளைஞர்களின் இருண்டு போன வாழ்க்கையும்

மறுநாள் காலை ஸ்ரீநகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலக வாசலில், சுட்டுக்கொல்லப்பட்ட அதர் முஸ்தாக் மற்றும் இருவரின் உறவினர்கள், கொல்லப்பட்டவர்களின் உடலைக் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். ஆனால், காவல்துறையினர் உடல்களை தர மறுத்துள்ளனர்.

கொல்லப்படும் தீவிரவாதிகளின் உடல்களை உறவினர்களுக்கு வழங்குவதில்லை என்று, ஜம்மு காஷ்மீர் காவல்துறை புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. தீவிரவாதிகளின் உடலை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூடுவதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்தவகையில், சிறுவன் அதர் முஸ்தாக்கின் உடல், அவரின் சொந்த ஊரிலிருந்து 110 கி.மீ தொலைவில் உள்ள சோன்மார்க்கில், காவல்துறையினரால் புதைக்கப்பட்டதாக தி வயர் கூறுகிறது.

காஷ்மீர் கொள்கை: சர்வதேச இஸ்லாமிய அமைப்புக் கண்டனம்

அதர் முஸ்தாக்கின் தந்தை முஸ்தாக் வானி, தனது மகனின் உடலைப் பெற்று, தன்னுடைய மூதாதையரின் நிலத்தில் புதைப்பதற்காக, அதில் ஒரு குழியை வெட்டிவைத்துவிட்டு, மகனின் உடலுக்காக தொடர்ந்து போராடி வருவதாக தி வயர் தெரிவித்துள்ளது.

இதபோல், அதர் முஸ்தாக்குடன் சுட்டுக்கொல்லப்பட்ட மற்ற இருவரின் பெற்றோரும், தங்கள் மகன்களின் உடலை, தங்களிடம் தர வேண்டும் என்று போராடி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட மூவருக்கும், எந்தவித குற்றப் பின்னணியும் இல்லாத நிலையில், அவர்கள் நிரபராதிகள் என்று அவருடைய குடும்பத்தினர் கூறுகின்றனர். 11ஆம் வகுப்பு படித்து வந்த அதர் முஸ்தாக், ஏதுவும் அறியாத நிரபராதி என்று முஸ்தாக் வானி கூறுகிறார்.

ஆனால், என்கவுண்டர் நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த, காஷ்மீர் ஐஜி விஜய் குமார், சுட்டுக்கொல்லப்பட்டவர்களுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பது “60% உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

காஷ்மீர் – ஆபத்தான அமைதிக்கிடையே தொடரும் போராட்டம்

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று, தொழுகை முடிந்த பிறகு, தனது மகனின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரி முஸ்தாக் வானியும் மேலும் சிலரும் பேரணியாக சென்றுள்ளதாக, காவல்துறை தெரிவித்தது என்று தி வயர் கூறுகிறது.

இதைத்தொடர்ந்து, முஸ்தாக் வானி மற்றும் மேலும் ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சியின தலைவருமான மெஹ்பூபா முஃப்தி, தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முஸ்தாக் வானி உட்பட அந்த 7 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டம் பிரிவு 147 (கலவரம் செய்தல்), 341 (சட்டத்திற்குப் புறம்பாக தடுத்தல்), 153 (கலவரத்தை உருவாக்கும் நோக்கில், கோபத்தை தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழும், சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA) பிரிவு 13ன் கீழும் ராஜ்போரா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர்வாலா என்ற, உள்ளுர் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

“என் மகனுக்காக நீதி கேட்டு போராடுவதை நான் நிறுத்த வேண்டும் என்பதே அவர்களுக்கு வேண்டும். அவன் என்னுடைய ஒரே மகன், அவனுக்கு நீதி கேட்டு நடத்தும் போராட்டத்தில் உயிரே போனாலும் பரவாயில்லை” என்று முஸ்தாக் வானி, தி வயர் இணையதளத்தின் செய்தியாளர் ஜஹாங்கீர் அலியிடம், தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, காவல்துறை ஐஜி விஜய் குமார் மற்றும் டிஜிபி தில்பாக் சிங்கிடம் கருத்து கேட்க தி வயர் முயன்றதாகவும், ஆனால் அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்