டெல்லிக் கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் இஸ்ரத் ஜஹான் ஜாமீன் மனுவை டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வடகிழக்கு டெல்லிக் கலவரங்களில் தொடர்பிருப்பதாகக் குற்றம்சாட்டி இஸ்ரத் ஜஹானை பிப்ரவரி மாதம் குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டக் களம் ஒன்றில் கைது செய்தது டெல்லிக் காவல்துறை. இஸ்ரத் ஜஹான் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைதிற்குப் பிறகு, அந்த விசாரணை மிக பாரபட்சமாக நடத்தப்பட்டது எனும் செய்திகள் வெளியாகின. கடந்த ஜூன் மாதம், இஸ்ரத் ஜஹானின் திருமணத்திற்கு அவருக்குச் சில நாட்கள் மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டது.
இப்போது, மண்டோலி சிறையில் இருக்கும் இஸ்ரத் ஜஹான் உடல்நிலை மோசமாக இருப்பதனாலும், சிறையில் கொரோனா நோய் பரவி வருவதாலும் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை டெல்லி நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி அமிதாப் ராவத் விசாரித்தார். இஸ்ரத் ஜஹானுக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் ரமேஷ் குப்தா, இஸ்ரத் ஜஹான் முன்னரே முதுகு வலி மற்றும் ஒற்றைத் தலை வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவர் என்றார். இப்போது சிறைக் குளியலறையில் வழுக்கி விழுந்ததால் முதுகும் கர்ப்பப்பையும் காயமாகியிருப்பதாகவும் கூறினார். சிறையில் கொரோனா நோய் பரவி வருவது இஸ்ரத்தின் உடல் நலத்தைப் பாதிக்கும் வாய்ப்பிருப்பதாகவும, சிறையில் அடைக்கப்பட்டிருப்பது இஸ்ரத்தின் மன நலனை பாதித்துள்ளது என்றும் கூறி ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரினார்.
இதை எதிர்த்து வாதாடிய அரசு வழக்கறிஞர், ஜூன் 14, 2020ல் இஸ்ரத்திற்குக் கொடுக்கப்பட்ட மருந்து பரிந்துரை சீட்டை வைத்துப் பார்க்கும் போது, அவருக்கு அவசர மருத்துவ உதவிகள் எதுவும் தேவைப்படவில்லை என்பது தெரிகிறது என்றார். மேலும், டெல்லி திஹார் சிறையின் கண்காணிப்பாளர் கோவிட்-19 தொடர்பான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளும் சிறைகளில் எடுக்கப்பட்டு வருவதாகவும், கொரோனாவால் இஸ்ரத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது எனவும் தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி அமிதாப் ராவத், சட்ட விரோத நடவடிக்கை உட்பட பல கடுமையான குற்றங்கள் இஸ்ரத் மீது சுமத்தப்பட்டிருப்பதால், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்படாது என்று தீர்ப்பளித்தார்.
நேற்று (27.11.2020) ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோசாமி ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், நீதித்துறையின் அடிப்படை விதியே “பெயில் (ஜாமீன்) தான், ஜெயில் அல்ல” என்று, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தைக் குறித்து விரிவாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.