Aran Sei

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

2017 ம் ஆண்டில் உ.பி.யில் மக்களை பிளவுப்படுத்தும் தேர்தல் பரப்புரை நடந்தபோது, நிலைமையை தீவிரப்படுத்த இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி களத்தில் இறங்கினார். ஒரு பரப்புரை மேடையில்,” எதிர்கட்சி தலைமையிலான மாநில அரசு இந்து சுடுகாடுகளைவிட (ஷம்ஷான்கள்) விட முஸ்லீம் மயானங்களுக்கு( கப்ரிஸ்தான்களுக்கு) அதிக செலவு செய்வதன் மூலம் முஸ்லீம் சமூகத்திற்கு இடையூறு விளைவிக்கிறார்கள்,” என குற்றம் சாட்டினார். வழக்கமான பரிகாசத்துடன் கூடிய காட்டு கூச்சல்களுக்கிடையே, வாக்கியங்களுக்கிடையே விழும் ஒவ்வொரு பழி சொல்லும், கொடுக்காகக் கொட்டும் சொற்களும், உச்ச ஸ்தாயில் மேலெழுந்து, அபாயகரமான எதிரொலியாக விழும் வகையில் கூட்டத்தைத் தூண்டினார்.

” ஒரு சுடுகாடு கட்டப்பட்டால் அங்கு ஒரு ஷம்ஷானும் கட்டப்பட வேண்டும்,” என்றார்.

மயங்கிய அடிமைகள் கூட்டமோ ” சுடுகாடு! சுடுகாடு!” என்று மீண்டும் எதிரொலித்தது.

இன்னும் சொல்லப் போனால், இந்தியாவின் சுடுகாட்டு மேடைகளில் கொத்து, கொத்தாக நடைபெறும் இறுதி சடங்குகளில் இருந்து எழும் தீப்பிழம்புகளின் அச்சுறுத்தும் பிம்பங்கள் உலகச் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தை நிரப்புவதைக் கண்டும், அனைத்து கப்ரிஸ்தான்களும், ஷம்ஷான்களும் மக்கள் தொகைக்கு ஏற்ப நேர்விகிதத்திலும், கொள்ளளவை மீறியும் நிரம்பி வழிந்து முழுத்திறனோடு செயல்படுவதையும் கண்டு இப்போது அவர் மகிழ்ச்சி அடையலாம்.

தேசிய எல்லைக்குள் அதிவிரைவாக பரவும், புதிய உருமாறிய கோவிட் வைரஸை கட்டுப்படுத்துவதில் உள்ள சிரமம் குறித்து  வாஷிங்டன் போஸ்ட், ” இந்தியாவின் 130 கோடி மக்களையும் தனிமைப்படுத்த முடியுமா?” என்று தன்னுடைய தலையங்கத்தில் கேள்வி கேட்டு, “அவ்வளவு எளிதில்லை” என்று அதுவே பதிலளிக்கிறது. சில மாதங்களுக்கு முன் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேக பாய்ச்சலில் பரவிக் கொண்டிருந்தபோது,  இந்தக் கேள்வி இதே தொனியில் எழுப்பப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

ஆனால், இந்த ஆண்டு ஜனவரியில் உலக பொருளாதார மன்றத்தில் நமது பிரதமரின் வாய்வீச்சை கருத்தில் கொண்டால்,  பத்திரிகைகளின் இந்த அணுகுமுறையை கண்டு கோபம் கொள்ள நமக்கு தார்மீக உரிமையில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் மக்கள் கொரோனா தொற்று நோயின் இரண்டாவது அலையின் உச்சத்தில் துயரப்பட்டு கொண்டிருந்த போது பேசிய மோடி அந்த மக்களுக்கு சிறிய அனுதாபத்தை கூட தெரிவிக்காமல், கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவின் உள்கட்டமைப்பு தயார்நிலையில் உள்ளதென நீண்ட நெடிய பெருமித தம்பட்டத்தை நிகழ்த்திக் காட்டினார்.  ஆனால்,  மோடியின் ஆட்சியில் வரலாறு மாற்றி எழுதப்படவும், அழிக்கப்படவும், காணாமல் ஆக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நான் அஞ்சியதால்  அந்த உரையை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டேன்.

சில விலைமதிப்பற்ற துணுக்குகளை இங்கே தருகிறேன்:

“நண்பர்களே! இந்த அச்சுறுத்தும் சூழலில், 130 கோடி இந்திய மக்களிடமிருந்து உறுதிப்பாடு, நேர்மறை சிந்தனை மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் செய்தியைக் நான் கொண்டு வந்திருக்கிறேன். உலகிலேயே இந்தியாதான் கொரோனாவால் மிகவும் அதிக பாதிப்பிற்குள்ளாகும் நாடாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா தொற்று சுனாமியாக இருக்கும் எனவும். 70-80 கோடி இந்தியர்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுவர் என்றும் சிலர் கூறினர். இன்னும் சிலர், 2 கோடி பேர் மரணத்தை தழுவ நேரிடும் என்று எச்சரித்தனர்.”

” நண்பர்களே! இந்தியாவின் வெற்றியை வேறொரு நாட்டு வெற்றியுடன் ஒப்பிட்டு தீர்மானிப்பது ஏற்கத்தக்கதல்ல. உலக மக்கள் தொகையில் 18% கொண்டிருக்கும் ஒரு நாடு கொரோனாவைத் திறம்படக் கையாண்டிருப்பதன் மூலம் மனித குலத்தை ஒரு பெரிய பேரழிவிலிருந்துக் காப்பாற்றி உள்ளது….”

ஒரு மந்திரவாதியை போல கொரோனாவை கட்டுப்படுத்தி உலகை காப்பாற்றினேன் என்றபடி மோடி அந்த பெருமையை தானே ஏற்றுக் கொண்டார். ஆனால், எதார்த்தத்தில் அவர் அவ்வாறு கட்டுப்படுத்தவில்லை என்ற உண்மை வெளிப்படும் போது,

(இந்திய) மக்களாகிய நாமே தொற்றுக்கான ஊற்றென கருதப்படுவதை பற்றி புகார் கூற முடியுமா?

மற்ற நாடுகளின் எல்லைகள் நமக்கு மூடப்பட்டதையும், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதையும் குறை கூற முடியுமா?

வைரஸோடு மட்டுமில்லாமல் பிரதமர், எல்லாவிதமான நோய்க்கூறுகள், அறிவியல் விரோதம் மற்றும் அவரும் அவரது கட்சிக்காரர்களும் பிரநித்துவப்படுத்தும் வெறுப்பும் மூடத்தனமும் என பல்வேறு முனைகளில் நாம் கட்டி வைக்கப்பட்டிருப்பதை பற்றி புகார் கூற முடியுமா?

சென்ற ஆண்டு கோவிட் முதல் அலை இந்தியாவிற்குள் வந்த போதும், பின்னர் அது கடந்த ஆண்டு தணிந்த போதும் நமது அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவு வருணனை சேனைகள் வெற்றிகரமாக இயங்கின. ” இந்தியா விடுமுறையில் இல்லை,” என ட்வீட் செய்த தி பிரிண்ட் செய்தி தளத்தின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா  ” ஆனால் நமது கால்வாய்கள்மனித பிணங்களால் நிறைந்திருக்கவில்லை, மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை இல்லை,  சுடுகாடுகளிலும், இடுகாடுகளிலும் பிணங்க எரிக்க விறகோ, புதைக்க இடமோ தட்டுப்பாடு ஏற்படவில்லை. உண்மையாக இருப்பது அதீத நல்ல பண்பாக இருக்கிறதா? முரண்படுகிறவர்கள் தங்களை கடவுளாக கருதாவிடில் தரவுகளை கொண்டு வரலாம்.

https://mobile.twitter.com/ShekharGupta/status/1251381206827950081

இரக்கமற்ற, அவமரியாதைக்குரிய கற்பனைச் சித்திரங்களை ஒதுக்கி விடுங்கள்.  பேரிடர் காலத்தில் இரண்டாவது அலை உண்டென சுட்டிக்காட்ட கடவுளா நமக்கு தேவைப்பட்டார். தொற்றின் தீவிரம் அறிவியலாளர்களையும், நச்சு உயிரியல்(Virology) வல்லுனர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது என்றாலும் இது ஏற்கனவே முன் அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான்.

மோடி தமது உரையில் பெருமையாக தம்பட்டம் அடித்துக் கொண்ட  கோவிட்டுக்கு எதிரான உள்கட்டமைப்பு மற்றும் ’வைரஸூக்கு எதிரான மக்கள் இயக்கம்’ எங்கே?

மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை. மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் உடைந்துவிடும் சூழலில் இருக்கிறார்கள்.  ஊழியர்கள் இல்லாத வார்டுகள், உயிருடன் இருப்பவர்களைவிட அதிக எண்ணிக்கையில் இறந்தவர்கள் என பல்வேறு அவலக்கதைகளோடு நண்பர்கள் அழைத்தபடியே இருக்கிறார்கள்.  மக்கள் மருத்துவமனை தாழ்வாரங்களிலும், சாலைகளிலும், வீடுகளிலும் இறந்து கொண்டிருக்கின்றனர். தில்லியில் உள்ள சுடுகாடுகளில் உடல்களை எரிக்க போதுமான விறகுகள் இல்லை. வனத்துறை நகரத்தில் உள்ள மரங்களை வெட்டிக்கொள்ள சிறப்பு அனுமதி அளிக்க வேண்டி உள்ளது. கிடைக்கும் எதையும் பயன்படுத்திக் கொள்ளும் விரக்தி நிலையில் மக்கள் இருக்கிறார்கள். பூங்காக்களும், வாகனங்கள் நிறுத்துமிடங்களும் சுடுகாடுகளாக மாறி உள்ளன.

அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுகள் நமது நுரையீரல்களிலிருந்து காற்றை உறிஞ்சி எடுப்பதை போன்ற சூழல் நிலவுகிறது. இதுவரை காலமும் நாம் கற்பனை செய்திராத வான்வெளி தாக்குதலாக இது இருக்கிறது.

துயரங்களை விலை பேசும் புதிய  இந்திய பங்குச்சந்தையில்  ஆக்சிஜன் புதுவகை பணமாக உருமாற்றமடைந்திருக்கிறது. மூத்த அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் – உள்ளிட்ட இந்திய எலைட் பிரிவினர் –  ட்வீட்டரில் மருத்துவமனை படுக்கைகளுக்காகவும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காகவும் கெஞ்சியபடி இருக்கின்றனர். ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான கள்ளச்சந்தை கொழுத்து பெருக்கிறது. ஆக்சிஜன்  அளவை அளக்கும் கருவிகளும், மருந்துகளும் கிடைப்பது கடினமாக மாறியபடி இருக்கிறது.

இதர பொருட்களுக்கும் சந்தையில் மதிப்பு இருக்கிறதுதான். சுதந்திர சந்தையின் அடிமட்டத்தில், மருத்துவமனை பிணவறையில் துணியால் சுருட்டி அடுக்கி வைக்கப்பட்டுள்ள உங்கள் அன்புக்குரிய உறவினர்களை ஒரு முறை எட்டிப் பார்க்க லஞ்சம் தேவைப்படுகிறது. இறுதி யாத்திரை மந்திரங்களை ஓத மேலதிக கட்டணத்தை சாமியார்களுக்கு செலுத்த வேண்டி இருக்கிறது. ஆன்லைன் ஆலோசனைகள் என்கிற பெயரில் ஈவிரக்கமற்ற மருத்துவர்கள் , செய்வதறியாது தவிக்கும் குடும்பங்களிடம் நடத்தும் கொள்ளைகள் தவிர்க்க முடியாதததாகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக,  ஒரு தனியார் மருத்துவமனையின் சிகிச்சைக்காக, உங்கள் நிலம், வீடு அனைத்தையும் விற்று, கடைசி காலணா வரைக்கும் ஒட்ட சுரண்டி செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம். அட்மிட் செய்து கொள்ள ஒப்புக் கொள்ளும் முன்னரே வைப்புத் தொகை மட்டும் கட்டியே இரண்டு தலைமுறை பின் செல்ல வாய்ப்பிருக்கிறது.

இவை எதுவும் மக்கள் எதிர்கொள்ளும் அதிர்ச்சி, குழப்பம், அவமரியாதை  என எவற்றையும் முழுமையாக வெளிப்படுத்தும் திறன்பெற்றவை அல்ல.

தில்லியில் மட்டுமே ஆயிரக்கணக்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களில் நூற்றில் ஒன்றாக எனது இளைய நண்பர்  T எதிர்கொண்ட அனுபவம் இருக்கலாம்.

20 வயதாகும் அவர், தில்லியின் புறநகர் பகுதியில் காசியாபாத்தில் ஒரு சிறிய வீட்டில், தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அவர்கள் மூன்று பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. அவருடைய தாயார் மிகவும் மோசமான உடல்நிலையில் இருந்தார். அது துவக்கக் காலமாக இருந்ததால் அவருக்கு மருத்துவமனையில் எளிதாக படுக்கைக் கிடைத்தது. தீவிர இருதுருவ மனக் கோளாறால் (bipolar depression) பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தை, தன்னையே கடுமையாக துன்புறுத்திக் கொள்வதோடு, தூங்குவதையும் நிறுத்தி கொள்கிறார். தன்னையறியாமல் மலம் கழிக்கலானார். அவரது மனநல மருத்துவர் ஆன்லைனில் அவரது உதவி வந்தார். அந்த மருத்துவரும் தன்னுடைய கணவரை கொரோனா தொற்றுக்கு இழந்த காரணத்தினால், அவரும் அவ்வப்போது உடைந்து  போனார்.  அவர் அந்த இளைஞரிடம் அவரது  தந்தையை மருத்துவமனையில் சேர்க்க  வலியுறுத்தினார். ஆனால், தந்தைக்கு கொரோனா தொற்று இருந்த காரணத்தினால்,  மருத்துவமனையில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை.  ஆகையால்,  அந்த இளைஞர் பகலிரவாக விழித்திருந்து தந்தையைப் கவனித்துக் கொண்டார். உடலைத் துடைப்பது, சுத்தம் செய்வது என இருந்தார். ஒவ்வொரு முறை அவரோடு பேசும் போதும் எனக்கே என்  மூச்சு தடைபடுவதை போல உணர்ந்தேன். இறுதியாக அந்த செய்தி வந்தது: ‘அப்பா இறந்து விட்டார்’. அவர் கொரோனாவால் இறக்கவில்லை. உதவிக்கு யாருமில்லாத நிலையால் ஏற்பட்ட மனநிலை அழுத்தத்தால் உருவான, உயர் இரத்த அழுத்தத்தால் அவர் இறந்து போனார்.

அந்த உடலை வைத்துக் கொண்டு என்ன செய்வது? நான் விடாமுயற்சியுடன் எனக்குத் தெரிந்த அனைவரையும் அழைத்தேன். அவர்களில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஹர்ஷ் மந்தர் என்பவருடன் பணியாற்றும் அனிர்பென் பட்டாச்சார்யா பதிலளித்தார். 2016 ல் தனது பல்கலைக்கழகத்தில் ஒரு போராட்டத்திற்கு ஏற்பாடு செய்ததற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு அது விசாரணையில் உள்ளது. கடந்து ஆண்டு பீடித்த கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக உடல்நலம் பெற்றிராத மந்தரை, கடந்த 2020 டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட, அப்பட்டமாக முஸ்லீம்கள் மீது பாகுபாடு காட்டுவதாக இருந்த சிஏஏ மற்றும் என்ஆர்சி க்கு எதிராக மக்களைத் திரட்டியதற்காக கைது செய்யப் போவதாகவும், அவர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தை மூட வேண்டும் என்றும் அச்சுறுத்தப்பட்டார்.

அனைத்து நிர்வாக அமைப்புகளும் செயலற்று போகும் போது மந்தரும், பட்டாச்சார்யாவும் உதவி மையங்களையும், அவசரகால உதவி நிலையங்களையும் பலருடன் சேர்ந்து அமைப்பர். அவர்களே களத்தில் இறங்கி மருத்துவ வாகனங்களை ஏற்பாடு செய்வது, இறுதி சடங்குகளை ஒன்றிணைப்பது, இறந்த உடல்களை எடுத்துச் செல்வது ஆகிய பணிகளைத் தீவிரமாக செய்தனர். இந்த கொரோனா அலையில் இளைஞர்கள்தான் தொற்றுக்கு வீழ்ந்து,  அவசர சிகிச்சைப் பிரிவுகளை நிரப்புகிற சூழலில், இந்த இளம் தன்னார்வலர்களின் களப்பணி அவர்களுக்கே பாதுகாப்பானது அல்ல. . இளைஞர்கள் மரணத்தை தழுவ்கிற போது, நம்மிடையே இருக்கும் முதியோர்களுக்கு உயிர்வாழ்வதற்கான ஆசை சற்றே குறைகிறது.

அந்த இளைஞரின் தந்தையின் உடல் எரியூட்டப்பட்டுவிட்டது. அவரும் அவரது தாயும் உடல் நலம் தேறி வருகிறார்கள்.

இவையாவும்  ஒரு முடிவுக்கு வரும். நிதானமாகும். ஆனால் அந்த நாளைப் பார்க்க நம்மில் யாரெல்லாம் உயிரோடு இருப்போம் என்பது நமக்கு தெரியாது. அப்போது,  பணக்காரர்களுக்கு மூச்சு விடுவது எளிதாக இருக்கும். ஏழைகளுக்குதான் மூச்சு முட்டும்.

இப்போதைக்கு நோய்வாய்ப் பட்டவர்களுக்கும், இறப்பவர்களுக்குமிடையே கொஞ்சம் ஜனநாயகம் எஞ்சி உள்ளது. பணக்காரர்களும் இதில் இருக்கிறார்கள். மருத்துவமனைகள் ஆக்சிஜனுக்காக கெஞ்சியபடி இருக்கின்றன. சிலர் உங்கள் ‘சொந்த ஆக்சிஜனை’ கொண்டு வாருங்கள் என்ற திட்டத்தை முன்வைத்துள்ளனர். இந்த ஆக்சிஜன் நெருக்கடி மாநிலங்களுக்கிடையே  சமமற்றப் போட்டி தீவிரமாக்கியிருக்கிறது. அரசியல் கட்சிகள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்ப முயன்று வருகின்றன.

ஏப்ரல் 22 ம் நாள் இரவு தில்லியின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றான சர். கங்காராம் மருத்துவமனையில், அதி வேக ஆக்சிஜன் ஆதரவில் சிகிச்சை பெற்று வந்த 25 கொரோனா நோயாளிகள்  உயிரிழந்தனர். அந்த மருத்துவமனை ஆக்சிஜன் நிலையை சரிசெய்ய பல ’உயிர்காக்கும் அழைப்பு(SOS)’ செய்திகளை அனுப்பியது.

ஒரு நாள் கழித்து, மருத்துவமனையின் தலைவர்  “அவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தார்கள் என்று கூற முடியாது,” என்று அவசரகதியில் விளக்கமளித்தார். ஏப்ரல் 24 ல் இன்னொரு பெரிய மருத்துவமனையான ஜெய்பூர் கோல்டனில் மேலும் 20 நோயாளிகள் ஆக்சிஜன் தீர்ந்து போனதால் இறந்து போயினர். அதே நாளில், அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தில்லி உயர்நீதிமன்றத்தில் , “நாம் தொட்டால் சிணுங்கும் குழந்தையாக மாறாமல் இருக்க முயற்சி செய்வோம்…இதுவரையிலும், யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்திருக்கிறோம்” என்று அரசாங்கத்திற்காக வாதிட்டார்.

யோகி ஆதித்யநாத் என்று அறியப்படும், காவி உடை தரித்திருக்கும் அஜய் மோகன் பிஷ்ட் என்ற உத்திரபிரதேச முதலமைச்சர், தனது மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதே இல்லை என்றும், வதந்திகளைப் பரப்புபவர்கள் பிணையின்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, அவர்களுடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்தார். (மிரட்டினார்)

யோகி ஆதித்யநாத் சொல்வதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது.  ஹத்ராஸில் தலித் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, கொலை செய்யப்பட்டது குறித்து  தன்னோடு மேலும் இருவரை சேர்த்துக் கொண்டு செய்தி சேகரிக்க சென்ற கேரளத்தின் ஊடகவியலாளர் சித்திக் கப்பான் உ.பி. அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது கடுமையாக நோய்வாய்பட்டிருப்பதுடன் கோவிட் தொற்றும் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மனைவி இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவில் தன் கணவர் மதுராவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் படுக்கையில் “மிருகத்தை போல” சங்கிலியால் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். (உச்சநீதிமன்றம் அவரை தில்லி மருத்துவமனைக்கு மாற்ற உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.)

சித்திக் காப்பான் மரணமடைய நேரிடும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள சித்திக்கின் மனைவி

எனவே, ”நீங்கள் உ.பி.யில் வாழ்பவராக இருந்தால், உங்களுக்கு சுய உதவி செய்து கொள்ளுங்கள். மேலும் புகார் எதுவும் கூறாமல் செத்தொழியுங்கள்” என்றே அங்கே போதிக்கப்படுவதாக உணர முடிகிறது.

இந்த அச்சுறுத்தல் உத்திரப்பிரதேசத்தோடு முடிவதில்லை. மோடியும் அவரது பல அமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ள, பாசிச இந்து தேசியவாத அமைப்பான, சொந்தமாக ஆயுதம் தாங்கிய படையை கொண்டிருக்கும், ஆர்எஸ் எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் ஒருவர் ‘தேச விரோத சக்திகள்’ இந்த நெருக்கடியை பயன்படுத்தி ‘எதிர்மறைக் கருத்துக்களையும்’, ‘அவநம்பிக்கையையும்’ பரப்புவார்கள் என்று எச்சரித்ததோடு,  ஊடகங்கள் ‘நேர்மறை சூழலை’ உருவாக்க உதவ வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டார்  அரசை விமர்சிக்கும் கணக்குகளை முடக்கி ட்வீட்டரும் அவர்களுக்கு உதவியது.

இந்த அவலத்திற்கு ஆறுதலை நாம் எங்கே தேடுவது? அறிவியலுக்காக? எண்களைப் பிடித்துத் தொங்கலாமா? எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை பேர் மீண்டார்கள்? எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்? எப்போது உச்சநிலை வரும்?

ஏப்ரல் 27 ல், 3,23,144 பேர் புதிதாக நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் என்றும், 2,771 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. துல்லியம் மட்டுமே நம்மை ஓரளவு ஆற்றுப்படுத்தும். ஆனால், அதை நாம் எப்படி சரிபார்ப்பது. தில்லியிலே கூட சோதனைகள் அரிதாகவே நடக்கின்றன. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி ,சிற்றூர்கள் மற்றும் நகரங்களின் சுடுகாடுகள் மற்றும் எரியூட்டு மேடைகளில் நடக்கும் இறுதி சடங்குகளின் எண்ணிக்கை பற்றிய விபரங்கள் அரசு தரும் எண்ணிக்கையை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறுகிறது. மாநகர எல்லைகளுக்கு அப்பால் பணி புரியும் மருத்துவர்கள் இதை தெளிவாக விளக்குவார்கள்.

தில்லியிலேயே இந்த நிலை என்றால் பீகாரின், மத்தியப் பிரதேசத்தின், உத்திரப்பிரதேசத்தின் கிராமங்களில் என்ன நடக்கும் என்பதை பற்றி நினைத்துப் பாருங்கள்.

வெறும் நான்கு மணி நேர இடைவெளியில் முன்னறிவிப்பின்றி அறிவிக்கப்பட்ட மோடியின் 2020ம் ஆண்டு ஊரடங்கு,  வாடகை செலுத்துவதற்கு கூட பணமில்லாமல், உண்ண உணவில்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல் புலம்பெயர் தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது.  நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த தங்கள் வீடுகளுக்கு கால் நடையாகவே சென்ற தொழிலாளிகளின் நூற்றுக்கணக்கானோர் வழியிலேயே  உயிரை விட்டனர். அந்த  உத்தரவின் அதிர்ச்சியூட்டும் நினைவுகளால் பீதியுற்று,  இந்த வைரஸை சுமந்து கொண்டு, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களிலிருந்து, தங்கள் குடும்பத்தினர் வாழும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

இம்முறை தேசிய ஊரடங்கு இல்லை. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து வசதி இன்னும் இயங்கி கொண்டிருப்பதால் அவர்கள் கிளம்பி சென்றுவிட்டனர்.

இந்த மிகப் பெரிய நாட்டின் பொருளாதார இயந்திரத்தை இயக்குவது அவர்கள்தான் என்றாலும், ஒரு நெருக்கடி  சூழந்தால்,  இந்த நாட்டின்  நிர்வாகத்தின் கண்களுக்கு இவர்கள் தென்படவே மாட்டார்கள் என்பதை நன்குணர்ந்திருந்தபடியால், அவர்கள் தங்கள் ஊர்களுக்கு நடையை கட்டிவிட்டனர்.

இந்த ஆண்டின் இடப்பெயர்வு ஒரு வித்தியாசமான குழப்பத்தில் முடிந்துள்ளது. அவர்கள் அவர்களுடைய கிராமத்திற்குள் நுழையும் போது தனிமைப் படுத்தும் முகாம்கள் இல்லை. கிராமங்களை நகர வைரஸ்களிலிருந்து காப்பாற்றுவதற்கான ஒரு அற்ப பாசாங்குக் கூட இல்லை.

இந்த கிராமங்கள் எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய வயிற்றுப் போக்கு மற்றும் காச நோய் போன்ற நோய்களால் கூட இறக்கும் மக்களைக் கொண்டவை. அவை கொரோனாவை எப்படி எதிர்கொள்ள முடியும்? அவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படுமா? அங்கே மருத்துவமனைகள் இருக்கின்றனவா? ஆக்சிஜன் இருக்குமா? எல்லாவற்றிற்கும் மேலாக அன்பு இருக்குமா? அன்பை விடுங்கள் அக்கறையாவது இருக்குமா? ஏனென்றால் இந்தியாவின் பொது இதயம் இருக்க வேண்டிய இடத்தில், அலட்சியம் நிரம்பிய இதயவடிவிலான ஓட்டையே இருக்கிறது

இன்று அதிகாலை, ஏப்ரல் 28 அன்று, எங்கள் நண்பர் பிரபுபாய் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவருக்கு திட்டவட்டமான கோவிட் அறிகுறி இருந்தது. ஆனால் அவர் மரணம் அதிகாரபூர்வ கோவிட் மரண எண்ணிக்கையில் பதிவாகாது. ஏனெனில் அவர் வீட்டில் சோதனை அல்லது சிகிச்சையின்றி இறந்தார். நர்மதா பள்ளத்தாக்கில் அணை எதிர்ப்பு இயக்கத்தின் உறுதியான தலைவராக இருந்தார். அணையை கட்டுபவர்களுக்காகவும், அதிகாரிகளுக்காகவும் குடியிருப்புகளை கட்டுவதற்கு  சில பத்தாண்டுகளுக்கு முன் முதல்முறையாக உள்ளூர் பழங்குடி மக்களை அவர்கள் நிலத்திலிருந்து வெளியே தூக்கி எறிந்த கெவாடியாவில் உள்ள அவரது வீட்டில் பலமுறை தங்கி இருக்கிறேன். பிரபுபாய் குடும்பத்தைச் போல் இடம்பெயர்க்கப்பட்ட  பல குடும்பங்கள், ஒரு காலத்தில் தங்களுக்கு சொந்தமாக இருந்த நிலத்தில் வறுமை மற்றும் ஒழுங்கமைவில்லாத சூழலில் அந்த காலனியின் விளிம்புகளில் வெளியாட்கள்,  ஆக்கிரமிப்பாளர்கள் என்ற முத்திரையோடு வாழ்ந்து வருகின்றனர்.

கெவாடியாவில் மருத்துவமனை இல்லை. ஆனால்,  உலகிலேயே மிக உயரமான, 182 மீ உயரத்தில், ஏறக்குறைய 3,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் துணைப் பிரதமருமான வல்லபாய் பட்டேலுடைய  ’ஒற்றுமை சிலை ’ மட்டுமே அங்கே உள்ளது. அணைக்கும் அவரது பெயரே வைக்கப்பட்டிருக்கிறது.

சர்தார் பட்டேல் சிலையின்  மார்பின் மட்டத்திலிருந்து நர்மதா அணையைப் பார்க்க, அதிவேக மின்தூக்கி சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்கிறது. ஆனால் நிச்சயமாக, அணைக்கட்டில் அடியாழத்தில் புதைக்கப்பட்ட  பள்ளத்தாக்கு நாகரீகத்தை நீங்கள் அங்கிருந்து பார்க்க முடியாது. அல்லது இதுவரை உலகம் அறிந்திராத ஒரு அழகான, ஆழ்ந்த போராட்டத்தை நடத்திய மக்களின் கதைகளை கேட்க முடியாது.

இந்த ஒரு அணைக்கு எதிராக மட்டுமல்ல, நாகரீகம், மகிழ்ச்சி, முன்னேற்றம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளதாக ஏற்றுக் கொள்ளப்பட்டக் கருத்துக்களுக்கு எதிரான போராட்டங்களின் கதைகளையும் கேட்க முடியாது. இந்த சிலை அமைக்கும் திட்டம் மோடியின் மிக விருப்பமான திட்டம். அவர் அதை 2018 அக்டோபரில் திறந்து வைத்தார்.

பிரபுபாய் பற்றிய செய்தியை எனக்கு அனுப்பிய எனது நண்பர் நர்மதா பள்ளத்தாக்கில் அணைக் கட்டுவதற்கு எதிராக போராடிய செயற்பாட்டாளர். ” இதை எழுதும் போது என் கைகள் நடுங்குகின்றன. கெவாடியா குடியிருப்பைச் சுற்றி கொரோனா நிலைமை மிக மோசமாக உள்ளது,” என்று அவர் செய்தி அனுப்பியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் துல்லியமென காட்டும் சித்திரங்கள், 2020ம் ஆண்டில் பிப்ரவரியில் டிரம்ப்பிற்காக மோடி நடத்திய ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சிக்காக, அவர் கடந்து செல்லும் பாதையில் இருந்த அகமதாபாத் நகரின் சேரிப்பகுதிகளை மறைக்க அவர் கட்டிய சுவர்களைப் போல இருக்கின்றன. கவலை தரும் அந்த எண்ணிக்கைகள் தான் நீங்கள் காண்பதெற்கன் தீட்டப்படும் இந்தியாவின் படம்,  ஆனால் நிச்சயமாக அது உண்மையான இந்தியா அல்ல.

இந்தியாவில் மக்கள் வாக்களிக்க இந்துக்களாகவும், இறப்பதற்கு தூக்கியெறிப்படும் குப்பைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

“நாம் அழுமூஞ்சியாக இல்லாமல் இருக்க முயற்சி செய்வோம்”

அரசே நியமித்த ஒரு குழு  ஒன்று, அதிகமான ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று  2020ம்  ஏப்ரலிலும், பின்னர் மீண்டும் நவம்பரிலும் வலியுறுத்திக் கூறியது என்ற உண்மையை கண்டும் காணாமல் இருக்க பயிற்சி எடுத்துக் கொள்வோம்.  ஏன் தில்லியின் மிகப்பெரிய மருத்துவமனைகளிலும் கூட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படவில்லை என்று வியப்பேதும் எழுந்தால் அடக்கி கொள்ளுங்கள்.

ஒப்பீட்டளவில் வெளிப்படையான பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு பதிலாக உருவாக்கப்பட்ட கேள்வி கேட்க முடியாத மூடுதிரை ‘பிஎம் கேர்ஸ் நிதி’ மக்களின் பொதுப்பணத்தையும், அரசு உள்கட்டமைப்பையும் பயன்படுத்தினாலும், ஒரு தனியார் அறக்கட்டளை போல – மக்களுக்கு பதிலே சொல்ல தேவையில்லாத அமைப்பாக இயங்கி வந்த அமைப்பு திடீரன ஆக்சிஜன் பற்றாக்குறையை தீர்க்கிறேன் பேர்வழி என்று களத்தில் இறங்கியுள்ளது. நமக்கான ஆக்சிஜன் வினியோகத்தில் மோடியின் பங்கும் இருக்குமா?

“நாம் அழுமூஞ்சியாக இல்லாமல் இருக்க முயற்சி செய்வோம்”

மோடி அரசாங்கத்திற்கு இதை விட முக்கியமான பிரச்சினைகள், உடனடியாகக் கவனிக்க வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் இருந்தன, இருக்கின்றன  என்பதை புரிந்து கொள்ளுங்கள்

ஜனநாயகத்தின் கடைசி எச்சங்களை அழிப்பது, இந்துக்கள் அல்லாத சிறுபான்மையினரை துன்புறுத்துவன் மூலம் இந்து தேசத்தின் அடிப்படைகளை ஒன்றுபடுத்துவது என அதன் இடைவிடாத கால அட்டவணை நெருக்கி நிற்கின்றன.  எடுத்துக்கட்டாக,  அசாமில், தலைமுறை தலைமறையாக அங்கு வாழ்ந்த, குடியுரிமையை திடீரென பறித்தெடுக்கப்பட்ட இருபது லட்சம் மக்களுக்காக அவசர அவசரமாகக் கட்டப்பட வேண்டிய பிரம்மாண்டமான  சிறைக்கூடங்களை கூறலாம் ( இதில், நமது சுதந்திரமான உச்சநீதிமன்றம் அரசிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டதை பார்க்க முடிகிறது)  

கடந்த மார்ச் மாதம் வடகிழக்கு தில்லியில் முஸ்லீம்கள் படுகொலைகளை செய்யப்பட்ட வழக்குகளில் , முதன்மை குற்றவாளிகளாக மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் இளம் முஸ்லீம் குடிமக்களை சொந்த சமூகத்திற்கு எதிரான குற்றவாளிகளாக சித்தரித்து விசாரணை கைதிகளாக சிறைப்படுத்த வேண்டும். நீங்கள் இந்திய முஸ்லீமாக இருந்தால் நீங்கள் கொலை செய்யப்படுவது கூட  உங்கள் குற்றம்தான். அதற்கான தண்டனையை உங்கள் சகாக்கள் அனுபவிப்பார்கள்.  மூத்த பாஜக தலைவர்கள் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, இந்து நாசவேலைக் காரர்களால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட மசூதியின் இடத்தில் புதிய ராமர் கோவில் கட்டுவதற்கான துவக்க விழா நடைபெற வேண்டி இருந்தது. ( இந்த விடயத்தில் நமது சுதந்திரமான உச்சநீதிமன்றம் அரசை கடுமையாகவும், கலவரக்காரர்களையும் கடுமை குறைவாகவும் சாடியது)

வேளாண்மையை கார்பரேட்மயமாக்கும் சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்களை நிறைவேற்ற வேண்டியதிருந்தது. இதனை எதிர்த்து வீதியிலிறங்கிப் போராடிய ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான விவசாயிகள் மீது தடியடி நடத்தி கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீச வேண்டியதிருந்தது. அதற்குப் பிறகு பல-பல-பல கோடிக்கணக்கான ரூபாய் செலவில் புதுதில்லியில் புகழ் மங்கிவரும் பழைய பேரரசின் மையத்திற்கு பதிலாக புதிய மிகப்பெரிய கட்டிடம் கட்டும் திட்டத்தை உடனடியாக கவனிக்க வேண்டியதிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, புதிய இந்து இந்திய அரசாங்கம் எப்படி அந்த பழைய கட்டிடத்தில் வீற்றிருக்க முடியும்?

தில்லி தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு ஊரடங்கில் முடங்கி போயிருக்கும் நிலையில் “அத்தியாவசிய சேவை” என்று அறிவிக்கப்பட்டு “சென்ட்ரல் விஸ்டா” திட்டம் துவங்கியிருக்கிறது. வேலையாட்கள் அங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். ஒரு வேளை அவர்கள் திட்டத்தில் மாறுதல் செய்து எரியூட்டு மயானத்தையும் கட்டலாம்.

கும்பமேளாவை வேறு ஏற்பாடு செய்ய வேண்டியதிருந்தது. அதன் மூலம் லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் அந்த சிறிய நகரத்தில் கூடி குளித்து, அருள் பெற்று, தூய்மையாகி  சமமாக ஒருவருக்கொருவர் வைரஸை பரப்பியபடி, தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டியிருந்தது. புனித நீராடலானது ஒரு குறியீடாக மட்டுமே இருக்கட்டும் என்று மோடி மிகவும் மென்மையாக வலியுறுத்தியதற்கு என்ன அர்த்தமாக வேண்டுமானாலும் இருக்கட்டும் (கடந்த ஆண்டு இஸ்லாமிய அமைப்பால் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தப்ளிகி ஜமாத்தில் கலந்துக் கொண்டவர்களுக்கு நிகழ்ந்தது போல, ஊடகங்கள் ஓடோடி வந்து அவர்களை “கொரோனா ஜிகாதிகள்” என்றும் அல்லது அவர்கள் மனித குலத்திற்கு எதிராக குற்றம் செய்தவர்கள் என்றும் கூறவில்லை)  அதுமட்டுமில்லாமல்,  இராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு நடுவில், மியான்மரில் நடந்த இனப்படுகொலை ஆட்சியிலிருந்துத் தப்பியோடி வந்த சில ஆயிரம் ரோஹிங்கியாக்களை அவசரமாக மீண்டும் அங்கேயே நாடு கடத்த வேண்டியிருந்தது. ( மீண்டும் ஒருமுறை நமது சுதந்திரமான உச்சநீதிமன்றத்தில் மனு போடப்பட்டது. இம்முறை அரசின் பார்வையுடன் அது இணக்கமாகி போனது.)

ஆகையால், அந்த நிகழ்ச்சி நிரல் முழுக்க ஓய்வொழிச்சல் இல்லாமல் இருந்தது என்ற முடிவுக்கு வரலாம்.

இந்த அவசர உடனடி செயல்களுக்கு எல்லாம் மேலாக அரசுக்கு, மேற்கு வங்காளத்தில் ஒரு தேர்தலை வெல்ல வேண்டியதிருந்தது. இதற்காக நமது உள்துறை அமைச்சரும், மோடியின் ஆள்  அமித் ஷா ஏறத்தாழ தனது அமைச்சகப் பணிகளை கூடவோ குறையவோ துறந்து விட்டு தனது முழு கவனத்தையும் மேற்கு வங்காளத்தில் செலுத்த வேண்டியதிருந்தது. தனது கட்சியின் கொலைவெறித் தனமான பரப்புரையை நடத்தவும், ஒவ்வொரு சிறிய நகரத்திலும், கிராமத்திலும் மனிதனை மனிதனுக்கு எதிராக குழி தோண்ட செய்யவும் வேண்டியதிருந்தது.

சிறிய மாநிலமான மேற்கு வங்காளத்தில் ஏற்கனவே முன்பு பலமுறை நடத்தியது போல், ஒரே நாளில் தேர்தலை நடத்தி இருக்க முடியும். ஆனால் பாஜக வுக்கு இது புதிய பகுதி என்பதால் தனது கட்சிக்காரர்களை- அவர்களில் பெரும்பாலானோர் வங்காளத்தைச் சேர்ந்தவர்களாக இல்லையென்பதாலும், தொகுதிக்கு தொகுதி வாக்களிப்பை மேற்பார்வையிட அனுப்புவதற்கு கால அவகாசம் தேவைப்பட்டதால்,  தேர்தல் அட்டவணை எட்டுக் கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு மாத காலத்தில் நடத்தப்பட்டது. கடைசி கட்டம் ஏப்ரல் 29 ல் நடந்தது.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த வேளையில் பிற அரசியல் கட்சிகள் தேர்தல் அட்டவணை குறித்து மறுபரிசீலனைச் செய்யுமாறு கெஞ்சின. ஆனால் தேர்தல் ஆணையம் பாஜக பக்கமே நின்றது. பரப்புரைக் தொடர்ந்தது. பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் நரேந்திர மோடி  வெற்றிக்களிப்போடு, முகக்கவசம் அணியாமல், முகக்கவசம் அணிந்திராத கூட்டத்தினை பார்த்து, முன்னெப்போதும் இல்லாத அளவு திரண்டு வந்ததற்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் காணொளியை பார்க்காதவர்கள் யார்?

ஏப்ரல் 17ல், தொற்று எண்ணிக்கை ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் என ராக்கெட் வேகத்தில் தாண்டிக் கொண்டிருந்த போது நடந்தது.

வாக்களிப்பு முடியும் தறுவாயில், வங்காளம் புதிய கொரோனா கொதிகலனாக மாறத் தயாராகிக் கொண்டிருக்கிறது. புதிய மும்மடங்கு உருமாறிய துயரம் என்னவென்று தெரியுமா?-யூகியுங்கள்- அதுதான் “வங்க மாதிரி (Bengal Strain)”. தலைநகர் கொல்கத்தாவில் சோதனைக்குள்ளாகும் இருவரில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாக செய்தித்தாள்கள் தெரிவிக்கின்றன. பாஜக தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் அனைவருக்கும் தடுப்பூசி இலவசம் என அறிவிக்கிறது? வெற்றி பெறாவிட்டால்?

“நாம் அழுமூஞ்சியாக இல்லாமல் இருக்க முயற்சி செய்வோம்”

எப்படியோ, தடுப்பூசி என்னவாயிற்று?
அவை கண்டிப்பாக நம்மைக் காப்பாற்றுமா?
தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா முன்னோடி இல்லையா?

உண்மையில், இந்திய அரசு சீரம் மற்றும் பாரத் பயோடெக் என்ற இரு நிறுவனங்களையே சார்ந்துள்ளது. இரண்டும், உலகிலேயே விலை மிகுந்த தடுப்பூசிகளை  உலகின் மிகவும் ஏழைகளின் தலையில் கட்ட அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் அவை தனியார் மருத்துவமனைகளுக்குச் சற்று உயர்த்தப்பட்ட விலையில் விற்கப் போவதாக அறிவித்துள்ளன. அதே போல் மாநில அரசுகளுக்கும் அதைவிட சற்று குறைவான விலையில் தருவதாகவும் அறிவித்துள்ளன. தோராயகமாக கணக்குப் போட்டுப் பார்த்தாலே தடுப்பூசி நிறுவனங்கள் நாணயமற்ற லாபத்தை பெறுவார்கள் எனத் தெரிகிறது.

மோடி ஆட்சியின் கீழ் இந்திய பொருளாதாரம் போண்டியாகிவிட்டது. ஏற்கனவே மிக கொடூரமான வாழ்க்கை வாழ்ந்து வரும் பல கோடி மக்கள் மேலும் மோசமான வறுமையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.  பெருந்திரளான மக்கள், 2005 ம் ஆண்டில் காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் ( நூறு நாள் வேலைத் திட்டம்) மூலம் கிடைக்கும்  சொற்ப வருமானத்தில் உயிர்வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பட்டினியில் விளிம்பில் உள்ள குடும்பங்கள் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள தமது மாத வருமானத்தில் ஒரு பெரும் பகுதியை செலவிடும் என எதிர்பார்க்க முடியாது. இங்கிலாந்தில் தடுப்பூசி இலவசம் மட்டுமல்ல அடிப்படை உரிமையுமாகும். தன்னுடைய முறைக்கு முன்னரே தடுப்பூசி போட்டுக் கொள்பவர் மீது வழக்குக்கூடத் தொடரலாம். இந்தியாவில் தடுப்பூசி இயக்கத்தின் முக்கியத் தடை பெருநிறுவன லாபம் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இந்த உச்சப்பட்ச பேரழிவு  குறித்து , மோடியிடன் அலைவரிசையில் ஒத்த தொலைக்காட்சிகள் சேனல்களை கவனித்தால் அவர்கள் எப்படி ஒரே சுவரத்தில் ஒன்றுபடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.  “அமைப்பு” சீர்குலைந்து விட்டது என்று அவர்கள் மீண்டும் மீண்டும் கூறுவார்கள். வைரஸ் இந்தியாவின் சுகாதார பாதுகாப்பு “அமைப்பை” மூழ்கடித்து விட்டது என்பார்கள்.

அமைப்பு சீர்குலைந்து போகவில்லை. “அமைப்பு” பெயருக்கு இருந்தது. இப்போதுள்ள அரசும், இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசும் ஏற்கனவே இருந்த சொற்ப மருத்துவ கட்டமைப்பு வசதிகளை வேண்டுமேன்றே தகர்த்துவிட்டன. பொது சுகாதார கட்டமைப்பு  இல்லாத போது, தொற்று நோய் பேரிடர் நம்மை தாக்கும்போது இதுதான் நிகழும். பொது சுகாதாரத்திற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.25% மட்டுமே  இந்தியா செலவிடுகிறது,  உலகின் ஏழை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளையும் ஒப்பிட்டால் இது சொற்பமான பகுதி.

ஆனால், அதுவும் கூட ஊதிப் பெருக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. ஏனெனில், சுகாதார பாதுகாப்பு என்பதற்குள் கண்டிப்பாக வர முடியாதவை எல்லாம் அதன் சட்டகத்திற்குள் இருக்கின்றன. எனவே உண்மையான ஒதுக்கீடு ஏறத்தாழ 0.34 விழுக்காடாகவே இருக்கும் .

2016ல் வெளிவந்துள்ள லேன்செட் ஆய்வு. நகர்புறங்களில் 78% மற்றும் கிராமப்புறங்களில் 71% சுகாதார பாதுகாப்பு தனியார் வசமே உள்ளன என்று தெரிவிக்கிறது. பொதுத்துறையில் உள்ள வளங்கள் யாவும் அமைப்பு ரீதியாக ஊழல்மிக்க அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள், முறைகேடான பரிந்துரைகள் மற்றும் காப்பீட்டு மோசடிகள் ஆகியவற்றிற்கு இடையிலான வலைபின்னலின் மூலம் முறையாக தனியார் துறைக்குப் மடைமாற்றம் செய்யப்படுகின்றன.

சுகாதார பாதுகாப்பு என்பது அடிப்படை உரிமை.  பட்டினியில் வாடும், நோய்வாய்ப்பட்ட, இறக்கும் நிலையில் உள்ள பணமில்லாத நோயாளிகளுக்கு அவர்கள் தேவையை நிறைவேற்றாது. இந்தியாவில் இத்தகைய மாபெரும் தனியார்மயமாக்கல் என்பது ஒரு கிரிமினல் குற்றம்.

அமைப்பு சரிந்து விடவில்லை. அரசு தோல்வி அடைந்துள்ளது. “தோல்வியுற்று விட்டது” என்பது தவறான சொல். ஏனெனில் நாம் காண்பது ஒரு கிரிமினல்த்தனமான அலட்சியம் மட்டுமல்ல. மாறாக மனிதகுலத்திற்கு எதிரான ஒரு அப்பட்டமான குற்றம்.

நச்சியியல் (Virology) நிபுணர்கள் இந்தியாவில் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை பல மடங்கு பெருகி 5 லட்சமாகும் என முன்னரே கணித்திருகிறார்கள். அவர்கள் இறப்பு பல லட்சக்கணக்கில் இருக்கும் என அனுமானித்திருந்தனர். ஒருவேளை இதற்கு மேலும் இருக்கலாம்.

பள்ளியில் வருகையை பதிவு செய்வதை போல, நானும் என்னுடைய நண்பர்கள் ஒரு நாளைக்கு ஒரு தடவை அழைத்து பேசி, இருப்பை உறுதி செய்து கொள்வதென பரஸ்பர ஒப்பந்தம் போட்டிருக்கிறோம்.

எங்கள் அன்பிற்குரியவர்களிடம் கண்ணீருடனும், நடுக்கத்துடனும், மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியுமா என்பது தெரியாமலே பேசிக் கொள்கிறோம். நாம் ஆரம்பித்ததை முடிக்கும் வரை வாழ்வோமா எனத் தெரியாமலே, எழுதிக் கொண்டும், வேலை செய்து கொண்டும் இருக்கிறோம். நமக்காக எத்தகைய திகிலும் மற்றும் அவமானமும் காத்திருக்கிறது எனத் தெரியாமலே வாழ்கிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக சுயமரியாதக்கு வரும் கேடு. அதுதான் நம்மை உடைந்து போகச் செய்கிறது.

#ModiMustresign(மோடி பதவி விலக வேண்டும்) என்பது சமூகவலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. சில மீம்களும், சித்தரிப்புகளும் மோடியின் தாடித்திரைக்குள் இருந்து  மண்டைஓடுகளின் குவியல்கள் துருத்திக் கொண்டிருக்கின்றன. இறைதூதர் மோடி பிணங்களின் பேரணியில் உரையாற்றுகிறார். பிணங்களின் குவியல்களுக்கு மேலே வட்டமடித்தப்படி  ஓட்டு அறுவடை செய்ய முடியுமா என தேடிக் கொண்டிருக்கும் கழுகுகளாக மோடி மற்றும் அமித்ஷா. ஆனால் இவையாவும் கதையின் ஒரு பகுதிதான்.

மறுபக்கத்திலோ, உணர்வுகளற்ற ஒரு மனிதன், வெறுமையான கண்கள்,  போலி புன்னகையும் கொண்ட ஒரு மனிதன்,  கடந்த கால கொடுங்கோலர்களை போல பிறரிடம் உணர்வெழுச்சியான கோபாவேச உணர்வுகளை தூண்டும் திறன் படைத்த ஒருவராக இருக்கக் கூடும். அவரிடம் உள்ள (நோய்வாய்ப்பட்ட) சிந்தனை பிறருக்கு தொற்றக் கூடியது. அதுதான் அவரை தனித்துவமாக்குகிறது.

அவரது மிகப் பெரும் வாக்கு வங்கியின் இருப்பிடமாக உள்ள, வெறும் எண்ணிக்கையைக் கொண்டே நாட்டின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கும் வல்லமை பெற்ற,  வட இந்தியாவில்,  அவர் கடத்தும் வலி ஒரு குறிப்பிட்ட வகை களிப்பாக மாறுகிறது.

ஃப்ரெடரிக் டக்ளஸ் அதை மிகச் சரியாக  ” கொடுங்கோலர்களின் வரம்புகள் அவர்கள் ஒடுக்குபவர்களின் சகிப்புத் தன்மையால் வரையறுக்கப்படுகின்றன” என்று சொன்னார்.

சகித்துக் கொள்ளும் திறன் பற்றி  இந்தியாவில் எப்படியெல்லாம் விதந்தோதுகிறோம்.  தியானம் செய்து, உள்நோக்கி பயணப்பத்து,  கோபத்தை தணித்து, சமத்துவ விழுமியங்களை உயர்த்தி பிடிக்க முடியாத இயலாமையை நியாயப்படுத்துவதென எவ்வளவு அழகாக நம்மை நாமே பயிற்றுவித்திருக்கிறோம். நமக்கு நேர்கிற அவமானத்தை எவ்வளவு எளிதாக ஆரத்தழுவிக் கொள்கிறோம்.

2001 ல் குஜராத்தின் புதிய முதலமைச்சராக முதன்முதலில் அரசியலில் அடியெடுத்து வைத்தபோது, 2002 “குஜராத் படுகொலைகள்” என்று பின்னர் அறியப்பட்ட நிகழ்வு மூலம் அடுத்த தலைமுறையிடம் தன்னுடைய இடத்தை உறுதிப் படுத்தி கொண்டார். 50 இந்து யாத்ரீகர்கள் கொடூரமாக உயிரோடு எரித்து கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கோடு கோபாவேசமாக கிளம்பிய கும்பல், முன்வந்து உதவிய காவல்துறையினரின் உதவியோடு, அவர்கள் வேடிக்கை பார்க்க வன்புணர்வது,  உயிரோடு எரிப்பது, கொலை செய்வது என கொடூரத்தில் ஈடுபட்டனர்.  வன்முறை தணிந்ததும், அப்போதுதான் தனது கட்சியால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி,  முன்னதாக தேர்தலுக்கு உத்தரவிட்டார். இந்து இருதயங்களின் பேரரசன் ( ஹிந்து ஹிருதய சாம்ராட்)  என்ற பிரச்சார முழக்கம் பெரும்பான்மை பலத்தோடு வெற்றியை கொடுத்தது. அன்றுமுதல் மோடி தேர்தலில் தோற்கவில்லை.

குஜராத் இனப்படுகொலையின் கொடூரத்தில் ஈடுபட்ட கொலைக்காரர்களை தன்னுடைய கேமராவில் ஆஷித் கேத்தன் பதிவு செய்தார்.

மக்களை எவ்வாறு கொன்று குவித்தார்கள்,  எவ்வாறு கருவுற்றத் தாயின் வயிற்றைக் கிழித்து, அதிலிருந்த சிசுவை எடுத்து, அதன் தலையை பாறையில் மோதி உடைத்தார்கள் என்பதையும் அவரது பதிவு வெளிப்படுத்தியது. மோடி தங்களது முதலமைச்சராக இருப்பதாலேயே இவற்றையெல்லாம் திறனோடு செய்ய முடிந்தது என்று அவர்கள் கூறினார்கள். அந்த ஒலிப்பதிவுகள் தேசிய தொலைக்காட்சிகளில் ஒலிபரப்பப்பட்டது. மோடி அதிகாரத்தில் இருந்த போதே, அ

ந்த ஒலிப்பதிவுகள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டு, தடயவியல் ரீதியாக பரிசீலிக்கப்பட்டு, பல சந்தர்பங்களில் சாட்சிகளாக சமர்ப்பிக்கப்பட்டன. சில காலத்திற்கு  பின்னர்,  சில கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால் பலர் கண்டுகொள்ளாமல் விடப்பட்டனர். கேத்தனின் சமீபத்திய புத்தகமான ” அண்டர்கவர்: மை ஜர்னி இன் டு தி டார்க்னஸ் ஆஃப் இந்துத்துவா” (Undercover: My Journey Into the Darkness of Hindutva) ல்,  மோடி முதல்வராக இருந்த காலத்தில் குஜராத் காவல்துறை, நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் விசாரணைக்குழுக்கள் ஆகிய அனைத்துயும் ஒன்றிணைத்து சாட்சிகளை அழிப்பது, சாட்சிகளை அச்சுறுத்துவது, நீதிபதிகளை இடமாற்றம் செய்வது ஆகியவற்றைச் எவ்வாறு செய்தார்கள் என்பதை விளக்கமாக எடுத்துரைத்துள்ளார்.

இதையெல்லாம் அறிந்திருந்தாலும், அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்களும், முக்கிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளும் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் ஊடக நிறுவனங்களும் மோடி இந்தியாவின் பிரதமராவதற்கு வழி வகுக்க கடுமையாக உழைத்தனர். தொடர்ந்து விமர்சனங்களைத்  முன் வைத்த எங்களை அவர்கள் அவமானப்படுத்தினர். உரக்க குரலெழுப்பி அடக்கினர். “கடந்து செல்லுங்கள்” என்பதை அவர்கள் தாரக மந்திரமாக ஜெபித்தனர்.

இன்றும் கூட அவர்கள் மோடியின்  மீதான விமர்சனங்களின் கடுமையை தணிக்க அவரது சொற்பொழிவுத் திறமை மற்றும் “கடின உழைப்பை” பாராட்டுவதை தவிர்ப்பதில்லை. அதுவே, எதிர்கட்சி அரசியல்வாதிகள் என்று வந்துவிட்டால் விமர்சன கணைகளை கூர்மையாக தீட்டி குத்தி கிழிக்க தவறுவதில்லை. வரவிருக்கும் கோவிட் நெருக்கடியை பற்றித் தொடர்ந்து எச்சரித்து, தன்னால் இயன்றவரை அரசுத் தன்னை தயாராக வைத்துக் கொள்ள பலமுறை கேட்டுக் கொண்ட ஒரே அரசியல்வாதியான காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை விமர்சிக்க தங்களது தனிச்சிறப்பான அவதூறுகளை சேமித்து வைத்துக் கொள்கின்றனர். ஜனநாயகத்தை அழித்தொழிக்க ஆளும்கட்சியோடு சேர்ந்து, எதிர்கட்சிகளை அழிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகத்தான் இந்த நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது.

நெருக்கடியை உற்பத்திச் செய்யும் அரசு இயந்திரம் என்று நாம் அழைக்கும்  இந்த அரசு இந்தப் பேரழிவிலிருந்து நம்மை மீட்கும் திறனற்றது. குறைந்தளவு கூட முடியாது. ஏனெனில், இந்த அரசாங்கத்தில் ஒரு மனிதன் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார், அந்த ஒருவரும் மிகவும் ஆபத்தானவராகவும் இருப்பதோடு – திறமை குறைபாடும் அதிகம்.  இந்த வைரஸ் உலகளாவியப் பிரச்சினை. இதனை சமாளிக்க, முடிவெடுப்பது, குறைந்தது தொற்று நோயை கட்டுப்படுத்தல் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை பற்றி முடிவெடுக்க  ஆளுங்கட்சி, எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், சுகாதாரம் மற்றும் மக்கள் கொள்கை வல்லுநர்கள் ஆகியோரைக் கொண்ட  பாகுபாடற்ற அமைப்பு ஒன்று வேண்டும்.

மோடியைப் பொறுத்தவரை அவர் தனது குற்றங்களுக்காக பதவி விலகுவது சாத்தியமான பரிந்துரையா? சொல்லப் போனால், அவருடைய ‘கடின உழைப்பிலிருந்து’ அவர் சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.  வி.வி.ஐ.பி தனிப்பட்ட தேவைக்கேற்ப கிட்டத்தட்ட 4000 கோடி மதிப்புடைய போயிங் 777, ஏர் இந்தியா விமானம் என அவருக்காகவே தயாரிக்கப்பட்ட விமானம்  சிறிது காலமாகவே ஓடுபாதையில் தேங்கியபடி நின்று கொண்டிருக்கிறது. அவரும் அவருடைய ஆட்களும் அதில் கிளம்ட்டும். மீதமுள்ள நாமெல்லோரும் நம்மால் முடிந்த அளவு அவர்கள் விட்டுச் சென்ற குழப்பத்தை சரி செய்யலாம்.

இல்லை, இந்தியாவைத் தனிமைப்படுத்த முடியாது. எங்களுக்கு உதவி தேவை.

www.theguardian.com இணையதளத்தில், 29 ஏப்ரல் அன்று அருந்ததி ராய் அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்