Aran Sei

சின்னப்பம்பட்டி டூ சிட்னி – கிரிக்கெட்டில் இடஒதுக்கீடு அவசியமா? – நவநீத கண்ணன்

பிஎல்-இல் கோலி, தோனி, டி வில்லியர்ஸ் என அதிரடி பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை முக்கிய தருணத்தில் வீழ்த்தியது மட்டுமின்றி, தன் அணியான சன்ரைஸ்சர்ஸ் ஹைதராபாத்தின் பிரதான ஸ்ட்ரைக் வேகப்பந்து வீச்சாளராக மாறி, அணியின் பல வெற்றிகளுக்கு முக்கிய பங்கு வகித்தார் நடராஜன்.

ஐபிஎல்-இல் சிறப்பான தனித்திறனை வெளிப்படுத்தியதால், பிரட் லீ போன்ற புகழ்பெற்ற பந்துவீச்சு ஜாம்பவான்களிடமிருந்து கூட ‘யார்க்கர் கிங்’ என்று பாராட்டுகளைப் பெற்றாலும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் பயிற்சி பந்துவீச்சாளராகத்தான் (Net Reserved bowlers) முதலில் இடம் கிடைத்தது. பிறகு மற்றொரு தமிழக சுழல் பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகவே, நடராஜன் டி20-யில் மட்டும் அவர் இடத்தைப் பிடித்தார்.

ஒருநாள் போட்டிகளில் இடம்பிடித்த நவ்தீப் சைனிக்கு காயம் ஏற்பட வாய்ப்பிருக்கும் என்பதால் ஒருநாள் தொடரில் பேக்-அப் பவுளராக நடராஜனுக்கு இடம்கிடைத்தது. இந்திய அணி முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் படுதோல்வி அடையவும், மேலும், அதற்கு சைனி உள்ளிட்ட அனைத்து இந்திய பவுளர்களும் முக்கிய காரணமாக அமையவும், மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்புகளுக்கு நடுவிலே ஆடும் 11-ல் இடம் பிடித்தார் நடராஜன்.

“சராசரியாகவே 300 ரன்களுக்கு மேல் பேட்ஸ்மேன்களால் அடிக்கக்கூடிய, ஸ்விங்கிற்கு (Swing) பெரிதும் இடம் கொடுக்காத தட்டையான ஆஸ்திரேலிய பிட்ச்களாலும் (Flat wickets), களமிறங்கும் முதல் சர்வதேச போட்டி என்பதாலும் அவர்மீது அதிக எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டாம் என்றும், கடும் போட்டி நிறைந்த இந்திய கிரிக்கெட் அணியில் அடுத்தடுத்தப் போட்டிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அளவிற்கு ஒரு சராசரி பர்பாமென்ஸை அவர் வெளிப்படுத்தினாலே போதும்; அதுவே நமக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இருக்கும்” என்று கமெண்டரியில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்தார்.

அவர் கூறியதைப் போலவே பெரிய ஏமாற்றமின்றி நல்ல ஒரு தொடக்கப் போட்டியாகவே நடராஜனுக்கு தனது முதல் சர்வதேச போட்டி அமைந்தது. அதில் அவர் 70 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்திய அணியும் தொடர் ஒருநாள் தோல்விகளில் இருந்து மீண்டு வெற்றி அடைந்தது. குறிப்பாக முதல் இரண்டு போட்டிகளில் இந்திய பவுளர்கள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களின் முதல் விக்கெட்டை 20 ஓவர்கள் கழித்தே வீழ்ந்தியிருந்தனர். அதற்குள் அவர்கள் 120, 150 ரன்கள் முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப் போட்டு இந்திய பவுளர்களை துவம்சம் செய்திருந்தனர். ஆனால் நடராஜன் பங்கேற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6-ஆவது ஓவரிலேயே ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை ‘கிளீன் போல்ட்’ மூலம் எடுத்தது அணிக்கு உற்சாகம் அளித்தது. அந்த போட்டியில் அவர் 10 ஓவர்களையும் வீசி 70 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தாலும், முந்தைய போட்டியில் பங்கேற்ற சைனி 7 ஓவர்களிலேயே 70 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்திருந்திருப்பார். மேலும் முதலிரண்டு போட்டிகளில் பும்ரா, சமி, சகால் உட்பட அனைத்து பவுளர்களின் சராசரி பவுளிங் எகானமியே 7 ரன்களுக்கு மேல்தான். அந்தளவிற்கு இந்திய பவுளர்கள் ரன்களை வாரி வழங்கி தந்திருந்தும், விக்கெட்டுகளும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எடுக்கவில்லை. அதனுடன் ஒப்பிடுகையில் நடராஜன் ஆரம்ப போட்டியில் சிறப்பானதொரு தொடக்கத்தையே வழங்கினார்.

பெரும்பாலும் பவுளர்கள் சொந்த நாட்டில்தான் தங்களது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்குவார்கள். ஆனால் நடராஜனோ பழக்கப்படாத வெளிநாட்டு மண்ணில் அதுவும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் சர்வதேச தொடரை தொடங்கி தனது திறமையின் மூலம் ஆச்சரியப்படுத்தினார்.

நடராஜனின் டி20 விஸ்வரூபம்

கடைசி ஓருநாள் போட்டியில் சிறப்பானதொரு பங்களிப்பை செலுத்தியதாலும், பும்ரா உள்ளிட்டோருக்கு டெஸ்ட்டில் பங்கேற்பதற்காக ஓய்வு வழங்கப்பட்டதாலும், அனைவரும் எதிர்பார்த்தப்படி முதல் டி20 போட்டியிலேயே ஆடும் 11-ல் நடராஜன் இடம்பிடித்தார். இடம்பிடித்த கையோடு பவுளிங்கில் அதகளப்படுத்தி அறிமுகமான முதல் சர்வதேச தொடரிலேயே அந்நிய மண்ணில் அதுவும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக களங்கண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியும் மற்றும் குறைவான ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து சிக்கனமாக பந்துவீசி (Economical) சாதித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் “தொடர் நாயகன்” விருதையும் நிச்சயம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் ஹர்திக் பாண்டியாவிற்கு விருது வழங்கப்பட்டது.

எனினும் பாண்டியா தனக்கு வழங்கப்பட்ட “தொடர் நாயகன்” விருதை நடராஜனுக்கு கொடுத்து, “நடராஜன் நீங்கள் இந்த தொடரில் சிறந்து விளங்கினீர்கள். இந்தியாவுக்காக அறிமுகமான தொடரிலேயே கடினமான சூழலைப் பொருட்படுத்தாமல் அற்புதமாக செயல்பட்டது உங்கள் திறமை மற்றும் கடும் உழைப்பின் அளவைப் பேசுகிறது. என் சார்பாக இந்த தொடர் நாயகன் விருதைப் பெற நீங்கள் தகுதியானவர் என்பதால் உங்களிடமே அதை வழங்குகிறேன்” என்று தெரிவித்தார். இதைப்போன்று கேப்டன் விராட் கோலியும் தொடரை வென்ற கோப்பையை நடராஜனிடமே வழங்கி அவரைப் பெருமைப்படுத்தினார்.

நடராஜன், மூன்று டி20 போட்டிகளிலும் மொத்தமாக 12 ஓவர்கள் வீசி, 6 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, ஓவருக்கு சராசரியாக வெறும் 6.91 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். இது மற்ற எந்த இந்திய மற்றும் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளரும் இத்தொடரில் நெருங்க முடியாத சாதனையாகும். மேலும் நடராஜன் பெரும்பாலும் மத்திய ஓவர்களிலும் (Middle overs) இறுதி ஓவர்களிலுமே (Death overs) பந்து வீசுவதால் டி20 ஃபார்மெட்டில் இது மெச்சத்தக்க பர்பாமென்ஸாகும். அதிலும் குறிப்பாக நடராஜன் வீசிய 12 ஓவர்களில் வெறும் இரண்டே ஓவர்களில் மட்டுமே 10 ரன்களுக்கு மேல் பேட்ஸ்மேன்கள் அடித்துள்ளனர் (இரண்டு முறையும் – 11 ரன்கள், 3 ஆவது போட்டியில் அவரது கடைசி இரு ஓவர்கள்).

இத்தொடருக்கு முன்புவரை ‘நடராஜன் என்றால் துல்லியமாக யார்க்கர் வீசுவதில் வித்தகர், மற்றப்படி வேறு எந்தவித பவுளிங் திறனும் அவரிடம் இல்லை’ என்ற விமர்சனம் அவர்மீது இருந்தது. ஆனால் இரண்டாவது டி20 போட்டியில் அந்த விமர்சனங்கள் அனைத்தையும் தவிடு பொடியாக்கி கிட்டத்தட்ட ஒரு யார்க்கர்கூட போடாமல் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். (அதில் ஒரு விக்கெட் பவுன்சர் மூலம் பெற்றது). அப்போட்டியில் நடராஜனை தவிர அனைத்து இந்திய பவுளர்களையும் அடித்து துவம்சம் செய்து 194 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி.

என்னதான் ஒயிட் பால் கிரிக்கெட் (ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள்) பந்துவீச்சின் உச்சநிலையான ‘துல்லியமான யார்க்கர்’ வீசுவதில் வல்லவராக நடராஜன் விளங்குகிறார் என்றாலும், மணிக்கு 135 கி.மீ. மேல் நல்ல வேகத்தில் சரியான லைன் & லென்ங்த் பிடித்து பந்து வீசிவருவதும், டி20 பவுளர்களுக்கே தேவையான பல வேறியேசன்களும் (Variations) நடராஜனிடம் இருப்பதை இந்த ஆண்டு நடந்த ஐபிஎல்-லின் பிற்பகுதிகளில் பார்க்கமுடிந்தது. சில சமயங்களில் ஹைதராபாத் அணியின் கேப்டனானன வார்னர், நியூ பாலை நடராஜனிடம் வழங்கி முதல் ஓவர் வீச ஊக்கப்படுத்தியதையும் கண்டோம்.

ஆகவே நடராஜனை ‘யார்க்கர் கிங்’ என டி20 போட்டிகளுக்குள் மட்டும் அவரது திறமையை சுருக்கி விடாமல், விரைவில் அவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று ‘ஸ்விங், சீம், ரிவர்ஸ் ஸ்விங் பவுளிங்’ உள்ளிட்ட தனது பன்முகத்தன்மையை வெளிப்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கவேண்டும்.

இந்திய கிரிக்கெட்டின் அதிகார மையமும் ஜனநாயகப் பரவலின் அவசியமும்

அசாத்திய திறமை மிகுந்த, கடுமையாக உழைக்கக்கூடிய ஒரு எளிய குடும்ப பின்னணி உடைய கிரிக்கெட் வீரரை, இனங்கண்டு சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு வழங்கி அறிமுகப்படுத்தவே கிட்டத்தட்ட அவருக்கு 30 வயது ஆகிறதென்றால், இதற்கு பின்னால் இருக்கும் நுண்ணரசியலைப் பற்றி விவாதிப்பது அவசியமாகிறது. இங்குதான் சாதியும் வர்க்கமும் இந்திய கிரிக்கெட்டில் செலுத்தும் ஆதிக்கம் அம்பலமாகிறது.

இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனங்களுக்குள்ளும் அது அரசு நிறுவனமோ தனியார் நிறுவனமோ, சாதி ஒரு முக்கிய பங்கு வகிக்கத்தான் செய்கிறது. பல நிறுவனங்களில் சாதிய பிரச்சனைகள் நம் கண்ணுக்கு வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் அதைப்பற்றி உரையாடல் செய்கிறோம்.  சிலவற்றை கண்டும் காணாமல் விட்டுவிடுகிறோம். அப்படி நம் கண்ணுக்கு முன்னால் இருந்தும் பெரிதும் விவாதத்திற்கு உட்படுத்தாமல் தப்பித்துக் கொண்ட பிரமாண்டமான சந்தை நிறுவனம்தான் கிரிக்கெட்.

முழுக்க முழுக்க உயர்சாதி இந்துக்கள் மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினரின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் தான் இந்திய கிரிக்கெட் வாரியம் (BCCI). பெரும்பாலான வெகுஜன மக்கள் பார்த்து ரசிக்கும் கிரிக்கெட்டை கட்டுப்படுத்தும் ஜனநாயகப் பரவலற்ற இந்த அமைப்பின் அதிகார மையம் பற்றியும் அது மக்களிடையே ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்படுவது பற்றியும் சமூகநீதி பேசும் முற்போக்காளர்களேகூட பெரும்பாலும் கவனத்தில் கொள்வதில்லை.

2017 ஆம் ஆண்டு மத்திய சமூகநீதித்துறை அமைச்சரான ராமதாஸ் அத்வாலே, நாடாளுமன்றத்தில் “இந்திய கிரிக்கெட் அணியில் பட்டியல் சாதி மற்றும் பழங்குடி இன விளையாட்டு வீரர்களுக்கு 25% தனி இடஒதுக்கீடு வழங்கவேண்டும்” என்று ஒரு கோரிக்கை வைத்தார். அந்த சமயத்தில் இந்திய அணி பாகிஸ்தானுடன் நடந்த சேம்பியன்ஸ் ட்ரோப்பி இறுதிப்போட்டியில் படுதோல்வி அடைந்திருந்தது.

இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியில் சாதியை வைத்து வீரர்கள் தேர்வுசெய்யப்படுகிறார்களா என்று த சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற ஆஸ்திரேலிய பத்திரிக்கை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ரவி சாஸ்த்திரியிடமும் புகழ்பெற்ற முன்னால் வீரரான கவாஸ்கரிடமும் கருத்து கேட்கையில், அதைக் கடுமையாக மறுத்த அவர்கள் “இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவரது சாதி மற்றோருவருக்கு தெரியாது. அணியில் பெரும்பாலான பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதியினர் இருப்பதற்கு காரணம் அவர்கள் உயர்சாதியினர் என்பதால் அல்ல, அவர்கள் இந்தியர்கள் என்பதாலும், மேலும் அவர்கள் அனைவரும் திறமையானவர்கள் என்பதாலும்தான் அணியில் இடம்பெறுகின்றனர். இதற்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த விளையாட்டு இந்தியர்களிடையே பிரபலமாக உள்ளது மட்டும் தான் முக்கிய காரணம்” என்று ரவி சாஸ்திரி கருத்து தெரிவித்தார்.

ஆனால் அதே பத்திரிக்கையில் பேசிய தலித் செயல்பாட்டாளரான சிரியவன் ஆனந்த், இந்திய கிரிக்கெட்டிற்குள்ளும் சரி வெளியேவும் சரி, சாதிய ஆதிக்கம் நடைபெறுவதாகவும், அதற்கு உதாரணமாக சச்சின் டெண்டுல்கருக்கு இணையான திறமைவாய்ந்த பேட்ஸ்மேனான பட்டியல் சாதியைச் சேர்ந்த வினோத் காம்ப்ளே திடீரென இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து காணாமல் போனதையும், அவர் பல சதங்களை அடித்து சாதனைப் படைத்த போதிலும், தன் சொந்த மைதானமான மும்பை வாங்கடேவிலேயே மக்களால் கேளிக்கைக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கப்பட்டதாகவும், அதற்கு அவரின் சாதியும் நிறமும்தான் காரணமென அவரே சொல்லியிருப்பதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக ‘பொளாதார மற்றும் அரசியல் வாரஇதழ்’ (EPW) 2018-ல் வெளியிட்ட செய்தியில் “இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை களமிறங்கிய 289 வீரர்களில் வெறும் 4 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள். அதிலும் குறிப்பாக வினோத் காம்ப்ளே தவிர மீதமுள்ள 3 வீரர்கள் பந்துவீச்சாளர்கள். 2000-க்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானவர்களில் வெறும் 8 பேர்தான் முஸ்லிம் சிறுபான்மையினர் என்றும் தெரிவித்துள்ளது”.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் எவ்வாறு கருப்பினத்தவர்களுக்கு என்று குறிப்பிட்ட இடங்கள் வழங்கப்படுகின்றனவோ, அதுபோல் இந்திய கிரிக்கெட்டிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர் என சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வண்ணம் இடஒதுக்கீடு அறிமுகப்படுத்துவது அவசியம்.

அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தால், திறமை வாய்ந்த வீரர்கள் வாய்ப்பு கிடைக்காதோ என்ற ஆற்றாமையால் கடுமையாக உழைப்பதை தவிர்த்து கிரிக்கெட் கனவுகளை தொலைப்பது வெகுவாக குறையும். அதே சமயத்தில் உயர்சாதி -வர்க்கத்தினர் மட்டுமே அதிகம் இருப்பதால் மட்டும் இடஒதுக்கீடு கேட்கவில்லை. இந்தியாவில் பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் சாதி இளைஞர்கள், திறமை இருந்தும் கடுமையாக பயிற்சி பெற்று உழைக்க தயாராக இருந்தும் தங்கள் நாட்டின் கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க முடியாத அளவில் இரும்பு கதவடைத்து வெளியேற்றுவதும், அப்படியே இடம்பெற்றாலும் 30 வயதில் முதல் சர்வதேச போட்டியை விளையாடுவதும் என்னவென்று சொல்வது.

தென் ஆப்பிரிக்க அணியில் இடஒதுக்கீடு நடைமுறை சிறந்த கருப்பின வீரர்களை அந்த அணிக்கு வழங்கிவருகிறது. அது போலவே இந்தியாவிலும் நடைமுறைப்படுத்தப்பட்டால் சச்சின்களுக்கும் தோனிகளுக்கும் கோலிகளுக்கும் பும்ராகளுக்கும் ராஜ்புத்ர ஜடேஜாக்களுக்கும் பஞ்சம் இருக்காது.

இதனால் இந்திய அணியின் தகுதி திறமை கெட்டுவிடும், இதுவரை இந்திய அணி சர்வதேச அளவில் கட்டியமைத்திருக்கும் வளர்ச்சிகள், தரவரிசைகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்கிற வாதங்கள் வைக்கப்படும். ஆனால் போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கும் பட்சத்தில், எங்கு போய் அந்த தகுதி, திறமையை நிரூபிப்பது. சர்வதேச போட்டிகள், ஐபிஎல் போட்டிகள், ரஞ்சி போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகள் என அனைத்து வகையான போட்டிகளிலும் அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை அடிமட்டத்திலிருந்து செயல்படுத்தினால் அனைத்து சமூக மக்களையும் உள்ளடக்கிய இந்திய கிரிக்கெட் அணி கட்டமைக்கப்படும். அதுதான் உண்மையான கிரிக்கெட் வளர்ச்சியாகும். அந்த அனைவருக்குமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்தப் பிறகு வெல்லும் உலகக்கோப்பைதான் 130 கோடி மக்கள் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ஒவ்வொருவரையும் உள்ளடக்கிய வெற்றிக் கோப்பையாகும். அதுவரை வெல்லும் கோப்பைகள் எல்லாம் விளையாடும் 11 பேர் மட்டுமே வென்ற கோப்பைகள்தான். போட்டி நாளைத்தவிர்த்து அதன் சுக துக்கத்தில் மற்ற பல கோடி மக்கள் பங்குபெற ஏதுமில்லை.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்