Aran Sei

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் எது சிறந்தது?- உண்மையான அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

Image Credit : thewire.in

னவரி 14 ம் நாள் “பிரபல அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் 49 பேர்” கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்டது. அந்த கடிதம் “தேசிய மருந்து கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட, இரண்டு  கோவிட்19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை” என்று உறுதி அளித்தது. எனினும், அந்த கடிதத்தின் ஒரே குறிக்கோள், யாரெல்லாம் கேள்விக்குரிய கோவாக்சின், கோவிஷீல்டு என்ற அந்த இந்த இரண்டு தடுப்பூசிகளைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்களோ, அவர்கள் “சொந்த நலன்களை” கொண்டுள்ளனர் என்ற பதிலைக் கூறுவதாகவே இருந்தது. அந்த கடிதம், மருத்துவ சோதனை தரவுகள், வெளிப்படைத் தன்மை, பொதுமக்களுக்கான பொறுப்பு  ஆகியவைப்பற்றி கவலைப்படவில்லை.

கோவாக்சின் பற்றிய அடிப்படையான கேள்வி அது பாதுகாப்பற்றதா என்பதல்ல, மாறாக அது நம்பத்தகுந்ததா என்பதே. இதில் ஒரு மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு  மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியை ஈர்க்கும் திறன் ஆகியவற்றை சோதனை செய்ய, பாரத் பயோடெக் நிறுவனத்தால் நடத்தப்பட்ட  இரண்டாம் கட்ட சோதனைகளில் பங்கெடுத்தவர்களில், பல வகைப்பட்டவர்களை விட ஒரே மாதிரியானவர்கள் அதிகம் (1,125 க்கு சில நூறு பேர்களே). எனவே, பாரத் பயோடெக்கும் சுகாதார அமைச்சகமும், இந்த நம்பத்தகுந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என கூறிக் கொள்ள வாய்ப்புள்ளது.  எனினும், கோவாக்சின் நம்பத்தகுந்ததல்ல, ஏனெனில் பின்வரும் கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை:

1).  செயல்திறன் தரவு இன்றி, அதாவது மூன்றாம் கட்ட மருத்துவ சோதனை தரவுகள் இல்லாமலேயே எவ்வாறு இந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டது?

2). பாரத் பயோடெக் பயன்பாடு மற்றும் இறுதி ஒப்புதல் குறித்து விவாதித்தக் கூட்டத்தின் கூட்டக் குறிப்புகள் எங்கே?

3). கோவாக்சினுக்கு ஒப்புதல் அளிக்க, இந்திய மருந்து கட்டுப்பாட்ட கழகம் (டிஜிசிஐ) பயன்படுத்திய சொற்களுக்கு உண்மையில் என்ன பொருள்? அது, சிறிது ஆக்கபூர்வமான படைப்பு அல்லது எழுத்துநடை என்றே தோன்றுகிறது.

டிஜிசிஐ இந்த தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கிய போது, மேலும் ஒரு சர்ச்சை வெடித்தது. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா, சுமார் 24,000 பங்கேற்பாளர்கள் கோவாக்சினை மூன்று கட்டங்களிலும் பெற்றிருப்பதால், அது பாதுகாப்பானது எனக் கண்டுபிடிக்கப்பட்டதாகக்  கூறி உள்ளார். இது ஒரு பொறுப்பற்றக் கருத்தாகும். இது சந்தேகங்களை மேலும் அதிகரிக்கிறது. எடுத்துக்காட்டாக, சரியான மருந்தைத்தான் (trial’s blind) பங்கேற்பாளர்கள் பெற்றுள்ளனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து விட்டார்களா? அதாவது யார் தடுப்பூசியைப் பெற்றார்கள்? யார் மருந்துபோலியை பெற்றார்கள் என்பதை கண்டுபிடித்து விட்டார்களா?

மற்றொன்று, வெவ்வேறு நேர இடைவெளியில் (time points) வெவ்வேறு பங்கேற்பாளர்கள்  பதிவு செய்திருப்பார்கள். தடுப்பூசியின் செயல்திறன் பல சோதனை முனைகளில் மதிப்பீடு செய்யப் படுகின்றன. முதல் முறைக்கு 30 நிமிடம் கழித்து, ஒரு மணி நேரம் கழித்து, ஒரு வாரம் கழித்து, ஒரு மாதம் கழித்து என்று வழங்கப்படும். இதுபோன்று இரண்டாம் முறைக்கும் செய்யப்படும். ரன்தீப் குலேரியா கூறிய பாதுகாப்பு என்பது, எந்த நேர அளவீட்டிற்கு உரியது? இதற்கும் மேலாக,  ஒருவேளை அவர் 30 நிமிட நேர சோதனை இடைவெளியை குறிப்பிட்டிருந்தால், தடுப்பூசி 28 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தரப்பட்டதால் கிடைத்த தரவுகள் அடிப்படையில் அங்கீகாரம் தருவதற்கு அது பயனுடையதாக இருக்காது.

இந்த சர்ச்சை இத்துடன் நிற்கவில்லை. போபாலின் மக்கள் மருத்துவமனையிலிருந்து அடுத்த படுதோல்வி வந்தது. அங்கு சோதனை செய்யப்பட்ட பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைகள், கல்வி அறிவு பெறாதவர்கள், நகரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்பவர்கள், அதிலும் பலர் 1984 விஷவாயு சம்பவத்திலிருந்து தப்பித்தவர்கள். அவர்களுக்கு மருத்துவமனை தலா 750 ரூபாய் தருவதாக ஆசைகாட்டி கூட்டி வந்து கோவாக்சினை செலுத்தியதாக கூறுகின்றனர். அதிலும் அவர்களிடம் அது ஒரு சோதனை என்று சொல்லப்படவில்லை‌. சோதனைப் பங்கேற்பாளர்களுக்கு தரப்பட வேண்டிய சிறப்பு உரிமைகள், குறிப்பாக ஏதாவது மோசமான விளைவுகள் ஏற்பட்டால் தரப்பட வேண்டிய உரிமைகள் தரப்படவில்லை. எனவே, இந்த சோதனை நிறுத்தப்பட வேண்டும் என்கிறோம்.

ஆனால், பாரத் பயோடெக்கை ஒருங்கிணைந்து நிர்வகிக்கும் தம்பதியர் கிருஷ்ணா மற்றும் சுசித்ரா எல்லா, 14/1/20 அன்று இரவு, சிஎன்பிசி தொலைக்காட்சியில் ஒழுங்குமுறையாளருக்கே (regulator) சோதனையை நிறுத்தும் அதிகாரம் உள்ளது எனக் கூறினர். இது தவறு. சோதனையை நடத்துபவராக இருப்பதால், பாரத் பயோடெக்கே சோதனையை நிறுத்த முடியும். அது வேண்டாம் என்று முடிவு செய்தால், அதற்கு ஒழுங்கு முறையாளர் காரணமல்ல. பாரத் பயோடெக் விரும்பாததுதான் காரணம்.

அடுத்த பிரச்சனை சிறியதாக தொடங்கி, இன்று அதிக முக்கியத்துவம் பெற்றுவிட்டது. அது ஒரு கடிதம். அந்த கடிதத்தின் படி, கோவாக்சின் ஒப்புதலுக்கு ஆதரவான வாதங்களில் ஒன்று, அது ஒட்டு மொத்த வைரஸையும் செயலிழக்கச் செய்யும். அத்துடன் அதன் பிறழ்ந்த விகாரங்களுக்கு (Mutant) எதிராகவும் சிறந்த பாதுகாப்பு தரக்கூடும். ஏனெனில் நோய் எதிர்ப்பு வினை ஸ்பைக் புரதத்திற்கு எதிராக மட்டுமல்ல. பல நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி (Antigen) களுக்கு எதிராகவும் இருக்கக்கூடும். அதாவது கோவாக்சின். உடலை செயலற்ற வைரஸ்களுக்கு வெளிப்படுத்துகிறது. அத்துடன் உடலின் நோய் எதிர்ப்பு ஈர்ப்பை, நோய் எதிரணு உற்பத்தி ஊக்கி என கண்டுபிடிக்கும் வைரஸின் எந்த பகுதிக்கும் உடல் திருப்பிவிடும். எனவே வைரஸின் ஒரு பகுதியில் பிறழ்வு ஏற்பட்டாலும் கோவாக்சின் வைரஸின் வேறு பகுதிகளில் தொடர்ந்து நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.

இது ஊகம் என்பதை இப்போது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கோவாக்சின் இதுவரை மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவில்லை. மேலும், பல்வேறு வைரஸ் உருவங்களில் ஏற்படும் கோவில்19 நோய் தொற்றுக்களையும், அது எதிர் கொள்ள வேண்டும். இருப்பினும், இதே தடுப்பூசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றொரு தடுப்புமருந்து, தற்போது உலகளவில் 3 ஆம் கட்ட சோதனையில் உள்ளது.  சீன நிறுவனமான சினோவாக் உருவாக்கி உள்ள கொரோனாவாக், 50% முதல் 91% வரை செயல்திறனைக் கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் பலர் தெரிவிக்கின்றனர். 50% முடிவுகள் பிரேசிலில் நடைபெற்று வரும் ஆரம்ப கட்ட சோதனை முடிவுகளிலிருந்து வருவதாகவும், அவை உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதலைப் பெறத்  தேவையான செயல்திறனுக்கும் சற்று அதிகமான செயல்திறனை உடையதாகவும் கூறப்படுகிறது. தடுப்பூசிகளை ஒப்பிடுவது மிகவும் கடினம் . ஏனெனில் அதன் விவரக் குறிப்புகள் சோதனை அளவு, வடிவமைப்பு ,உள்ளூர் பங்கேற்பாளர்களின் மக்கள் தொகை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வெளிப்புற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

ஆனால் இந்த எச்சரிக்கையுடன், பிரேசிலின் முடிவு, கோவாக்சினின் ஒப்புதல், இது பல வைரஸ் விகாரங்களுக்கு எதிராக போராடக் கூடும் என்ற சந்தேகத்தின் காரண விளக்கத்தோடு மற்றும் பகுத்தறிவோடு அளிக்கிறது. எனவே நாங்கள் மீண்டும் கேட்கிறோம், செயல்திறன் தரவு எங்கே?

இறுதியாக, கோவாக்சின் ஒப்புதலை நியாயப்படுத்த டிஜிசிஐ இதுவரை கேள்விப்படாத சொற்களைப் பயன்படுத்தியது. “பொது நலனின் அவசரகால சூழ்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட ஏராளமான முன்னெச்சரிக்கையுடன், தடுப்பூசியை பயன்படுத்துவது,  குறிப்பாக வைரஸ் உருவங்கள், நோய் தொற்று விடயத்தில் மருத்துவ சோதனை பயன்முறையில் பல வாய்ப்புகளைத் தருகின்றன,” என்கிறார் ரன்தீப் குலேரியா. இதனையடுத்து இந்த குழப்பத்தின் ஒரு பகுதியாக கோவாக்சினை ஒரு “காப்புப் பிரதியாக (back-up)” பயன்படுத்தலாம் என கூறுகிறார். (எனினும் கிருஷ்ணாவும், எல்லாவும் இதனை ஜனவரி 4 ல் ஏற்க மறுத்துள்ளனர்)

இன்று, ஜனவரி16 ல்,  இந்திய அரசு தேசிய அளவிலான தடுப்பூசி இயக்கத்தைத் துவங்கிவிட்டது. இதன் தொடர்ச்சியாக சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து 110 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோ டெக்கிடமிருந்து 55 லட்சம் கோவாக்சின் மருந்துகளையும்  வாங்கி உள்ளது. அரசிற்கு எதற்காக 55 லட்சம் “காப்புப் பிரதி” தேவைப்படுகிறது? சில பத்தாயிரங்களே போதுமே?

மேலும்,15/1/21 அன்றுதான், சுகாதார அமைச்சகம்  இரண்டு மருந்துகளையும் உண்மையில் சமமாக கருதலாம் என, சில நாட்களுக்கு முன் கூறியதை, நிதி ஆயோக் உறுப்பினர் வினோத் கே‌.பால் உறுதி செய்தார். பிறகு ஏன் டிஜிசிஐ தலைவர், முற்றிலும் வெவ்வேறான சொற்களைப் பயன்படுத்தி தனது ஒப்புதலை தருகிறார்?

இவைகள்தான் இந்த தடுப்பூசிகள் நம்பத்தகுந்தவை அல்ல என்பதற்கான காரணங்கள். பல ஐயங்கள் உள்ளன. மக்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர்கள் தப்பிக்கும் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர் அல்லது வெறுமனே வாயை இறுக்கி மூடிக் கொள்கின்றனர். இதனால்தான் அறிவியலாளர்களும், மருத்துவர்களும் அவர்களோடு நெருங்கி “சொந்த நலன்கள்” என கத்துகிறார்கள். இது பிரச்சினையை மேலும் மோசமாக்கவே செய்யும்.

நல்ல அறிவியலுக்கும், தீய அறிவியலுக்கும் இடையிலான வேறுபாட்டை சுகாதார அமைச்சகம் புரிந்து கொள்ள என்ன தேவைப்படும்?  இவையிரண்டையும் ஜாடிக்கேற்ற மூடியாக எப்போதும் ஒன்றாகக் காட்டுவது  சாதாரண மனிதனுக்குப் புரியாது. ஆனால் இவை இரண்டும் சமூகத்துடன் எவ்வாறு பரஸ்பர வினையை மேற்கொள்கிறது என்பதைக் கொண்டு மக்கள் இதற்கிடையிலான வேறுபாடுகளை எப்போதும் கூற இயலும்.

எடுத்துக்காட்டாக, இந்தக் கடிதம் “தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா பெயர் பெறுவதற்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த இந்திய அறிவியல் சமூகத்தின் மீது, இத்தகைய கண்டிக்கும் சொற்கள் பெரும் நம்பகத்தன்மை நெருக்கடியை ஏற்படுத்துகின்றன” என்று கூறுகிறது.

அறிவியலாளர்கள், அவர்கள் செய்வதில் திறமையானவர்களாக இருக்கலாம், ஆனால் நல்ல அறிவியல் என்பது அவர்கள் எவ்வளவு நீண்ட காலம் அறிவியலாளர்களாக இருந்தார்கள் என்பதையோ, அவர்கள் எவ்வளவு ” சிறந்தவர்கள்” என்பதையோ பொறுத்தது அல்ல. அவர்களுடைய அறிவியல் வெளியீடுகள், தனித்தனியாக தொடர்ந்து பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியவை.  40 வயதானவுடனேயே திடீரென்று ஒரு அறிவியலாளரை அனைவரும் ஏதோ அவரை நம்ப வேண்டும் என்று கோருவதற்கான உரிமையை வழங்க முடியாது. 49 அறிவியலாளர்கள், தங்கள் சர்ச்சைக்குரிய கடிதத்தை மிகச்சிறந்த ஒன்றாக கருதுகிறார்கள் என்பது வேடிக்கையானது.

(www.thewire.in இணையதளத்தில் வாசுதேவன் முகுந்த் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்