Aran Sei

பிஎம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை – முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

பிஎம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று விமர்சித்து, முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நூறு பேர், கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ளனர்.  இது பொதுச் சொத்து அல்ல என்று கூறி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதனைப் பற்றியத் தகவல்களை மத்திய அரசு வெளியிட மறுத்து வருவதே இந்தக் கடிதத்தை உடனடியாக எழுதத் தூண்டி உள்ளது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளில், உயர்பதவி வகித்த அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.

அந்தக் கடிதம்:

அன்புள்ள பிரதமருக்கு,

அனைத்திந்திய மற்றும் மத்திய குடிமைப்பணியில் நாங்கள், பல பத்தாண்டுகள் மத்திய மாநில அரசாங்கங்களில் பணி புரிந்துள்ளோம். ஒரு குழுவாக, நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில்லாதவர்கள், ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உறுதியாக இருப்பவர்கள். “அவசர கால குடிமக்கள் உதவி மற்றும் நிவாரணம்” அல்லது “பிஎம்- கேர்ஸ்” என்ற பெயரில், கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட நிதி குறித்து நடந்து வரும் விவாதங்களை நாங்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். அது உருவாக்கப்பட்ட விதம், அதேபோல அது நிர்வகிக்கிப்படும் முறை குறித்த பல கேள்விகள் விடையளிக்கப்படாமல் உள்ளன.

நிதி உருவாக்கப்பட்ட வேகம், மூச்சுத் திணற வைக்கிறது. நாட்டில் முதல் முழு முடக்கம் அறிவிக்கபட்ட மூன்று நாட்களுக்குள், அதாவது 2020, மார்ச்சு 27 ஆம் தேதி, அது பதிவு செய்யப்பட்டுள்ளது. வலைதளத்தில் கிடைக்கும் தகவல்கள்படி, ஒரு வாரத்திற்குள் 3,076.62 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட உண்மையான, முழுமையானத் தொகை இதுவரை வெளியிடப்படவில்லை.

பிஎம்-கேர்ஸ் நிதி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ), பிரிவு2(h) ன் வரையறையின் கீழ் வரும் பொது நிறுவனமாக இல்லாததால், அதன் விவரங்களை ஆர்டிஐ மூலம்  பெற முடியாது என இந்திய அரசு கடந்த 2020, டிசம்பர் 24 ஆம் தேதி கூறியதால்தான் இந்த கடிதத்தை உடனடியாக எழுத வேண்டி வந்தது. அது ஒரு பொது நிறுவனம் இல்லை என்றால் பிரதமரும், உள்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும், நிதி அமைச்சரும் அரசாங்க உறுப்பினர்களாக இருந்து கொண்டு அதில் பதவிகளையும், அதிகாரபூர்வ நிலைகளையும் எவ்வாறு வகிக்கிறார்கள்?  ஏன் அவர்கள் தனி குடிமகனாக இல்லாமல் அதிகாரபூர்வ அந்தஸ்தில், அறங்காவலர்களாக இருக்கிறார்கள்? பிஎம்-கேர்ஸ் ஒரு தனியார் அறக்கட்டளையாக இருந்தால், கார்பரேட் சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) செலவினங்களை பெறத் தகுதி உடையதா? நிறுவனங்கள் சட்டம் பிரிவு 135, அட்டவணை VII(ix),  சமூக – பொருளாதார மற்றும் நிவாரணப் பணிகள் உள்ளிட்ட, சில வகையான நிதிகளுக்கு மட்டுமே சிஎஸ்ஆர்-க்கு விலக்கு அளிக்கிறது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் 2020, மார்ச் 28 ஆம் நாள் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், “நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு (சிஎஸ்ஆர்) கடமைகளை நிறைவேற்றும் போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை விவரிக்கும், 2013 ஆம் ஆண்டு நிறுவனச் சட்டம் அட்டவணை VII, இனம் (viii), மற்றவற்றுடன், சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் நிவாரணத்திற்காக மத்திய அரசு அமைத்துள்ள எந்த ஒரு நிதிக்கும் சிஎஸ்ஆர் செலவினங்களின் கீழ் நன்கொடை வழங்கலாம்,”  எனக் கூறி உள்ளது. பிஎம் – கேர்ஸ் நிதி, எல்லாவித அவசரகால பேரிடர் சூழலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிவாரணம் அளிப்பதற்காக  நிறுவப்பட்டது. அதன்படி பிஎம் – கேர்ஸ் நிதிக்கு வழங்கப்படும் எந்த ஒரு நன்கொடையும் 2013, நிறுவனச் சட்டப்படி சிஎஸ்ஆர் செலவினங்களாக தகுதி பெறும்.”

அப்படியானால் ‘மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிதியாக இல்லாவிட்டால், அதற்கு அளிக்கப்படும் நன்கொடை முறையான சிஎஸ்ஆர் செலவினங்களாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. பின்னர் எழும் கேள்வி என்னவென்றால், 2020, மார்ச் 28 ல் வெளியிட்ட சுற்றறிக்கை குறைபாடுள்ளதா? ஏனெனில், மிகவும் குறிப்பாக கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகம், 2020, மே 26 ஆம் தேதி, அரசிதழில் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், நிறுவனங்கள் சட்டம் அட்டவணை VII பிரிவு 135 ன் கீழ், 2020, மார்ச் 28, முன் தேதியிட்டு இந்த நிதியை (பிஎம்- கேர்ஸ் நிதியை) சிஎஸ்ஆர் நிதி பெறத் தகுதி உடைய நிதியமாகச்  சேர்த்துள்ளது. பிஎம் – கேர்ஸ் ன் இந்த புதிய சேர்ப்பு, பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) அடுத்து வருகிறது. ஏற்கனவே தேசிய நிவாரண நிதி ஒன்று இருக்கும் போது புதிய நிதிக்கு என்ன தேவை வந்தது?

பிஎம்- கேர்ஸ் நிதி அறக்கட்டளைப் பத்திரம் 5.3 வது குறிப்பு, “இந்த அறக்கட்டளை எந்த ஒரு அரசாங்கத்தாலும் அல்லது அரசாங்கத்தால் நிறுவப்பட்ட நிறுவனத்தாலும் சொந்தமான, கட்டுப்படுத்தப்பட்ட அல்லது கணிசமான நிதி அளிக்கப்படுவதையோ நோக்கமாகக் கொண்டது அல்ல. இந்த அறக்கட்டளையின் செயல்பாட்டில், மத்திய அரசு அல்லது மாநில அரசுகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு வகையிலும், எந்தக் கட்டுப்பாடும் இல்லை.” என்று கூறுகிறது. அவ்வாறெனில், பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு பெரிய தொகை வந்திருப்பது எப்படி? இந்த நிதியம் பொது நிறுவனம் இல்லை என்றால், ஏன் நமது தூதரகங்கள் வெளிநாட்டிலிருந்து நிதியை தேடுகின்றனர்?

2020, மார்ச் 30 ஆம் தேதி, நமது அயல்நாட்டுத் தூதர்களுடன்  நீங்கள் நடத்திய காணொளி மாநாட்டில், ‘புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிஎம்-கேர்ஸ் நிதிக்கு வெளிநாடுகளிலிருந்து நன்கொடைகளைத் திரட்ட பொருத்தமாக விளம்பரம் செய்யுமாறு அவர்களிடம் (Heads of Mission) வேண்டுகோள்’ விடுத்துள்ளதாக அதே நாளைய அயலகத்துறை அமைச்சக செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

மிக நிச்சயமாக, முக்கியமான துறைகளை கையாளும் நீங்களும், பிற மூத்த அமைச்சர்களும் அதில் அறங்காவலர்களாக இருப்பதால் மிகப் பெரிய அளவில் நிதியைத் திரட்ட முடியும் என்பது உறுதி‌. மேலும், அரசு அதிகாரிகள் பொது மக்களிடம் நன்கொடை அளிக்கக் கோருகின்றனர்.

அப்போதைய கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளர், இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனத்திடம் (ICAI), இந்த நிதிக்கு நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதனை அந்த நிறுவனமும் அடிபணிந்து ஏற்றுக் கொண்டது. தனக்கு அலுவலக ரீதியாக தொடர்புள்ள அமைப்பிடம் செயலாளர் நன்கொடை கோரலாமா?

பிஎம்-கேர்ஸ் நிதி, பொது நிறுவனமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றாலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, ‘கணிசமான அரசாங்க நிதி உதவிப் பெறும்’ அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் மற்றும் பொதுத்துறை அரசுசாரா நிறுவனங்கள் ஆகியவற்றை ” பொது நிறுவனங்கள்” என்றே கருத வேண்டும்’ என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

ஒட்டுமொத்தமான நிதியைப் பார்க்கும் போது,  ஊதியம் மற்றும் பிற வகையிலிருந்து அரசு பணம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ பிஎம்-கேர்ஸ் நிதிக்கு கணிசமான அளவு வந்துள்ளது என்பது தெளிவாகிறது. 2020, மே 19 அன்று வெளியான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியின் படி, இந்த நிதியில் இருந்த 10,600 கோடியில், 3,200 கோடிக்கு மேல் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தும், ஏறத்தாழ 1,200 கோடி பொதுத்துறை ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இந்தத் தொகை இராணுவம் மற்றும் பிற அரசு, பகுதி அரசு நிறுவன ஊழியர்களின் ஊதியத்திலிருந்து வெளிப்படையாகப் பெறப்பட்டுள்ளது.

பிஎம்-கேர்ஸ் நிதியின் ஒவ்வொரு கூறிலும், வெளிப்படைத்தன்மை சுத்தமாக இல்லை என்பது தெளிவாக உள்ளது. நன்கொடை வழங்கியவர்கள் பற்றிய விவரம் மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்டத் தொகை பற்றியும், செலவினங்கள் பற்றிய விவரமும் பொது வெளியில் இல்லை. கோவிட் 19 சவாலை கையாளும் மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து நிதி உதவி தேவைப்படும் நிலையில், இந்த திரை மறைவு மிகவும் கவலைக்குரியது,

பொதுமக்கள் மறதி என்பது ஒரு குறை பிரதமர் அவர்களே. 1980 களில், மகாராட்டிர மாநில முதல்வராக இருந்த ஏ.ஆர்.அந்துலே, காந்தி சிலை நிறுவும் நிதியம் என்பது உள்ளிட்ட பல நிதியங்களை உருவாக்கியது பற்றியும், அந்த வழக்கில், பெறப்பட்ட நிதிகள் அரசு நிதி போல காட்டப்பட்டிருந்தாலும், அவை தனியாரிடமிருந்து பெறப்பட்டது என்பது பற்றியும், கெடு வாய்ப்பாக, அப்போது பாஜக தலைவர்கள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியதால், அவர் பதவி விலக வேண்டி வந்தது பற்றியும், நமது இளைய தலைமுறையினர் கேள்விப்பட்டிருக்கக் கூட மாட்டார்கள்.

நேர்மை மற்றும் பொது பொறுப்புக் கூறலின் தர நிலைகளைக் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்திற்காகவும், தவறான செயல்களின் ஐயங்களை தவிர்ப்பதற்காகவும், பெறப்பட்ட, செலவிடப்பட்ட நிதி விவரங்கள் கிடைக்க வேண்டும். நன்கு அறியப்பட்ட 1975 ஆம் ஆண்டின், ராஜ்நாரயண் வழக்கில் நீதிபதி மேத்யூ, “இந்த நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு பொதுச் செயலையும், பொது ஊழியர்களால் செய்யப்படும் பொது வழியில் செய்யப்படும் அனைத்து செயல்களையும் அறியும் உரிமை உண்டு” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் பதவியயையும் அதன் உயர் மதிப்பையும் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, பிரதமருடன் தொடர்புடைய அனைத்து நடவடிக்கைகளிலும் முழு வெளிப்படைத்தன்மையை  உறுதி செய்வது மிக அவசியம்.

வாய்மையே வெல்லும்.

(முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் 100 பேரின் கையொப்பங்கள்)

(www.thewire.in இணைய தளத்தில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்