டிசம்பர் 31,2017 அன்று நடந்த எல்கார் மாநாட்டிற்கு பிறகு உடனடியாக, தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோர், இஸ்லாமியர்கள் மற்றும் மராத்தா அமைப்புகள் ஒருங்கிணைத்திருந்த பீமா கோரேகான் 200வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் விழாவையொட்டி, வயர் இணையதளத்திற்கு ஒரு பத்தி ஒன்றை எழுதினேன்.
பீமா கோரேகான் : புனைவு வரலாறாகும் ஆபத்து – ஆனந்த் டெல்டும்டே
தற்போது அதிகாரத்தில் இருக்கிற இந்துத்வத்தின் மக்கள் விரோத கொள்கைளுக்கு எதிராக கூட்டப்பட்ட மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக நானும் இருந்தேன். ஒரு மாதத்திற்கும் மேலான, தொடர்ச்சியான பிரச்சாரங்களுக்கும் அப்பால், நாக்பூர், சிரூர் மற்றும் மும்பையிலிருந்து சனிவார்வாடாவிலிருந்த மாநாட்டு திடல் வரையிலான நெடும்பயணத்தில் 30-35 பேர் வரை மட்டுமே பங்கெடுத்தார்கள் என்றே எனக்கு சொல்லப்பட்டது. ஜனவரி 1ம் தேதி பீமா கோரேகானில் லட்சக்கணக்கில் கூடும் போது, பேரணியில் இவ்வளவு குறைவான மக்கள் ஏன் வந்தார்கள்? புதிய பேஷ்வாசிசத்துக்கு எதிராக மக்களை தயார்படுத்துவதே நோக்கமென அறிவித்துக் கொண்ட மாநாட்டில், ஏற்கனவே பீமா-கோரேகானின் சதுப்பு நிலத்தில் கூடும் லட்சக்கணக்கான மக்களோடு சிலரை மட்டுமே அதிகமாக சேர்க்க முடிந்தது என்பதை ஒத்துக் கொள்வதே பெரும் அயர்ச்சியை தருவதாக இருந்தது. பீமா கோரேகான் போன்ற பகுதிகளுக்கும் அம்பேத்கருக்கும் உள்ள தொடர்புதான் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலான மக்கட்திரளை அவ்விடங்களுக்கு திரட்டி வருக்கிறது.
மேற்குறிப்பிட்ட அந்த கட்டுரைக்கு தீவிர நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. முக்கியமான முற்போக்காளர்களிடமிருந்து நேர்மறை விமர்சனங்கள் வந்தன என்றால், அடிப்படைவாத இந்துத்வவாதிகள் மற்றும் தலித்துகளிடமிருந்து கடுங்கோபமான , வசைபாடுகிற எதிர்மறை விமர்சனங்களே வந்தன. தலித்துகள் புனைவு என்று குறிப்பிட்டிருந்த பகுதியை எடுத்துக் கொண்டு, தங்கள் மன ஓட்டத்திற்கு ஏற்ப அந்த கட்டுரை அம்பேத்கருக்கு எதிரானது என்று முத்திரை குத்தினர். காஞ்சா அய்லயா போன்ற அறிவுஜீவுகளும் கூட அந்த முகாமில் தன்னை இணைத்து கொண்டு நான் எழுதியதை திரித்து, “ மகர் இராணுவ வீரர்களின் பங்களிப்பு தேச நலனுக்கானதில்லை என்று ஆனந்த் டெல்டும்டே கருதுகிறார்” என்று எழுதினார். ஆனால், நான் மேற்கண்ட கட்டுரையில், “இல்லாத தேசத்தின் கண்ணாடி வழியாக வரலாற்றை அணுகுவதும் சமமாக கண்டனத்திற்குரியதே” என்று எழுதியிருந்தேன். தரவுகளை பொறுத்தமட்டில் , எவ்வித குறிப்பான விமர்சனங்களும் வரவில்லை.
ஆனால், உணர்வுகள் மேலோங்கி இருக்கும் போது நியாயமான தர்க்கமும் செல்லுபடியாகாதே.
புனைவுக்கு பின்னே ஒளிந்திருக்கும் உண்மைகள்
மகர் இராணுவ வீரர்களின் வீரத்தை மட்டும் குறிப்பதற்கு மட்டுமல்ல பிரிட்டிஷாருக்கு அவர்களுடைய பேரரசை வென்று தந்தவர்கள் தலித்துகள் என்று வெளிப்படுத்தும் விதமாக பீமா கோரேகானில் ஸ்தூபி எழுந்து நிற்கிறது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துமில்லை. முதல் போரான 1757ம் ஆண்டு பிளாசி போரிலிருந்து, கடைசி போரான 1818ம் ஆண்டு பீமா கோரேகான் போர் வரையிலும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஈடுபட்ட பல்வேறு போர்களிலும், தலித் இராணுவ வீரர்கள் பெரிய பங்களிப்பைச் செய்தார்கள். ஆனால், 1892ம் ஆண்டு நன்றியுணர்ச்சியில்லாத பிரிட்டிஷார் தலித்துகள் போர் மரபினர் இல்லை என்று கூறி அவர்களை இராணுவத்தில் சேர்ப்பதை நிறுத்திக் கொண்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்றன. தலித் இயக்கத்தின் முன்னோடிகளான கோபால் பாபா வலாங்கர், சிவ்ராம் ஜன்பா காம்ப்ளே மற்றும் பி.ஆர்.அம்பேத்கரின் அவர்களின் தந்தை ராம்ஜி மாலோஜி சக்பால் ஆகியோர் கோரேகான் ஸ்தூபியை மேற்கோள் காண்பித்து தாங்களும் போர் மரபினர்தான் என்று வாதிட்டனர்.
ஆனால், பேஷ்வாக்களால் அவமானப்படுத்தப்பட்டதற்கு பழிவாங்குவதற்காகவே மகர்கள் போரிட்டனர் என்று கூறுவது ஒரு கற்பனை மட்டுமே. போர் நடைபெற்று 119 ஆண்டுகளுக்கு பிறகு 1927ம் ஆண்டு, 1 ஜனவரிதான் முதல் முறையாக ஸ்தூபியை வந்து பார்த்த அம்பேதகர், அதன் பிறகு பலமுறை வந்தார் என்று சொல்லப்படுகிறது. தம் முன்னோர்கள் பேஷ்வாக்களின் எதிரான போரில் எப்படி ஈடுபட்டார்களோ, அதேபோல பார்ப்பனியத்திற்கு எதிராக போராட வேண்டும் என்று ஊக்கமளிக்க அதை பயன்படுத்திக் கொண்டார். அதேபோல, 1927ம் ஆண்டில் நடைபெற்ற மகத் மாநாட்டில், தங்களுடைய முன்னோர்கள் எப்படி கற்றவர்களாக இருந்தார்களோ அதை போல தலித்துகள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்பின்பு, சாதி அடையாளத்தின் வரம்புகளை புரிந்து கொண்ட அம்பேத்கர் தன்னுடைய முழக்கத்தை விரிவாக்கி தலித்துகளை உள்ளடக்கிய தொழிலாளர்களையும், விவசாய கூலிகளையும் சுதந்திர தொழிலாளர் கட்சியின் கீழ் இணைத்துக் கொண்டார். 1990களில் அங்கே கூடத்தொடங்கியதற்கு முன்னும், பின்னும் பீமா கோரேகானை மறந்தேவிட்டிருந்தார்கள் என்ற உரைக்கும் உண்மை, தலித் அறிவுஜீவிகளின் தவறான ஊகங்களை ஆழமாகவே நமக்கு எடுத்துரைக்கிறது
அம்பேட்கரின் நினைவிடத்தில் தற்போதிருக்கும் ஸ்தூபியை அவரது மகன் 1967ல் எழுப்பும் வரை, தகனம் செய்யப்பட்ட இடத்தில் ஒரு சிறிய கட்டடம் கூட கட்டப்படவில்லை. 1965ல் பாராளுமன்றத்தில் அவரது படத்தை வைப்பதற்கு பெரிய அளவிலான சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்த அம்பேத்கர் 1960களுக்கு பிறகு முக்கியமான ஆளுமையாக மாறுகிறார். இதிலுள்ள தொடர்பை கண்டுபிடிப்பது ஒன்றும் கடினமான காரியமில்லை.
பின்காலனிய அரசியல் பொருளாதாரத்தால் மையநீரோட்டத்திலிருந்த சூத்திர சாதிகளிலிருந்து உருவான நகர்புற பணக்காரர்களின் மாநில கட்சிகளின் எழுச்சி, தேர்தல் அரசியலை மேலும் போட்டி மிகுந்ததாக மாற்றியது. தங்கள் இயக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவின் காரணமாக ஏக்கத்துடன் அம்பேத்கரை முன்னிலைப்படுத்தும் தலித்துகளை தம்வயப்படுத்த மிக நுட்பமாக ஆளும்வர்க்கத்தால் அம்பேட்கர் ஒரு ஆளுமையாக கட்டியெழுப்பட்டார்.
சைத்தன்ய பூமியில் டிசம்பர் 6 அன்று 1960வரை அவருடைய குடும்பத்தினர் உட்பட சில நூறு மக்கள் மட்டுமே மரியாதை செலுத்தி வந்த நிலைமை மாறி கிட்ட த்தட்ட 20 லட்சம் பேர் கூடும் நிகழ்வாக இன்று மாறியிருக்கிறது. சமகால அரசியல் சூழல்களினால் உந்தப்பட்டு அடையாளங்களில் மீதான பற்றுதல் மேலோங்கியதன் விளைவாக அம்பேட்கரை நினைவு கூற ஏராளமான ஒன்றுகூடல்கள் நடக்கின்றன.
( ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் வெவ்வேறு இடங்களில் கூடுகிறார்கள் என்ற கணிப்பின்படி, 500 கோடி ரூபாயை அந்த ஒன்றுகூடல்கள் விழுங்கிவிடுகின்றன. அந்தப் பணத்தின் மூலம் தலித்துகளுக்கு கடந்த ஆண்டுகளில் பல பல்கலைக்கழகங்கள் கிடைத்திருக்கும்)
பேஷ்வாயிசத்தின் உருவகம்
1990களிலிருந்து எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பிரம்மாண்ட ஒன்றுகூடல்கள் பீமா கோரேகானில் வருடாவருடம் நடந்தவண்ணம் இருக்கின்றன. தீடிரென்று இந்த ஆண்டு என்னவானது? தலித்துகள், இஸ்லாமியர்கள், மராத்தாக்கள் ஒன்று கூடுவதற்கான உள்ளடக்கம் கொண்ட ’புதிய பேஷ்வாசிய’ த்திற்கு எதிராக போராட விடுக்கப்பட்ட அறைகூவலில்தான் பதில் இருக்கிறது. அந்த அறைகூவலின் விளைவாக , மகாராஷ்டிராவில், தேர்தல் நெருங்கி வந்த சூழலில், ஆளும் பாஜகவுக்கு இது பெரிய தலைவலியாக மாற வாய்ப்பிருந்தது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற மராத்தாக்களின் போராட்டமானது ஒரு குறிப்பிட்ட கட்சியால் தூவப்பட்ட விதையாக இருந்தாலும், பலன்கள் எதிர்முகாமுக்கு போவதையும், தலித்துகளும், பிற்படுத்தப்பட்டோரும் எதிர்பக்கம் சாய்வதையும் அந்தக் கட்சியால் தடுக்க முடியவில்லை. மராத்தாக்கள் தலித்துகளோடு அணிசேர்ந்து அதிகாரத்தில் உள்ள பார்ப்பனிய பாஜகவை குறிவைப்பது என்று முடிவெடுத்தார்கள். ஆகையால், முளையிலேயே இந்த ஒற்றுமை கிள்ளி எறியப்பட வேண்டும் என்பதற்காக, பக்கத்திலுள்ள வடு புத்ருக் (Vadu Budruk) கிராமத்தின் சம்பாஜி நினைவிடத்தை முன்வைத்து மராத்தாக்களை தலித்துகளுக்கு எதிராக திருப்பிவிட, தங்களுடைய ஏஜெண்டுகளான சம்பாஜி பிடே மற்றும் மிலிந்த் எக்போதே ஆகியோரை ஏவினர்.
அவர்கள் , ‘சம்பாஜிக்கு இறுதி மரியாதை செய்தது ’கோவிந்த் மகாரி’ல்லை மாறாக அதை செய்தது ஒரு மராத்தா குடும்பம்‘ என்று வரலாற்றைத் திரித்துக் கூறினர். 2017ம் ஆண்டு டிசம்பர் 28ம் தேதி கோவிந்த் மகாரின் நினைவிடத்தை சேதப்படுத்தியதோடு, முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதோடு, 2018ம் ஆண்டு ஜனவரி 1க்கு திட்டமிட்டபடி தலித்துகள் மீது வன்முறையை ஏவினர். அரசின் பங்கு வெள்ளிடைமலையாக தெரிந்தது. குற்றவாளிகளுக்கு எதிராக பட்டியல்சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989ன் கீழ் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உலகுதழுவிய அளவில் அரசின் செயலற்ற தன்மை குறித்து விமர்சனங்கள் வந்தாலும், வன்முறையை தூண்டிய பேர்வழிகளை அரசு கைது செய்ய மறுத்தது. அதோடு மட்டுமில்லாமல், வன்முறைக்கு எதிராக மாநிலம் முழுவதிலும் 2018ம் ஆண்டு ஜனவரி 3 அன்று அமைதியான வழியிலான கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான தலித் இளைஞர்களை சுற்றி வளைத்தது.
ஒரு மகரின் கழுத்தில் எச்சிலை உமிழ கலயமும், காலடி தடத்தை துடைக்க பின்புறத்தில் கட்டப்பட்டிருக்கும் துடைப்பமும் பேஷ்வா ஆட்சியின் ஒடுக்குமுறையின், பார்ப்பனிய ஆட்சியின் பிரபல உருவகமாக முன்வைக்கப்படுகிறது. ( ரஸ்ஸல் 1916) புதிய பேஷ்வாயிசமானது தற்போதைய இந்துத்வ ஆட்சியை குறிக்கிறது. அதை மரபான சாதிய அமைப்பின் கண் வழியாக மட்டும் கண்டு இரண்டையும் சமன்படுத்த முடியாது. தன்னுடைய பாசிச உள்ளடக்கம் மற்றும் அதன் பரப்பை வைத்து மதிப்பிடும்போது பிந்தைய சமகால பேஷ்வாயிசம் முந்தைய பேஷ்வா ஆட்சியை விட நயவஞ்சகமானது.
இடது அறிவுஜீவிகள் அதன் பாசிசத்தன்மை குறித்து சண்டையிட்டுக் கொண்டாலும், 1920-30களில் ஐரோப்பாவில் எழுந்த பாசிச ஆட்சிகளைவிட கொடூரமானதாக இருக்கும். பல கிளைகளாக பரந்து விரிந்திருக்கும் அமைப்பு, பார்ப்பனிய சித்தாந்தம் ( உலகத்தின் மிக பழமையான சமத்துவத்திற்கு எதிரான சித்தாந்தம்), சர்வதேச மூலதனத்தின் ஆதரவு, சாதகமான அரசியல் சூழல்கள் ஆகியவை இணைந்து நிற்கும் போது இத்தாலியின் முசோலினி, ஜெர்மனியின் ஹிட்லரை விட அபாயமானதாக மாறும் வாய்ப்பிருக்கிறது. இந்துத்வத்தின் அசலான எதிர் சக்தி என்கிற வகையில் தலித்துகளுக்கு மிகப்பாதகமானதாக அமையும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தலித்துகளின் இறுதி லட்சியம்
கெடுவாய்ப்பாக தலித்துகளுக்கு பாசிசம், ஏகாதிபத்தியம் ஆகியவை அந்நியமான கம்யூனிஸ்டுகளின் முழக்கமாக இருக்கிறது. அவர்களுடைய இறுதி லட்சியமான சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுதான். ஆனால், இந்த போராட்டத்தின் தன்மை என்ன? அமைப்பை தலைகீழாக மாற்றுவதா அல்லது சாதியை மொத்தமாக அழித்தொழிப்பதா?
அடையாளங்களை பற்றிய முணுமுணுப்பை உற்று நோக்கினால், தலித்துகள் ஆளும் வர்க்கமாக மாற வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னதை, சாதி அமைப்புக்குள் என்று வரம்பிட்டுக் கொண்டதாகவே தெரிகிறது. இவ்வாறான புரிதலென்பது சாதி அமைப்பின் அடிப்படை கூறான படிநிலை என்ற பண்பை நிராகரிப்பதாகவே இருக்கிறது. அம்பேத்கர் கட்டமைத்த லட்சியவாத தலித் என்ற சட்டகத்தின் கீழ் அனைத்து தலித் சாதிகளை ஒன்றிணைக்க முடியாமல், அவை துண்டுதுண்டாக பிளவுபடுவதே இதற்கு சான்று. சாதியை அடிப்படையாக கொண்ட எந்த அமைப்பும் பெருந்திரளான மக்களின் ஒற்றுமையை சாத்தியப்படுத்தாது. ஆளும் வர்க்கமாக மாற வேண்டும் என்ற விருப்பம் மேல்நோக்கி வளர்ந்திருக்கிற தலித்துகளில் ஒரு பிரிவினருக்கு ஊக்கமாக இருக்கலாம், ஆனால், அது ஒரு மாயத்தோற்றம்தான்.
தற்போதைக்கு, இந்த நாட்டை பொறுத்தமட்டில், அம்பேத்கர் வகுத்துக் கொடுத்த சாதி ஒழிப்பு லட்சியம்தான் தலித்துகளின் உண்மையான இலக்காக இருக்க முடியும். சாதியின் வேர் இந்து மதத்தின் தர்மசாஸ்திர நூல்களில் இருக்கிறது என்று கண்டு கொண்டவர், அதை அழித்தொழிக்க இந்துக்கள் ஒருபோதும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்ற காரணத்தினால், இந்து மதத்தை விட்டு வெளியேறி பௌத்தம் தழுவினார். இந்தத் தீர்வின் வரம்புக்கு அப்பால், தலித்துகளால் மட்டும் என்றைக்கும் சாதியை ஒழிக்க முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அம்பேட்கரின் ஆய்வில் வெளிப்பட்டதை போன்று இன்றைக்கு சாதிகள் என்பவை பாரம்பரிய சாதி அமைப்பு மட்டுமல்ல, சமகாலத்தில் தீவிரமாக செல்வாக்கு செலுத்தும் வர்க்கங்களோடு முழுமையாக பின்னி பிணைந்தவை ஆகும். பின்காலனிய ஆளும் வர்க்கங்களால், தலித்துகள் புனிதமாக கருதும் அரசியல் சாசனத்தின்படியே போதுமான கட்டமைப்பு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
சாதி மற்றும் வர்க்கங்களால் ஆன இந்த சிலந்திவலையை, வர்க்கரீதியான ஒற்றுமையை அடிப்படையாக கொண்ட போராட்டங்களால் மட்டுமே அறுத்தெரிய முடியும்.
என்னுடைய இந்தக் கருத்தில் ஏதேனும் தெய்வ குத்தம் நேர்ந்துவிட்டதாக யாரேனும் கருதினால், அவர்களுக்காக அம்பேத்கரின் சொந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டுகிறேன்.
”எந்த ஒரு மாமனிதனும் தன் மூதுரைகளையும் முடிவுகளையும் வலுக்கட்டாயமாகப் புகட்டி தன் சீடர்களின் சிந்தனையை முடமாக்கும் பணியில் ஈடுபடுவதில்லை. அவன் செய்வது என்ன? அவர்களின் சிந்தனையைத் தூண்டி விடுகிறான். மாணாக்கன் தன் ஆசானின் அறிவுரையை மாத்திரமே ஏற்கிறான். ஆசானின் தீர்மானங்களை அப்படியே ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் என்பதில்லை.
ஆசானின் கோட்பாடுகளையோ அல்லது அவரது முடிவுகளையோ சீடன் ஏற்காவிடின் அது நன்றி கெட்டதனமாகாது. ஏனெனில் அவற்றை ஏற்காமற் போனாலும் “ஐயனே! என்னை நானாக உணரச் செய்தீர்கள்; அதற்காக தங்களுக்கு என் நன்றி” என்று ஆசானுக்கு ஆழ்ந்த வணக்கம் செலுத்துகிறான். இதனால், ஆசானுக்கு குறைவேதும் இல்லை; சீடன் இதை விட அதிகமாக ஏதும் தரக் கடமைப்பட்டவனல்ல.”
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.