Aran Sei

டெல்லி கலவரத்தின் ஆறாத காயம் – இழப்பீடு பெறுவதே தண்டனையாக மாறியுள்ளது

த்து மாதங்களுக்கு முன், பிப்ரவரி 25 ம் நாள், வடகிழக்கு தில்லி, பழைய முஸ்தபாபாத் நகரில் வசிக்கும் கரீம் என்பவருக்கு, அவர் வேலைக்கு புறப்பட தயாராகிக் கொண்டிருக்கும் போது, அவரது கடையின் நில உரிமையாளர் கைப்பேசியில் அழைத்தார். 16 வருடங்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் குழுமத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றியவர் கரீம். 2017ல் தனது சேமிப்பு மற்றும் ஓய்வூதிய நிதியிலிருந்து பணத்தை எடுத்தும், மேலும் கடன் பெற்றும், தனது சொந்த வியாபாரத்தை ஆரம்பித்தார். மூன்று வருடங்கள் வலியைப் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து ஒரு மின்சாதன, மின்னணு கருவிகள் பழுதுபார்க்கும் கடையை நிறுவினார். தனது ஐந்து மகள்களின் கல்விச் செலவு போக, மீதியை தனது வளர்ந்து வரும் தொழிலில் முதலீடு செய்தார்.

அன்று காலை வந்த கைப்பேசி அழைப்பில், அவரது நில உரிமையாளர், ஒரு கும்பல் கடையை உடைத்து உள்ளே புகுந்து  கண்ணில் கண்டவற்றை எல்லாம் கொள்ளையடிப்பதாகக் கூறினார். அந்த கலவரக்காரர்கள்  திருடவில்லை, அவற்றை தெருவில் போட்டு எரித்தனர். அவர் மீண்டும் மீண்டும் “இங்கே  வராதே” என்று கூறினார்.

இதற்கு ஏறத்தாழ 48 மணி நேரத்திற்கு முன், சமீபத்தில் மோடல் நகரில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிடம் தோல்வியுற்ற பாஜகவைச் சேர்ந்த கபில் மிஸ்ரா, சந்த்பாக் மற்றும் ஜாஃப்ராபாத்தில் நடந்து வந்த சிஏஏ எதிர்ப்பு போராடத்தைக் கண்டித்து, ஒரு பேரணியை தலைமை தாங்கி நடத்தினார். அதே நாளில் காவலர்கள் சூழ வந்த மிஸ்ரா, தில்லி காவல்துறையினருக்கு (தொலைக்காட்சியிலும், தற்போது நீக்கப்பட்டுள்ள ட்வீட்டிலும்) ஒரு இறுதி எச்சரிக்கையை வெளியிட்டார். தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தான் சட்டவிரோத நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக மிரட்டினார். “மூன்று நாட்களுக்குள் இந்த பேராட்டக்கார்களை இங்கிருந்து அகற்றாவிட்டால், எங்களைத் தடுத்து நிறுத்துவதில் எந்த பயனும் இல்லை. நாங்கள், நீங்கள் சொல்வதைத் கூட கேட்க மாட்டோம்.” என்று காவல்துறையைப் பார்த்துக் கூறினார்.

அடுத்த நாள் காலையிலேயே, வடகிழக்கு தில்லியின் வீதிகளில் வன்முறை வெடித்தது. முதலில், கல்வீச்சு மட்டுமே நடப்பதாக செய்திகள் உலவின. ஆனால் இரவு வந்ததும் கொலை, கொள்ளை மற்றும் தாக்குதல்கள் யமுனா முழுவதும் நடைபெறுவதாகச்  செய்திகள் வந்தன. செய்திகளில் வன்முறை கலவரம் என்றே கூறப்பட்டது.

ஆனால் பிப்ரவரி 25 ல், காலையில் கரீமின் கடை சூறையாடப்பட்டது கலவரம் என்பது உண்மையில், ஒரு படுகொலை-முஸ்லீம்களுக்குச் சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் அவர்களுடைய வழிபாட்டு தலங்கள் மீது நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த இடைவிடாதத் தாக்குதல் என்பது தெளிவாகிவிட்டது. மூன்று நாட்கள் எந்தவித முழுமையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் தொடர்ந்து இந்த வன்முறை நடந்தது.

நில உரிமையாளரின் எச்சரிக்கைக்குப் பிறகும் கரீமால் அன்று காலை வீட்டில் இருக்க முடியவில்லை. தன் வீட்டின் பத்திரம், தனது பட்டயப்படிப்புச் சான்றிதழ், அடையாள அட்டைகள், விற்பனை வரவு செலவு தொடர்பான ரசீதுகள் போன்ற அனைத்து ஆவணங்களும் கடையில் தான் இருந்தன. குறைந்தது அவையாவது தொடப்படாமல் இருக்கும் என நம்பினார். வீட்டை விட்டு கடைக்குப் புறப்படும் முன், காவல்துறை உதவி எண்ணை பலமுறை அழைத்தார். அதனை அவர் பதிவும் செய்துள்ளார். அதில் பாதிக்கும் மேற்பட்ட அழைப்புகளுக்கு பதிலே கிடைக்கவில்லை. ‌ ஒரு அழைப்பில் கரீம், மகாலட்சுமி நகருக்கு படைகளை அனுப்புங்கள் என்று கெஞ்சுவதைக் கேட்கலாம். அங்குதான் அவருடைய கடை அடித்து நொறுக்கப்பட்டு, பொருட்கள் தீக்கிரையாக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“ஒரு கும்பல் முஸ்லீம்களின் கடையை அடையாளங்கண்டு கொளுத்தி வருகிறார்கள்” என்றார். அதற்கு மறுமுனையில் பதிலளித்தவர் ” 99% தீயணைக்கும் வண்டிகள் உங்கள் கடையை வந்தடையும்,”  என்றார். அடுத்து அவர் தெருக்கள் குறுகலாகவும் அடைக்கப்பட்டும் இருப்பதால் தீயணைப்பு வண்டிகள் உள்ளே நுழைவது சிரமமாக உள்ளது என்று கூறுகிறார். கரீம் மீண்டும் “குறைந்தது காவலர்களையாவது, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அல்லது யாரையாவது அனுப்புங்கள்” என்று கெஞ்சுகிறார்.  மறுமுனையிலிருந்து “வருகிறோம்! வருகிறோம்!” என்று கூறிவிட்டு இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

தூரத்திலிருந்தே, புகை வருவதை கரீம் கண்டார். இரண்டு நண்பர்களுடன் கடைக்கு வந்தபோது, ஒரு சில இளைஞர்கள், குவியலாக  தெருவில் புகைந்து கொண்டிருந்த மின் விளக்குகள், கைப்பேசிகள்,  நீட்டிப்பு வடங்கள் போன்றவற்றில் இன்னும் நன்றாக இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தனர். கரீம் தனது கடைக்குள் ஆவணங்கள் இருந்த பெட்டியைத் பார்த்தார். ஆனால் அது முற்றிலும் காலியாக இருந்ததைக் கண்டு, தெருவில் இருந்தவர்களிடம் யாராவது தனது ஆவணங்களைப் பார்த்தீர்களா அல்லது எடுத்து வைத்திருக்கிறீர்களா எனக் கேட்டார். எனது பட்டய படிப்புச் சான்றிதழ் மட்டும் போதும், வேறு ஒன்றும் வேண்டாம்; என்றார் கரீம். அங்கிருந்தவர்களில் ஒருவர், அவரது பட்டயப்படிப்பு சான்றிதழை வைத்திருந்தார். ஆனால் திருப்பிக் கொடுக்கவில்லை. கரீம் தனது கைப்பேசியை எடுத்து நாசமானவற்றை படம் பிடித்தார்.

உடனே அவரை ஒரு கும்பல் சுற்றி வளைத்தது. அதில் ஒருவன் ஒரு கத்தியை உருவி கரீமின் கழுத்து வரை நீட்டினான். பயங்கர முயற்சிக்குப் பின் இந்துக்களான நிலச் சொந்தக்காரரும் இரு நண்பர்களும், கரீமின் உயிரை அவர்களிடமிருந்து காப்பாற்றினர். அவர் கைப்பேசியில் இருந்த படங்களை நீக்கச் செய்துவிட்டு, அந்த கும்பல் மனம் மாறுவதற்குள் பாதுகாப்பாக தப்பி ஓடச் செய்தனர். தீயணைப்பு வண்டியோ, காவலர்களோ உதவிக்கு வரவே இல்லை.

அந்த மூன்று நாட்களின் கலவரத்தில், காவல்துறையினர் சரியான நேரத்தில் தலையிடுவதற்கான எண்ணம் சிறிதளவும் அல்லது முற்றிலும் இல்லை என்பது திடுக்கிடத்தக்க வகையில் தெளிவாகத் தெரிகிறது. வெறுப்பு மற்றும் தீங்கை விளைவிக்கும் பேச்சினால், வன்முறையைத் தூண்டி விட்ட மிஸ்ரா மீது வழக்குத் தொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும், (மேலும் கலவரத்தின் போது, வடகிழக்கு தில்லியின் முஸ்லீம்களின் வீடுகளைத் தாக்கியதாக மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட போதும்), கையில் ஆயுதங்களுடன் நின்றிருந்த சாதாரண ஆட்கள் அந்த அழைப்பை ஏற்று அடாவடியாக மிஸ்ராவுடனும், பிற அரசியல்வாதிகளுடனும் சென்றதை தில்லி காவல்துறை கண்டும் கண்ணை மூடித் திரும்பிக் கொண்டது.

தெருக்களை கும்பலின் கட்டுப்பாட்டில் விட்டு விட்டது. காவல்துறை துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் மற்றும் வேறு பல நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட அவர்கள் அணிக்குள்ளேயே யாருக்கும் கலகக்காரர்களைக் கைது செய்யும் விருப்பம் இருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. படுகொலையிலிருந்து தப்பியவர்கள் தில்லி காவல்துறையினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கான சாட்சியங்களான,  காவல்துறையில் பதிவு செய்த புகார்கள், நீதி மன்றத்தில், சட்ட உதவி தன்னார்வலர்கள், சமூக- மனோதத்துவ பராமரிப்பு ஆலோசகர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் நடத்திய உரையாடல்கள் ஆகியவற்றின் ஆவணங்கள், ஒரு அரசு தனது குடிமக்களுக்கு எதிராக திரும்பியதைக் கூறும் வரலாறு ஆகும்.

காவல்துறை அந்த இரக்கமற்ற குற்றச்செயல்கள் நடக்கும் போது, தங்களால் முடிந்த வரை அமைதியான பார்வையாளர்களாக இருந்ததையும், எந்த மக்களை பாதுகாக்கவும் எந்த மக்களுக்கு சேவை செய்யவும்  பணியிலமர்த்தப்பட்டார்களோ அவர்களை அடித்து, துன்புறுத்தி, ஆண்கள் மற்றும் பெண்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதையும் இந்த சாட்சியங்கள் விளக்குகின்றன.

கலவரத்தின் மூன்றாவது நாளன்று, தில்லி உயர்நீதிமன்றமே காவல்துறை தனது அரசியலமைப்பு கடமையைச் செய்வதிலிருந்து ஒட்டு மொத்தமாகப் தவறி விட்டதாகக் கவனித்து, பிப்ரவரி 26 இரவு ஒரு உத்தரவை வெளியிட்டது. அந்த உத்தரவு, நீதிமன்றம் தில்லி காவல்துறையினருக்கு தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சக்தியையும் பயன்படுத்தி, அமைதியை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த உத்தரவின்படி, அமைதியை நிலைநாட்டுவதை உறுதி செய்வதுடன், காயமடைந்தவர்கள் ஜிடிபி மருத்துவமனையில்  இல்லாவிட்டாலும், எல்என்ஜேபி மருத்துவமனையிலோ, அல்லது மௌலானா அசாத் அல்லது ஏதாவது ஒரு அரசு மருத்துவ மனையில் உடனடியாக அவசர சிகிச்சை பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும்” என்று அறிவுறுத்தியது. அதாவது தில்லி உயர்நீதிமன்றம் காவல்துறையை அதன் கடமையைச் செய்ய வேண்டும் என மிக எளிதாக நகை உணர்வுடன் கூறியுள்ளது.

அப்படியானால் தில்லி காவல்துறையினர் உண்மையிலேயே தகுதியற்றவர்கள் என நாம் நம்ப வேண்டுமா? அதற்கு காயமடைந்தவர்களைப் பாதுகாக்க வேண்டும், துன்புறுத்தப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற மிகவும் அடிப்படை பொறுப்புக்களை அடிக்கடி பள்ளிக்கு மட்டம் போடும்  பள்ளிச் சிறுவனுக்குக் கூறுவது போல  நினைவுப்படுத்த வேண்டுமா?

இது உண்மையானால், காவல்துறையில்  தீவிரமான அதன் பொறுப்பையும்  அதிகாரத்தையும் உணர்வதற்குமான செயல்பாட்டு முறை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டிய நேரம் இது. இது இல்லை என்றால், நமது தலைநகரக் காவல்துறை இந்த அளவு திறமையற்றது என்பதை ஏற்றுக் கொள்ள மறுப்பவர்களானால், அவர்கள் வன்மத்துடனும், கண்டனத்திற்குரிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் நிழலிலும் செயல்படுவதாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

காவல்துறை ஒத்துழைப்புடனான இழப்பீடு நடைமுறையின் நம்பகத்தன்மை.

2020, பிப்ரவரி 27 ல் தில்லி அரசாங்கம் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உதவித் திட்டத்தை வெளியிட்டது. மற்ற பிரிவுகளுக்குள், 50% வரையிலான இழப்பீட்டுத் தொகையை அறிவித்தது. (அதிகபட்சமாக ரூ.5,00,000 வரை) இது காப்பீடு செய்யப்படாத, கலவரத்தில் தப்பியவர்கள் தரும் சேதமதிப்பீட்டு அறிக்கைப் படி தரப்படும். இதற்கு அவர்கள் அரசுக்கு முதல் தகவல் அறிக்கையைக் கண்டிப்பாகத் தர வேண்டும். அதன்பிறகு இழப்பீட்டைக் கொடுக்கத் துவங்கலாம். சட்ட அமலாக்க அதிகாரிகள் மீது குற்றச் சாட்டுக்கள் வெள்ளமெனத் திரண்டிருக்கும் போது, ஒரு சிந்தனை மிக்க  நிர்வாகம் தனியாக ஒரு புனர்வாழ்வு திட்டத்தை அறிவித்திருக்கலாம். இது கலவரத்தில் தப்பித்தவர்கள் காவல்துறையுடன் மேற்கொள்ள வேண்டிய தொடர்பை வெகுவாக குறைத்திருக்கும் அல்லது குறைந்தது முற்றிலும் காவல்துறையை நம்பியே இருக்க வேண்டிய நிலையைத் தவிர்த்திருக்கும். இதற்கு மாறாக, இந்தத்  திட்டம் கொள்ளையடிக்கப்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் முதல் தகவல் அறிக்கையைக் கட்டாயமாக்கியது, கரீம் போன்றவர்களை தங்கள் வாழ்க்கையை நாசமாக்கியதில் ஓரளவாவது பொறுப்பாளிகளான, அதே அரசு அதிகாரிகளின் கைகளில் விட்டு விடுகிறது.

மேலும், காவல்துறையின் செயலற்றத்தன்மை மற்றும் ஈடுபாடு (குற்றச் செயலில்) நன்கு ஆவணப்படுத்தப்பட்டிருக்கையில், முதல் தகவல் அறிக்கையைக் கட்டாயமாக்கி இருப்பது, கலவரத்தில் தப்பித்தவர்களை வற்புறுத்துவதற்கும்,  அச்சுறுத்துவதற்கும் மற்றொரு வழியை திறந்து விட்டுள்ளது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு பெறும் நடைமுறை மேலும் ஒரு தண்டனையாக மாற்றியுள்ளது.

அரசியல் அமைப்பு சட்டப்படி, தில்லி காவல்துறை மத்திய அரசின் கீழ் வருவதால், இந்த திட்டம் காவல் துறையை நம்பி இருப்பது வியப்பிற்குரியது. ஒரு உண்மை என்னவென்றால், சட்டம் ஒழுங்கு தங்கள் கைகளில் இல்லை என தில்லி அரசு மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டே உள்ளது. இத்தகைய மோசமான உறவு நிலையில், தார்மீக, பகுத்தறிவு மற்றும் அரசியல் கட்டாயங்களையும் மீறி, தில்லி அரசு முற்றிலும் காவல்துறை ஒத்துழைப்புடன் செயல்படுத்த வேண்டிய ஒரு  திட்டத்தை ஏன் அறிவிக்க வேண்டும்?

பிறநாடுகளில், பாதிக்கப்பட்டவர்கள் கேட்பது மற்றும் அவர்களது உண்மையான சேத மதிப்பீடுகளை மூன்றாவது நபர் மறு ஆய்வு செய்யும் நிலையான நடைமுறை உள்ளது. இறுதி மதிப்பீடு செய்வதற்கு முன், பாதிக்கப்பட்டவர்களின் நிதி நிலை, அவர்களைப் பாதித்த மன மற்றும் உணர்வு அதிர்ச்சி  போன்ற அதனோடு தொடர்புடையவற்றையும் அந்த சுதந்திரமான மறு ஆய்வு செய்பவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தில்லி காவல்துறைக்கு, தப்பிப் பிழைத்தவர்களின், கேட்பின் (claim)  நியாயத்தின் தன்மையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருப்பதன் மூலம், பாகுபாடு பார்ப்பதை பல மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், நீதியை மறுப்பதற்கான மிகச் சரியான சூழலை உருவாக்குவதை வரவேற்பதாகவும் உள்ளது.

தனது கடை சூறையாடப்பட்ட நான்கு நாட்களுக்குப் பிறகு, 2020, பிப்ரவரி 29 ம் நாளன்று, கரீம், தயால்பூர் காவல் நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தார். அந்தப் புகாரில், திருடப்பட்ட மின் சாதனங்கள், மின்னணு பொருட்கள், பதிவேட்டின்படி இருந்த பணம் மற்றும் மரச்சாமான்கள் ஆகியவை உள்ளிட்ட இழப்பின் முழு விவரங்களைக் கொடுத்துள்ளார். அவற்றின் மொத்த மதிப்பு ஆறு லட்சம் ரூபாய் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்பிறகு வாரத்திற்கு பலமுறை கரீம்  காவல் நிலையம் சென்றுள்ளார். ஒவ்வொரு முறை செல்லும் போதும் அவரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளீர்களா என்றும், ஒவ்வொரு முறையும் இன்று போய்விட்டு இன்னொரு நாள் வரும்படியுமே கூறினர். மே மாதம் 20 ம் நாள், காவல் நிலையத்திலிருந்து அழைத்து பிப்ரவரி 25 ல் நடந்த நிகழ்வுகள் பற்றி ஒரு அறிக்கைத் தருமாறு கேட்டனர். இந்த முறையும் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கைப் பதிவு பற்றி கேட்டது தவிர வேறு எந்த பதிலையும் தரவில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில் ஏற்படுத்தும் இந்த நீண்ட கால தாமதங்கள், சட்டத்திற்கு முற்றிலும் எதிரானவை. உச்சநீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை நிர்வகிக்கும் விதிகளின் தொகுப்பான, லலிதா குமாரி வழிகாட்டுதல்கள், கடையை சூறையாடுவது போன்ற அறிந்த குற்றச் செயல்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் அல்லது சில தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் ஆறு வாரங்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள் அறியப்படாத குற்றமாக இருந்தால், காவல்துறையினர் ஒரு முதல்கட்ட விசாரணை மேற்கொள்ள வேண்டும். அது ஒரு வாரத்திற்குள் முடிக்கப்பட வேண்டும். அதைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது புகாரை மூடிவிடலாம்‌.

மேலும் ஒரு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வது, ஒரு புகார்தாரர் அந்த கேள்விக்குரிய குற்றத்திற்கான ஆதாரத்தை அளிக்க முடியுமா என்பதைப் பொறுத்ததல்ல. லலித குமாரி வழிகாட்டுதல்கள் இதுபற்றி மீண்டும் தெளிவைத் தருகிறது. முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யும் முன், குற்றத்தின் உண்மைத்தன்மை குறித்ததாக இருக்க முடியாது. மாறாக கூறப்படும் குற்றத்தின் தன்மையை அடிப்படையாகக் கொண்டது. அதாவது புகார், புலப்படும் குற்றத்தை வெளிபடுத்துகிறதா இல்லையா என்பதைப் பொறுத்தது.

தில்லி காவல்துறையின் ஒரு பிரதிநிதியான, தில்லி துணை முதல்வர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தின் ஆவணப்படுத்தப்பட்ட குறிப்புகளில், வாடகை ஒப்பந்தம், அல்லது புகார்தாரர் அந்த வீட்டில் குடியிருந்தார் என்பதற்கான பிற ஆதாரங்கள் கொடுத்தால் மட்டுமே, வீடு சூறையாடப்பட்டதற்கான முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய முடியும் என கூறியிருப்பதை  ஒருவர் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது ஏன்? காவல்துறையினர்  நீதிபதியோ, நடுவரோ அல்ல. இருந்தும் கூட இந்த உண்மை வடகிழக்கு தில்லி அதிகாரிகளிடம் முற்றிலும் தோற்றுவிட்டது.

மீண்டும் கேள்விக்கு வருவோம். இழப்பீட்டிற்கான விண்ணப்பத்தைப் பரிசிலிக்கும் போது எப்படி இருந்தாலும் துணைக் கோட்ட நீதிபதி அலுவலக அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இடத்தை பார்வையிட வேண்டிய கடமை உள்ளபோது முதல் தகவல் அறிக்கையை கட்டாயமாக்கியது ஏன்?  உயிர் பிழைத்த ஒருவர் கலவரக்காரர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடர விரும்புவது, கலவரக்காரரை அந்த இலக்கிற்கு உட்படுத்துவது, நிச்சயமாக அது அவரது சிறப்புரிமை. ஆனால் நூற்றுக்கணக்கானவர்களுக்கு  மீண்டும் தொடங்குவதற்கான ஆதாரங்களைத் தவிர வேறேதுவும் தேவையில்லை. ஏனெனில், குற்றவாளிகள் காவல்நிலையங்களில் குழப்பமின்றி வேலை செய்வதையும் அல்லது அடுத்த வீட்டில் வசிப்பவராக இருப்பதையும் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்தின் அதிகாரம் அவர்களுக்குப் பின்னால் இருப்பதையும் முழுதும் நன்கு  அறிந்துள்ளனர்.

ஜூன் கடைசி வாரத்தில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ஒரு பொது நல வழக்கறிஞரின் உதவியுடன் குற்றவியல் சட்டம் பிரிவு 156(3) ன் கீழ், கரீம் ஒரு விண்ணப்பத்தை கர்கர்டூமா நீதிமன்றத்தில் பதிவு செய்தார். நீதிமன்றம் அவரது சூறையாடப்பட்ட கடையை புலனாய்வு செய்து, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு உத்திரவிட்டது. ஒரு வாரத்திற்குப் பின், ஐந்து மாதம் நீதிமன்றத்தை அணுகியதன் மூலம் கரீமுக்கு  இறுதியாக முதல் தகவல் அறிக்கைப் பிரதி தரப்பட்டது. ஒரு புகாரின் மேல் காவல் துறை நடவடிக்கை எடுக்க பல மாதங்கள் காத்திருந்தது கரீமைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. இதன் தொடர்ச்சியாக கரீமின் கடை சூறையாடப்பட்டதற்கு இழப்பீடாக ஐயாயிரம் ரூபாய்  அறிவிக்கப்பட்டது. அதை கொடுக்கும் போது காவல்துறை அவரது புகார் பற்றி விசாரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யவில்லை. இத்தகைய வெளிப்படையான குறைகளையும் மீறி, காவல்துறையின் செயலற்ற தன்மையை ஒரு கணம் கூட கவனத்தில் கொள்ளாமல்,  சிறிதும் சொந்த அறிவைச் செலுத்தாமல் வெறும் ஐந்தாயிரம் ரூபாயை இழப்பீடாக  நிர்ணயித்தார்.

“நான் தன்னந்தனியாக நிற்கிறேன். காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய பல மாதங்கள் ஆனது மட்டுமல்ல, எங்களை எந்த அரசு அதிகாரியும் எதுவும் கேட்கவில்லை அல்லது வந்து எங்கள் குறைகளை கேட்கவில்லை, நாங்கள் எங்கள் சொந்த கால்களில் மீண்டும் எழுந்து நிற்க முயற்சி செய்யும்படி, தனியாக விட்டுவிட்டனர். மேலும் என்ன, கலவரம் என்னை மட்டும் நாசமாக்கவில்லை, அவர்கள் எங்கள் சமூகத்திற்குள்ளேயே  உறவுகளில் விரிசலை ஏற்படுத்திவிட்டனர். என்னைச் சுற்றி இருக்கும் நாட்டை என்னால் அடையாளம் காண்பது அரிது, எனது பாதுகாப்பிற்கும், எனது குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் கூட அது  அச்சுறுத்தலாக இருக்கிறது” என்கிறார் கரீம்.

இழப்பீடு நடைமுறையில் காவல்துறையை கட்டாயமாக சேர்த்தது என்பது தப்பிப் பிழைத்தவர்களுக்கு இழப்பீடு தருவதில் தன்னிச்சையான மிகப் பெரியத் தடையாக இருக்கிறது; இது அவர்களை பாதித்த நாசவேலைகளைச் செய்வதில் முக்கிய பங்காற்றிய நிறுவனத்திடமே, மீண்டும் செல்ல வேண்டிய அபாயகரமான நிலைமையில் வைத்து விட்டது.

மேலும் என்னவென்றால், கலவரங்களிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் துன்பங்கள் குறித்து, அரசின் கவலையற்ற அக்கறையின்மையைக் காட்டிக் கொடுக்கிறது‌. ஆண்களும் பெண்களும், மீண்டும் துவங்குவதற்கான முயற்சிகளை எதிர்கொள்ள, திட்டத்தின் மோசமான தேவைகளுக்காக, மூலைக்கு மூலை அலைய வேண்டும். முதல் தகவல் அறிக்கை கட்டாயம் என்பது அதில் ஒன்றே ஒன்றுதான்.

(www.thewire.in இணையதளத்தில் யஷ் கும்பட் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம் )

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்