Aran Sei

பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு – அண்ணா பல்கலைக் கழகத்திலும் அமலானது

ண்ணா பல்கலைக் கழகத்தில் முதல் முறையாக, முன்னேறிய சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், முன்னேறிய சமூகத்தில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்று, தமிழக அரசு உறுதியளித்திருந்த நிலையில் அண்மையில், தமிழகத்தின் சில பல்கலைக் கழகங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் பிரிவில் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

69% இடஒதுக்கீடு மீறலா?: என்ன நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? – தமிழ் நாசர்

தற்போது, அண்ணா பல்கலைக்கழத்திலும், முன்னேறிய சமூகத்தினரில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின், உயிரி தொழில்நுட்பத்துறையின் (Department of Biotechnology) உதவியில், அண்ணா பல்கலைக் கழகத்தில் உயிரி தொழில்நுட்பம் (Biotechnology), கம்ப்யூட்டேஷனல் பயாலஜி (Computational Bilology) ஆகிய இரண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள் (M.Tech) நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு படிப்புளுக்கு மட்டும், கடந்த ஆண்டுவரை, மத்திய அரசின் ஜவஹர்லால் பல்லைக்கழகம் மற்றும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வந்தது.

’மறுக்கப்படும் அண்ணா பல்கலைக்கழக 69 சதவீத இடஒதுக்கீடு; கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம்’ – கி.வீரமணி

தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளநிலையில், மத்திய அரசின் உதவி பெறும் படிப்புகள் என்பதால், இந்த இரண்டு படிப்புகளுக்கு மட்டும் இதுநாள் வரை மத்திய அரசின் 49.5 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு படிப்புகளுக்கும் இந்த கல்வி ஆண்டில், அண்ணா பல்லைக்கழமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று, மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை உத்தரவிட்டது.

அண்ணா பல்லைக்கழகம் தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் கல்வி நிறுவனம் என்பதால், தமிழகத்தின் 69 சதவீத இடஒதுக்கீட்டை மட்டுமே பின்பற்ற முடியும். ஆனால், மத்திய அரசு 49.5 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று கூறியதால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, இந்த கல்வி ஆண்டில் உயிரி தொழில்நுட்பம், கம்ப்யூட்டேஷனல் பயாலஜி ஆகிய இரண்டு முதுநிலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த முடிவை எதிர்த்து, ஆர்.சித்ரா என்ற மாணவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் சித்ரா கோரியிருந்தார்.

ஐஐடி ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு கூடாது – பரிந்துரைக்கு எதிராக களமிறங்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, மத்திய அரசின் இடஒதுக்கீட்டு நடைமுறையின் அடிப்படையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று, கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி உத்தரவிட்டார். அத்துடன், இரண்டு வாரங்களில், மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை, தகுதிபெற்ற மாணவர்களின் பட்டியலை அண்ணா பல்லைக்கழகத்திற்கு வழங்க வேண்டும் என்றும் உத்தவிட்டார்.

இதைத்தொடர்ந்து, உயிரி தொழில்நுட்பம், கம்ப்யூட்டேஷனல் பயாலஜி ஆகிய இரண்டு படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் பட்டியலை மத்திய உயிரி தொழில்நுட்பத்துறை நேற்று (மார்ச் 5) வெளியிட்டுள்ளது. அதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவருக்கான (EWS) 10 சதவீத இடஒதுக்கீடும் அமல் படுத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

முதுநிலை உயிரி தொழில்நுட்ப (M.Tech Biotechnology) படிப்பில், மொத்தம் உள்ள 25 இடங்களில், 3 இடங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. கம்ப்யூட்டேஷனல் பயாலஜி துறையில் மொத்தம் உள்ள 20 இடங்களில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் இல்லாததால், பொதுப் பிரிவில் உள்ள 9 இடங்களுடன், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 2 இடங்களும் சேர்த்து, 11 இடங்கள் பொதுப் பிரிவில் நிரப்பப்பட்டுள்ளன.

 

ஏற்கனவே, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் ஆகிய நான்கு தமிழக பல்கலைக்கழகங்களிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு சர்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தமிழகத்தின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்லைக்கழகத்தில், முன்னேறிய சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு, முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்