Aran Sei

மாட்டிறைச்சியே சிந்து சமவெளி மக்களின் விருப்ப உணவு – கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வில் தகவல்

சிந்து சமவெளி நாகரீக காலத்தைச் சேர்ந்த பீங்கான் பாத்திரத்தில், கால்நடைகள் மற்றும் எருமை மாட்டின் இறைச்சி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஜர்னல் ஆஃப் ஆர்க்கியாலஜிகல் சயின்ஸ் இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தில் உள்ள, 4600 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரீக காலத்தை சேர்ந்த, 7 இடங்களில் இந்த மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கேம்பிரிட்ஜ் பல்லைக்கழகம் மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டதாகவும், தொல்பொருள் ஆய்வு தளங்களில் கண்ணெடுக்கப்பட்ட பழங்கால மண்பாண்டங்களில் உள்ள உயிரிப்பொருளின் எச்சத்தை அவர்கள் ஆராய்ந்ததாகவும் தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

அதில், சிந்து சமவெளி நாகரீக பகுதியில் கண்டுக்கப்பட்ட 50 முதல் 60 சதவீத எலும்புகள், கால்நடைகள் மற்றும் எருமை மாட்டின் எலும்புகள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

“அதிக அளவில் கால்நடைகளின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, சிந்து சமவெளி நாகரீக மக்களிடையே, மாட்டிறைச்சி உற்கொள்ளவது கலாச்சர விருப்பமாக இருந்ததையும் அதற்கு அடுத்தபடியாக ஆட்டிறைச்சியை அவர்கள் உட்கொண்டதையும் காட்டுகிறது” என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பீங்கான் பாத்திரத்தில் உள்ள உயிரி எச்சங்களை நாங்கள் ஆராய்ந்தபோது, அசைபோடா விலங்கினமான பன்றி மற்றும் அசை போடும் விலங்குகளான எருமை, செம்மறியாடு, வெள்ளாடு ஆகியவற்றின் இறைச்சியும், பால் பொருட்களும் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த ஆய்வின் தலைவரான அக்ஷைதா சூர்யநாராயணன் கூறியுள்ளார்.

மண்பாண்டங்களால் உறிஞ்சப்பட்ட கொழுப்பு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை பிரித்தெடுத்து உயிரி பகுப்பாய் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

“உயிரி எச்சங்கள் அவ்வளவு சீக்கிரமாக அழிந்து போகாது. உலகம் முழுவதும் இதுபோன்ற தொல்பொருள் ஆய்வுத் தளங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள மண்பாண்டங்களில் இதுபோன்ற எச்சங்கள் கிடைத்துள்ளன. ஆனால் தெற்காசியாவில் இந்த பழங்கால மண்பாண்டங்கள் மிகவும் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளன” என்று அக்ஷைதா தெரிவித்துள்ளார்.

மண்பாண்டங்களால் உறிஞ்சப்பட்ட உயிரி எச்சங்களை ஆராய்வது இதுவே முதல்முறை என்று கூறியள்ள அக்ஷைதா, ராக்கிகாரி, ஃபர்மனா, மசூத்பூர் உட்பட பல்வேறு இடங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.

இது குறித்து தி இந்து – விடம் பேசியுள்ள அக்ஷைதா, சிந்து சமவெளி நகரீக பகுதிகளில் அதிப்படியாக விலங்குகளின் எலும்புகள் கிடைத்திருந்தாலும், இந்த ஆய்வில் பால் பொருட்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் குறைந்த அளவே கிடைத்துள்ளன என்று கூறியுள்ளார். அதேநேரம் குஜராத் பகுதியில் கிடைத்துள்ள மண்பாண்டங்களில் பால் பொருட்கள் இருந்ததற்காக ஆதரங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள அக்ஷைதா, பகுதிவாரியாக வேறுபாடுகள் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்