Aran Sei

விவசாயி உயிரிழப்பு: “நான் குண்டு துளைத்த காயங்களை பார்த்தேன்” – பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தகவல்

னவரி 26 அன்று தலைநகரில் நடந்த டிராக்டர் பேரணியில் கொல்லப்பட்ட நவ்ரீத் சிங், டிராக்டர் கவிழ்ந்ததால்தான் உயிரிழந்தார் என்ற தில்லி காவல்துறையின் கூற்றை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுக்கின்றனர். அன்று நடந்த அந்த நிகழ்வுக்கு சாட்சியாக இருந்த விவசாயிகள், முதலில் கூறியது போல, அவர் குண்டடிப்பட்டதால்தான் இறந்துள்ளார் என்று கூறுகின்றனர்.

உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் அரியானா மாநில காவல்துறையினர், இந்தியா டுடேவின் ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், காங்கிரஸ் தலைவர் சசிதரூர் ஆகியோர், இது குண்டு பாய்ந்ததால் ஏற்பட்ட மரணம் என்று கூறியதற்காக அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள மூன்று தேசத்துரோக வழக்குகளின் மையப்புள்ளியாக நவ்ரீத் சிங்கின் கொலை உள்ளது. தில்லி காவல்துறையினர் மிக வேகமாக வரும் டிராக்டர், காவல்துறையின் தடுப்புகளின் மீது மோதி கவிழும் காணொளியை வெளியிட்டுள்ளனர். எனினும், அங்கிருந்த விவசாயிகள், நவ்ரீத் சிங் குண்டடிப்பட்டு இறந்ததால், வண்டியின் மீதான கட்டுப்பாட்டை இழந்தததாகக் கூறுகின்றனர்.

ஜனவரி 27ம் தேதி அதிகாலை 2 மணியளவில் நடந்த பிரேத பரிசோதனைக்குப் பின், ராம்பூரில் உள்ள மாவட்ட மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி தயாரித்த பிரேதப் பரிசோதனை அறிக்கை, “தலையில் ஏற்பட்ட காயத்தின் விளைவாக உண்டான அதிர்ச்சி மற்றும் இரத்தக் கசிவு காரணமாக மரணம் நிகழ்ந்துள்ளது,” என்று கூறியது. இது  தில்லி காவல்துறையினர் தங்கள் விளக்கத்திற்கு  இசைவானதாக இருப்பதாக மேற்கோள்காட்டுகின்றனர். ஆனால் இந்த அறிக்கையை அவரது குடும்பத்தினர் எதிர்க்கின்றனர்.

விவசாயிகள் வரையறுக்கப்பட்ட பேரணி பாதையைக் கடக்க காவல்துறை அனுமதித்தது ஏன்? – செயல்பாட்டாளர்கள் கேள்வி

எங்களை ஏமாற்றி விட்டார்கள், இனி நீதிமன்றமே முடிவெடுக்கும்.

“எங்களிடம் மருத்துவர் குண்டு காயம் இருந்ததை தெளிவாகப் பார்த்ததாகக் கூறினார். அதன்பிறகு நாங்கள் அவரது உடலை அமைதியாக எரித்தோம். ஆனால் எங்களை ஏமாற்றி விட்டார்கள். வெளிவந்துள்ள பிரேதப்பரிசோதனை அறிக்கையில் அது கூறப்படவில்லை. மருத்துவர் தான் குண்டு காயத்தை பார்த்தாலும், தனது கைகள் கட்டப்பட்டிருப்பதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறியதாக, நவ்ரீத் சிங்கின் தாத்தா ஹர்தீப் சிங் டிப்டிபா, மரணம் நிகழ்ந்து மூன்று நாட்களுக்குப்பின், தி வயர் செய்தியாளரிடம் கூறினார்.

68 வயதான டிப்டிபா விவசாயிகள் போராட்டம் துவங்கிய நாளிலிருந்து அதில் கலந்துக் கொண்டிருக்கிறார். அவர் மேலும் கூறுகையில், சீக்கிய மதம் பற்றி ஐந்து நூல்களை எழுதியிருப்பதாகவும் தெரிவித்தார். தனது பேரனின் மரணத்திற்கு பிறகு, தான் உத்திரப்பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள தனது டிப்டிபா கிராமத்திற்குத் திரும்பி விட்டதாகவும் கூறுகிறார்.

இரண்டு ‘சிராய்ப்பு காயங்கள்'(lacerated), ஒன்று நவ்ரீத்தின் தாடையிலும், மற்றொன்று காதுக்கு பின்புறமும் இருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, “அவர்கள் ( மருத்துவர்கள்) அறிக்கையில் நேரடியாக குண்டு என்ற சொல்லை பயன்படுத்தவில்லை‌. ஆனால் நிலைமையைப் பார்க்கும் போது, இந்த மாநிலத்தை ஆளும் அரசின் தன்மையைக் காட்டுகின்றது. இது குறித்து, அவர்கள் எந்த அளவு முடியுமோ அந்த அளவு எழுதுவார்கள்‌. எங்களுக்கு வழக்கறிஞர் கிடைக்கும் போது நீதிமன்றங்களே இவற்றை அழித்து விடும்,” என்கிறார் அவர்.

நவ்ரீத் சிங்கின் தந்தை விக்ரம்ரீத் சிங் (46), “இறந்த உடலைப் பார்த்த அனைவரும் அது குண்டடிப் பட்டதால் ஏற்பட்டது என்பதைக் கண்டார்கள். பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்களில் ஒருவர், இது குண்டடிப் பட்டதால் ஏற்பட்டது என்றும் ஆனால், அதை அவரால் எழுத முடியாது என்றும் தெரிவித்தார்” என்று கூறுகிறார். மேலும் தனது மகன் தற்போதுதான் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்திருக்கிறார். விவசாயிகள் நடத்தும் இந்த டிராக்டர் பேரணியில் கலந்து கொள்வதற்காக தில்லிக்கு வந்தார். நாங்கள் அவருடைய இறுதி சடங்குகளை பிப்ரவரி 4ம் தேதிக்குள் முடித்து விடுவோம். அதன்பின் நாங்கள் எங்கள் செயல் திட்டத்தை மேலெடுத்துச் செல்வோம்,” என்று கூறுகிறார்.

பாஜக எம்எல்ஏக்கள் மீது புகாரளித்துள்ள பாரதிய  கிசான் யூனியன் – விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு காரணமானவர்கள் என்ற குற்றச்சாட்டு.

உ.பி. காவல்துறை நவ்ரீத் சிங்கின் குடும்பம் கூறிய  குண்டு காயம் விடயத்தில் தாங்கள் தலையிடவில்லை என்றும், எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் கூறுகிறது. அந்தப் பகுதியின் மூத்த காவல்துறை அதிகாரியான துணைத் தலைமை இயக்குநர் (ADGP – பரேய்லி) அவினாஷ் சந்திரா “நாங்கள் பிரேதப்பரிசோதனைச் செய்ய மருத்துவர்கள் குழுவை நியமித்தோம். இது தில்லி காவல்துறையின் விவகாரமாக இருப்பதால்,  நாங்கள் இதில் அழுத்தம் தரவோ, திரிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை,” என்று கூறினார்.  இந்த குடும்பம் அணுக வேண்டிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணையம் தான் என வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். அதுதான் பிரேதப்பரிசோதனை செய்தபோது எடுக்கப்பட்ட காணொளியை பரிசீலனையும், மருத்துவர் எழுதிய அறிக்கையை மறு பரிசீலனையும் செய்ய முடியும்.

அன்று என்ன நடந்தது?

ஜனவரி 26 அன்று ஐடிஓ சாலையில், நவ்ரீத் சிங்கின் இறந்த உடலை செய்தியாளர்கள் பார்த்த போது, பல விவசாயிகளும் இந்த நிகழ்வுக்கு தாங்களே நேரடி சாட்சி என்றும், ஒரு குண்டு பட்டதால் தான் அவர் இறந்தார் என்றும் கூறினர். சுற்றிலும் 300 அடி தூரத்திற்கு காவலர்களே காணப்படவில்லை என்றாலும் அவர்கள் “அந்த இடத்தை விட்டு கலைந்து சென்று விட்டனர்” என்று செய்தியாளர்களிடம் அங்கிருந்த விவசாயிகள் கூறினர்.

நவ்ரீத்தின் டிராக்டர் தலைகீழாக கவிழ்த்து கிடக்கும் காணொளியை தில்லி காவல்தூறை வெளியிட்டப் பிறகும், அந்த இடத்தில் இருந்த விவசாயிகள் அவர்கள் கூறியதில் உறுதியாக இருந்தனர். “ஒரு குண்டு அவரைத் தாக்கியது. அதனால்தான் அவர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தைச் சந்தித்தார்” நான்தான் அதற்கு சாட்சி என்று ஒரு விவசாயி கூறினார்.

காதிற்கு மேல் இருந்த ஆழமான வெட்டுக் காயம் குண்டு வெளியேறியதால் ஏற்பட்ட காயம் என்று கூறும் அவரது குடும்பத்தினர், பிரேதப்பரிசோதனை அறிக்கை குண்டு காயம் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் நவ்ரீத்தின் இடது கீழ்த் தாடையில் ஒரு உள்நோக்கிய காயமும், வலது காதின் ஓரம் வெளிநோக்கிய காயமும் இருந்ததாகத் தெரிவிக்கிறது.

தி வயர்-க்கு கிடைத்த அறிக்கை, கண்புருவத்திற்கு மேல், தாடை, மண்டை ஓடு, காது சிற்றெலும்புகள், மார்பு, தொடை ஆகிய ஆறு இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது.

முதல்முறையாகச் சிங்கு எல்லையில் நடைபெற்ற கலவரம் – விவசாயிகள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்த காவல்துறை

அந்த அறிக்கை, “வாய்க்கு ஒரு செ.மீ கீழே, இடது தாடையில் 2 செ.மீ. x 1 செ.மீ. தோல் கிழிந்த ஆழமான அளவுள்ள காயம் உள்ளது. அதன் விளிம்புகள் உள்பக்கமாக இருப்பதுடன் காயம் எலும்பு வரை ஆழமாக உள்ளது. மற்றொரு தோல் கிழிந்த காயம், 6 செ.மீx 3 செ.மீ அளவுள்ளது. அதன் விளிம்புகள் சீரற்றும் வெளிப்பக்கம் நோக்கியும் உள்ளன. வலது காதின் சிற்றெலும்புகளும், மூளைப் பகுதியும் அந்த காயத்தின் வழியாக வெளியே வந்து கொண்டிருந்தது. வலது புருவத்தின் கீழ் முனையில் 2செ.மீx1செ.மீ. நீளமுள்ள காயத்தில் விளிம்புகள் உள்நோக்கி உள்ளன. மேலும் மண்டை ஓட்டில் ‘அதிர்ச்சிகரமான வீக்கம்’ இருந்தது, என்று தெரிவிக்கிறது. வலது காதில் உள்ள காயம்குண்டு வெளியேறியதால் ஏற்பட்ட காயம் என்று குடும்பத்தினர் கூறுகின்றனர்.

எனினும், பிரேதப்பரிசோதனை அறிக்கைத் தயாரிக்கப்பட்ட, ராம்பூர் மாவட்ட மருத்துவமனை மருத்துவரும், துணை முதன்மை மருத்துவ அதிகாரியுமான மனோஜ் சுக்லா, அது அப்படி அல்ல என்கிறார். வெள்ளியன்று தி வயர்-வுடன் தொலைபேசியில் பேசியபோது அவர் ஏதாவது ஒன்று வலது காதில் வலிமையால் தாக்கி இருக்கலாம், அல்லது நீங்கள் தவறான ஆவணத்தைப் பெற்றிருக்கலாம்,” என்று கூறினார்.

தன் பெயரை வெளியிடக் கூடாது என நிபந்தனையுடன் தி வயர்-வுடன் பேசிய ஒரு  எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர், தோல்கிழிந்த காயங்களைக் குண்டடிப்பட்ட காயங்களுடன் தொடர்புபடுத்தலாம். தோல் கிழிந்த காயம் (laceration)  என்பது தோல், திசுக்கள், மற்றும்/அல்லது தசை கிழிவதால் அல்லது வெட்டி திறப்பதால் ஏற்படுவதாகும். இத்தகைய காயங்கள் ஆழமானவையாகவோ, ஆழம் குறைவானவையாகவோ, நீளமானவையாகவோ அல்லது நீளம் குறைந்தவையாகவோ இருக்கலாம். பெரும்பாலான இத்தகைய காயங்கள் ஏதாவது ஒரு பொருளைத்  தோல் வலிமையால் தாக்குவதாலோ அல்லது ஒரு பொருள் தோலை வலிமையாகத்  தாக்குவதாலோ ஏற்படுகின்றன என்று கூறினார். மேலும் அவர், “குண்டடி காயம் பற்றிய சந்தேகம் வராமல் பிரேதப்பரிசோதனை அறிக்கை கவனமாகத் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது தாடையிலும் காதிலும் ஏற்பட்டுள்ள காயங்கள், குறிப்பாக அந்த இரண்டு காயங்களும் நேர் கோட்டில் இருப்பதால், குண்டு உள்ளே புகுந்து, வெளியேறியதால் ஏற்பட்ட காயங்களாக இருக்கலாம். குண்டு ஒரு மனிதனின் தலையில் புகுந்திருந்தால் அந்த கடின எலும்பு முறிந்திருக்கும். ஆனால் அறிக்கை அது பற்றி எதுவும் கூறவில்லை. அதோடு பிரேதப்பரிசோதனை, எக்ஸ்ரே எடுக்கப்பட்டதா என்பதைக் குறிப்பிடவில்லை,” என்று தெரிவித்தார்.

“எக்ஸ்ரே வில் குண்டு பட்ட காயம் தெரிந்ததாக மருத்துவர் தன்னிடம் உறுதியாகத் தெரிவித்ததாகவும் ஆனால் அவற்றைத் தங்களுக்குக் காட்ட மறுத்து விட்டதாகவும்” நவ்ரீத்தின் தந்தை கூறுகிறார். மருத்துவர் சுக்லாவும் பிரேதப்பரிசோதனையின் போது எக்ஸ்ரே எடுத்ததை ஒப்புக் கொண்டார். இருப்பினும் அறிக்கை அதுபற்றி எதுவும் கூறவில்லை.

நவ்ரீத்தின் குடும்பமும் அவரது முகத்தில் இடது தாடையிலும், வலது காதின் மேற்புறத்திலும் இருந்த  காயங்களைக் காட்டி, அவை குண்டடி பட்டதால் ஏற்பட்டவை என்பதைக் கூறும் காணொளியை பகிர்ந்து கொண்டுள்ளது. செய்தியாளர்களாலோ, சாதாரண நபர்களாலோ எந்த ஒரு உறுதியான முடிவும் எடுக்க முடியாத நிலையில், தனிப்பட்ட விசாரணை உண்மையை நிலைநாட்டும் என அவரது குடும்பம் நம்புகிறது.

(www.thewire.in இணைய தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்