Aran Sei

“தேர்தல் வெற்றிக்காக அணு ஆயுத நாடுகளை போரின் விளிம்பிற்குத் தள்ளினார் மோடி” – இம்ரான் கான் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, பிரதமர் நரேந்திர மோடி பாலாகோட் தாக்குதலை நடத்தியுள்ளார் என்று, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்

ரிபப்ளிக் தொலைக் காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும், ‘ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின்’ (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரிக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்கள் வெளியாகியுள்ளதை சுட்டிக்காட்டி இம்ரான்கான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த உரையாடல்கள், “மோடி அரசுக்கும், இந்திய ஊடகங்களுக்கும் இடையிலான அறம்பிறழ்ந்த உறவை” வெளிப்படுத்துவதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.

ராணுவ ரகசியங்களை முன் கூட்டியே அறிந்திருந்தாரா அர்னாப்? – டிஆர்பி முறைகேட்டில் வெளிப்பட்ட அதிர்ச்சியளிக்கும் ஆதாரம்

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, மோடி அரசு மேற்கொண்ட பாலாகோட் தாக்குதல், அணு ஆயுத நாடுகளை (இந்தியா, பாகிஸ்தான்) ஏறக்குறைய மோதலின் விளிம்பிற்கு தள்ளியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவதுறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்) முன்னாள் தலைமை செயல் அதிகாரி பிரதோ தாஸ் குப்தாவுக்கும், ரிபப்ளிக் தொலைகாட்சியின் ஆசிரியர் அர்னாப் கோசாமிக்கும் இடையில், வாட்ஸ் ஆப் மூலம் நடைபெற்ற உரையாடலும் இணைக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 23 ஆம் தேதி நடந்துள்ள அந்த உரையாடலில், அர்னாப் கோசாமி ஒரு மிகப்பெரிய விஷயம் நடைபெறவுள்ளது  என்று பிரதோ தாஸிடம் கூறுகிறார். அதற்கு, தாவுத் இப்ராஹிம் தொடர்பானதா என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், பாகிஸ்தான் தொடர்பானது என்றும், இந்தமுறை மிகப்பெரிய அளவில் நடைபெறவுள்ளதாகவும் பதில் அளிக்கிறார்.

அதற்கு பிரதோ தாஸ், இந்த தேர்தல் சமயத்தில் அந்த பெரிய மனிதருக்கு (நரேந்திர மோடிக்கு) இது சாதகமாக இருக்கும் என்றும், அவர் மிகப்பெரிய வெற்றியை பெறுவார் என்றும் கூறுகிறார்.

அர்னாப் கோசாமி மீது தேசவிரோத குற்றச்சாட்டு – பாகிஸ்தானின் சதி என்று கூறுகிறது ரிபப்ளிக் தொலைகாட்சி

அதன் பிறகு, இது வெறும் தாக்குதலா? அல்லது அதை விடப் பெரியதா? என்று பிரதோ தாஸ் கேட்கின்றார். அதற்கு அர்னாப், வழக்கமான தாக்குதலை விட பெரியது என்றும் காஷ்மீர் தொடர்பான மிகப்பெரிய விஷயமும் கூட, என்று பதில் அளிக்கிறார். அத்துடன், பாகிஸ்தானை பொறுத்தவரை, மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் தாக்குதல் அமையும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் அர்னாப் கூறுகின்றார்.

அர்னாபுக்கும், பிரதோ தாசுக்கும் இடையில் இந்த உரையாடல் நடைபெற்று மூன்று நாள் கழித்து, 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் நாள், இந்திய விமானப்படை, காஷ்மீரில் உள்ள இந்திய எல்லையை கடந்து, பாகிஸ்தானின் கைபர் பக்தூன்க்வா மாகாணத்தில் உள்ள பாலாகோட் நகரில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது.

அதற்கு முன்னர் பிப்ரவரி 14ஆம் தேதி, காஷ்மீரின் புல்வாமா பகுதியில், ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 46 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும், ஜெய்ஷ் இ மொஹம்மத் அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக கூறிய இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாலகோட் தாக்குதலை நடத்தியது.

பாலாகோட் தாக்குதல் நடைபெற்று சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 303 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்