Aran Sei

எழுவர் விடுதலை விவகாரம்: கூட்டாட்சி உரிமையை மறுத்துள்ள மத்திய அரசு – ஜெயராணி

’’மூன்று நாட்களில் மத்திய அரசு முடிவை சொல்லாவிட்டால், அனைவரையும் நானே விடுவிப்பேன்’’ – எழுவர் விடுதலைக்கான ஜெயலலிதாவின் குரல் சட்டமன்றத்தில் ஒலித்து நேற்றுடன் (19.02.2014) ஏழாண்டுகள் ஆகின்றன. ஒரு மாநில அரசு தனது உரிமையை நிலைநாட்டுவதற்கு எத்தகைய பிடிவாதத்தோடு இருக்க வேண்டுமென்பதற்கான எடுத்துக்காட்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் அறைகூவல் எனலாம். முல்லைப் பெரியாறு, காவிரி நீட் பிரச்சனைகளிலும் அவர் இதே பிடிவாதத்தோடு தான் இருந்தார். ஆனால், டிசம்பர் 2016ல் ஜெயலலிதாவின் திடீர் மரணத்திற்கு பிறகு ஆளும் கட்சியான அ.தி.மு.க முதுகெலும்பற்றதாக மாறிப் போனது. தமிழக நலன் மற்றும் உரிமை சார்ந்த எல்லா பிரச்சனைகளிலும் மத்திய அரசை எந்த கேள்வியும் கேட்காமல் தன்னை அடமானம் வைத்துவிட்டவராக வலம் வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.  குறிப்பாக எழுவர் விடுதலையை நனவாக்க ஜெயலலிதா முன்னெடுத்த முயற்சிகளை எல்லாம் குழிதோண்டி புதைத்துவிட்டு, எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிந்து கிடக்கிறார்.

பேரறிவாளன் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு திருப்பிவிட்டு எழுவர் விடுதலைக்கான தமிழக அமைச்சரவையின் தீர்மானம் மீதான தனது முடிவு குறித்து கள்ள மவுனம் சாதிக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான இச்செயல் குறித்தும் தனது அமைச்சரவைக்கு உண்டாக்கப்பட்ட அவமானம் குறித்தும் தமிழக அரசுக்கு எந்த கவலையும் இல்லை என்பது உண்மையாகவே வெட்கக்கேடானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் தீர்மானத்தை நிராகரிக்கிற அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்படவில்லை. அமைச்சரவையின் எந்த தீர்மானத்திற்கும் ஒப்புதல் அளிக்கும் வாய்ப்பு மட்டுமே அவருக்கு உண்டு. இதன் அர்த்தம் ஒப்புதல் அளித்தே ஆக வேண்டுமென்பதுதான். தாமதிக்கலாம், இழுத்தடிக்கலாம் ஆனால் அமைச்சரவை தீர்மானத்தை நிராகரிக்க முடியாது. பேரறிவாளனின் கருணை மனு மீது தான் முடிவெடுக்க முடியாது என ஆளுநர் அறிவித்த போது அமைச்சரவைத் தீர்மானம் என்னவாயிற்று என்றும் அதுவும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா எனவும் அரசியல்வாதிகள் உட்பட யாருமே கேள்வி எழுப்பவில்லை.

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசு தலைவருக்கே உண்டு – 2 ஆண்டுகள் இழுத்தடிப்புக்கு பிறகு ஆளுநர் கருத்து

பேரறிவாளன் விடுதலையில் மாநில அரசு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்ட நிலையிலும் இவர்கள் ஆளுநரிடம் மன்றாடிக் கொண்டிருப்பது அடிமைத்தனத்தின் உச்சம்.  இப்போது “குடியரசுத் தலைவரின் முடிவிற்காக இவர்கள் பார்த்திருப்பதாக” சொல்வது மக்களாட்சித் தத்துவத்திற்கே அவமானத்தை உண்டாக்குவது.

ஆளுநர் என்பவர் யார்? அவர் மத்திய அரசின் பிரதிநிதி அல்ல; உண்மையில் அவர் மாநிலத்திற்கானத் தலைவர். அரசமைப்புக்கு கட்டுப்பட்டவர். மாநில அரசின் கொள்கைகளின்படி செயல்பட வேண்டியவர். எந்த கட்சி சார்பும் இன்றி பொதுவான நபராக அவர் இருக்க வேண்டுமென்பதுதான் விதிமுறை. ஆனால் மத்தியில் ஆட்சிக்கு வரும் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் அரசியல் சார்பு பின்னணி கொண்டவர்களுக்கே பெரும்பாலும் ஆளுநர் பதவி வழங்கப்படுவதால் மாநில உரிமையை மத்திய அரசு எளிதாக நெரித்துக் கொல்ல ஆளுநர்கள் ஒரு கருவியாக செயல்படுகின்றனர்.

1999 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவி தூக்கு தண்டனை பெற்ற மூவரின் கருணை மனுக்களை நிராகரித்த போது தமிழக அரசோ பொதுச் சமூகமோ அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் இன்று அந்த மனநிலையும் காலமும் மாறியிருக்கிறது எனில் அதற்கு இவ்வழக்கில் நிகழ்ந்த மாற்றங்களும் திருப்பங்களுமே காரணம். ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் தீவிரமான குளறுபடிகள் இருப்பதை வழக்கை விசாரித்த நீதிபதிகளும் விசாரணை அதிகாரிகளுமே ஒப்புக் கொண்டுவிட்ட நிலையில் முடிவற்ற தண்டனையில் எழுவரையும் உழலவிடுவது அநீதியின் உச்சமென்ற பொதுக் கருத்தும் புரிதலும் உண்டானது.

குறிப்பாக ராஜீவ் வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தை பதிவு செய்த போது தான் இழைத்த தவறை வெளிப்படையாக ஒப்புக் கொண்டப் பின்னர் ’’இவர்களே குற்றவாளி’’ என்ற ஆணித்தரமான நம்பிக்கை ஆட்டங்கண்டது. இவ்வழக்கு விசாரணையில் குளறுபடிகளும் திரிபுகளும் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. கட்சிகளை கடந்து அரசியல் தளத்தில் உரத்த குரல்கள் எழுந்தன. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் கூட, ’’இவ்வழக்கில் மறுவிசாரணை வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.

ஜெயலலிதா எழுவர் விடுதலையில் புதிய உற்சாகத்தைப் பெற்றதும் அதன் பிறகுதான். ஆயுள் சிறைவாசிகளின் விடுதலையைப் பொறுத்த வரை உரிய அரசு என்பது மாநில அரசுதான் என்பதால் எழுவர் விடுதலைக்கும் அதுவே பொருந்தும் என ஜெயலலிதா நினைத்தார். ஆனால் பிப்ரவரி 18, 2014 மூவர் தூக்கு குறைப்பு தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவின் கீழ் விடுதலையை பரிசீலிக்கலாம் என சொன்னதால் இவ்வழக்கு சி.பி.ஐ.யினரால் விசாரிக்கப்பட்டதால் மத்திய அரசின் கருத்து கேட்டு கடிதம் எழுதினார்.

பேரறிவாளனை மன்னித்து இந்தக் கொடூரமான விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் – பாடகர் டி.எம்.கிருஷ்ணா

சட்டமன்றத்தில் அவர் தனது பாணியில் கணீரென அறிவித்த போது விடுதலையை வேண்டி நிற்கும் எழுவருக்கு மட்டுமல்ல, மகனின் விடுதலைக்காக ஓயாமல் போராடும் அற்புதம்மாளுக்கு மட்டுமல்ல, எழுவர் விடுதலையைக் கோரி பன்னெடுங்காலமாக போராடும் தமிகத்தின் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அவ்வளவு ஏன் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கே அது நம்ப முடியாத வகையில் நன்னாளாக அமைந்தது. ஜெயலலிதா அவரது பிடிவாத குணத்திற்காகவும் தான் எடுத்த முடிவில் சமரசமற்றப் போக்கிற்கும் அறியப்பட்டவர் என்பதால் எழுவர் விடுதலை, ’’இதோ சாத்தியப்பட்டுவிடும்’’ என்றே தமிழகம் அப்போது நம்பியது.

ஆனால், பிரிவு 435 இன் படி ’கருத்து’ சொல்ல வேண்டிய அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்திற்கு போய் ஜெயலலிதா அரசின் அமைச்சரவை முடிவிற்கு தடை வாங்கிய போது இன்னொரு பெருஞ்சுழலுக்குள் இவ்வழக்கு இழுத்துவிடப்பட்டது. கூட்டாட்சி முறையில் மாநில அரசிற்கும் மத்திய அரசிற்கும் ஓர் உறவை நிலை நிறுத்தும் வகையில் ’சம்பிரதாயத்திற்காக’ கொடுக்கப்பட்ட முக்கியத்துவங்களில் எல்லாம் மத்திய அரசு தன்னைத் தானே ’பேரரசராக’க் கருதிக் கொண்டு மாநில அரசின் அதிகாரத்தையும் உரிமைகளையும் முடக்குவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான பாசிசச் செயல்பாடு என தொடர்ந்து விமர்சனங்கள் வைக்கப்பட்ட போதும் அதை மத்திய அரசு கண்டுகொள்வதாக இல்லை.

அதன் பின்னர் தான் மாநில அரசா, மத்திய அரசா, எழுவர் விடுதலையில் யாருக்கு அதிகாரம் என்ற பட்டிமன்றம் தொடங்கியது. மாநில அரசுக்கு அதிகாரமில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மல்லுக்கு நிற்க ஜெயலலிதாவும் உரிமைக்காக சட்டப் போராட்டம் நடத்தக் களமிறங்கினார். மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதியை அமர்த்தி வழக்கை அவர் எதிர்கொண்டதை வைத்து அவர் இப்பிரச்சனையில் எவ்வளவு முனைப்போடு இருந்தார் என்பதை புரிந்து கொள்ளலாம். ஜெயலலிதா எழுவர் விடுதலையிலும்கூட மாநில உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்பதையே இது தெள்ளத் தெளிவாக உணர்த்தியது.

‘பேரறிவாளனை விடுதலை செய்யுங்கள்’ – தமிழகத்தில் உரக்க ஒலிக்கும் குரல்கள்

ஆனால் 2015, டிசம்பர் மாதம் இவ்வழக்கில் தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு குற்றவியல் முறைச் சட்டம் பிரிவு 435(1) இல் குறிப்பிடப்பட்டுள்ள ’’மத்திய அரசின் கருத்தை கேட்க வேண்டும்’’ என்பதற்கானப் பொருள் ’ஒப்புதல்’ என்றேயாகும் என்று சொல்லிவிட, எழுவர் விடுதலை மீண்டும் கேள்விக்குறியானது. ஆனாலும் ஜெயலலிதா ஓய்ந்துவிடவில்லை. 2016 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றியடைந்து ஆட்சியை கைப்பற்றியப் பிறகு மீண்டும் அவர் மார்ச் 02, 2016 எழுவர் விடுதலையில் கருத்துக் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்.

மூவர் அமர்வின் விசாரணைக்கு விடுதலை வழக்கு திருப்பிவிடப்பட்ட நிலையில் கெட்டவாய்ப்பாக ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவினால் மரணமடைந்தார். காலம் அவ்வளவு அழகாக கணிந்து வந்திருக்கும் இன்றைய சூழலில், 06.09.2018ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு பிறகு ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் காட்டிய பிடிவாதத்திற்கு எழுவர் விடுதலை நிச்சயம் சாத்தியப்பட்டிருக்கும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

ஜெயலலிதா மீது ஆயிரமாயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் அந்த காலக்கட்டத்தில் மாநில உரிமை சார்ந்த எந்த பிரச்சனைகளிலும் அவர் மத்திய அரசிடம் மண்டியிடத் தயாராக இல்லை என்பதே உண்மையாக இருந்தது. மத்திய அரசுடன் முரண்பட்டு அதை எதிர்த்து நின்று மாநில உரிமைகளுக்காக போராட தொடங்கிய பிறகே மம்தா பானர்ஜி, மாயாவதியைப் போல ஒரு தேசிய ஆளுமையாக அவர் பார்க்கப்பட்டார்.

1999 ஆம் ஆண்டு இவ்வழக்கில் தடா சட்டப்பிரிவு செல்லாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு – இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் மட்டுமே இவர்கள் மீது எஞ்சியது. அந்த அடிப்படையில் பார்த்தால், எழுவரையும் விடுதலை செய்யும் அதிகாரம் சட்டப்படி தமிழக அரசிற்கே உரித்தானதாகிறது. இருந்த போதும் சட்டத்திற்கு புறம்பாக எழுவர் விடுதலையில் மத்திய அரசு பிடிவாதமாகத் தனது அதிகாரத்தை நிலைநிறுத்தத் துடிப்பதன் காரணம் தான் சந்தேகத்திற்கிடமானதாக இருக்கிறது. மத்திய அரசின் இரட்டை வேடத்தை எளிதான ஓர் ஒப்பீட்டோடு புரிய வைக்க வேண்டுமெனில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சஞ்சய் தத் விடுதலையை எடுத்துக் கொள்ளலாம். சஞ்சய் தத் மத்திய அரசின் ஆளுகைக்குட்பட்ட ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் ஜந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்றவர். ஆனால் தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே 2016 ஆம் ஆண்டு 256 நாட்கள் தண்டனை கழிவு வழங்கி மகாராஷ்டிர அரசு அவரை முன் விடுதலை செய்தது. மத்திய அரசின் ஆளுகையின் கீழ் வரும் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற சஞ்சய் தத்தை விடுவிக்க மத்திய அரசிடம் மகாராஷ்டிர அரசு அனுமதியைக் கோரவும் இல்லை, பெறவும் இல்லை. சட்டத்தை நிலைநாட்டவும் தனக்குரிய அதிகாரத்தைக் காப்பாற்றவும் மட்டுமே மத்திய அரசு எழுவர் விடுதலைக்கு தடையாக இருக்கிறதெனில் சஞ்சய் தத் விடுதலைக்கு ஏன் தடை விதிக்கவில்லை? மகாராஷ்டிர மாநில அரசுக்கு எதிராக ஏன் வழக்குத் தொடுக்கவில்லை? தனது அதிகாரம் பறிக்கப்பட்டது குறித்து ஏன் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை?

257 பேர் கொல்லப்பட்டு 2000த்திற்கும் அதிகமானோர் கொடூரமாகக் காயமடைந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் சஞ்சய் தத். அந்த குற்றத்தை மத்திய அரசு ஏன் அவ்வளவு அலட்சியமாக கையாண்டது? பாதிக்கப்பட்டக் குடும்பங்களுக்கு அவரது விடுதலை வேதனையை உண்டாக்கியிருக்காதா? தனது அதிகாரத்தை மகாராஷ்டிர மாநில அரசு அப்பட்டமாக மீறுவதை அனுமதித்த நிலையில் மாநில அரசுக்கு உரிமை இருந்தும் தமிழகத்தின் கழுத்தை மட்டுமே ஏன் திருகிப் பிடிக்கிறது? முன்னாள் பிரதமர் உயிர் சாமானிய மக்களின் உயிரை விட உயர்வானதா, என்ன? பதவி மற்றும் பெருமைகளை வைத்துதான் உயிரின் மதிப்பும் அளவிடப்படுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் ’தேசத் தந்தை’யைக் கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற கோபால் கோட்ஷே 14 ஆண்டுகால சிறைத் தண்டனைக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார் தானே?! இந்நிலையில் இந்த ஏழு பேர் மட்டும் 30 ஆண்டுகள் கழித்தும் சிறைக் கொட்டடியிலேயே செத்து மடிய வேண்டுமென மத்திய அரசு ஏன் நினைக்கிறது? இவ்வழக்கில் ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூடி மறைக்கப்பட்ட உண்மைகளும் எம்.டி.எம்.ஏ விசாரணையில் அமிழ்த்தப்பட்ட சதிகளும் வெளிவந்துவிடும் என பயப்படுகிறதா மத்திய பா.ஜ.க. அரசு?

சுதந்திர இந்தியாவில் மாநில உரிமைக்காக எப்போதும் போராடிய இப்போதும் போராடுகிற அதை அவ்வளவு எளிதில் விட்டுக் கொடுக்காத மாநிலங்களில் தமிழகமே முதன்மையானது எனில் அது மிகையல்ல. சமூக நீதி, மொழி உரிமை, கல்வி உரிமை, பொது விநியோகத் திட்டம், பெண்கள், தொழிலாளர், குழந்தைகள் நலத் திட்டங்களில் தமிழகம் தனது உரிமையை கடந்த 50 ஆண்டுகளாக நிலைநாட்டியே வந்திருக்கிறது. ஆனால், வேறுபாடுகளும் பிறப்பின் அடிப்படையிலான பிரிவினைவாதமும் ஆழமாக வேரூன்றிய இந்திய தேசத்தில் மாநில உரிமையை பாதுகாத்தல் என்பது எப்போதுமே ஒரு பெரும் போராட்டம்தான். 1956 இல் மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டதிலிருந்தே அந்த போராட்டம் தொடங்கிவிட்டது எனலாம். வலிமையான மற்றும் கொள்கைப் பிடிப்புள்ள கட்சியும் ஆளுமைமிக்க தலைமையும் இருந்தால் மட்டுமே மத்திய அரசின் ஏகபோக சூழ்ச்சியை எக்காலத்திலும் எதிர்கொள்ள முடியும் என்பதே பன்முகத்தன்மை கொண்ட இத்தேசத்தின் நிலை.

30.12.2015 அன்று அரசமைப்புச் சட்டக் கூறு 161 இன் கீழ் தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் ஆளுநருக்கு மனு அனுப்பினார். ஆனால், ஆளுநர் அதை கண்டுகொள்ளவில்லை. பேரறிவாளன் இது பற்றி உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததை தொடர்ந்ததை அடுத்து 06.09.2018 அன்று மூன்று நீதிபதிகள் அமர்வு ’’பேரறிவாளன் விடுதலையில் மாநில அரசு சுதந்திரமாக முடிவெடுக்கலாம்’’ என்று தீர்ப்பளித்தது. நியாயப்படியும் சட்டப்படியும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வந்த மறுநொடியே பேரறிவாளனை விடுவித்திருக்க வேண்டும். மாநில அரசு சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்பதற்கு வேறென்ன அர்த்தமிருக்க முடியும்? பேரறிவாளன் தனது வழக்கிற்காக, விடுதலைக்காக போராடுகிறார்; வழக்கிடுகிறார். தீர்ப்பும் அவரது வழக்கின் தனித்துவத்தின் அடிப்படையில் அவரது முன்விடுதலைக்கானது. உச்சநீதிமன்றத் தீர்ப்பினை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்திருக்குமானால் பழனிச்சாமி அரசு அரசமைப்பு உறுப்பு 161 இன் கீழ் மாநில உரிமையை நிலைநாட்ட வழி பிறந்திருக்கும்.

ஆனால் அதீத அரசியல் நோக்கோடு அதே நேரம் அதனை நிறைவேற்ற முதுகெலும்பற்ற பழனிச்சாமி அரசு ஏழுவரையும் விடுதலை செய்ய பரிந்துரைப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது. பேரறிவாளனை விடுதலை செய்துவிட்டு மீதமுள்ள ஆறு பேருக்குமான தீர்மானம் அடுத்தடுத்து நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். ஆளுநரிடம் மொத்தமாக சென்றால் ஒரு போதும் நீதி கிடைக்காது என்று தெரிந்தே அந்த சுழலுக்குள் இதனை வீழ்த்தியது மாநில அரசு.

ஜெயலலிதாவின் பெயர் சொல்லி ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிச்சாமி தனது தலைவியைப் போல சுயமாக, துடிப்புடன் இப்பிரச்சனையை அணுகவில்லை. எழுவர் விடுதலையில் எடப்பாடி அரசு ஓர் அடிமை அரசாகவே செயல்பட்டு வருவதை தமிழகம் வேதனையோடு பார்க்கிறது. எழுவர் விடுதலை தீர்மானத்தை ஆளுநர் 29 மாதங்கள் கிடப்பில் போட்டுவிட்டு, ’’எம்.டி.எம்.ஏ. இறுதி அறிக்கையை பார்த்துவிட்டே முடிவெடுப்பேன்’’ என்று சொன்ன போது, ’’நல்லதாய் போயிற்று’’ என அதையே வழிமொழிந்து தப்பித்துக் கொண்டது தமிழக அரசு. ஜெயலலிதாவைப் போல உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் செல்லவில்லை.

உண்மையில் அரசமைப்பை அவமதிக்கும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்திருக்க வேண்டும். மாநில சுயாட்சி உரிமைகளுக்காக வியத்தகு போராட்டங்களை முன்னெடுத்த வரலாற்றை கொண்ட தி.மு.க.வோ ஜனாதிபதியை சந்திக்கத் தயார் என்கிறது. உண்மையாகவே புரியவில்லை. அமைச்சரவையின் பலம், உரிமை, அதிகாரம் பற்றியெல்லாம் தெரியாமலே இவர்கள் அரசியல் செய்கிறார்களா என்ன? ’’அமைச்சரவை தீர்மானத்தில் முடிவெடுக்க ஆளுநர் தாமதிக்கலாம் ஆனால் மறுக்க முடியாது’’ என சட்ட வல்லுநர்களும் அரசியல் நோக்கர்களும் பலமுறை பல வழிகளிலும் தெளிவுபடுத்திவிட்ட நிலையில் ஆளுங்கட்சிக்கோ எதிர்க்கட்சிக்கோ அது அதிர்ச்சியை அளிக்காததும் அரசமைப்பை நிலைநாட்ட கிளர்ச்சியை உண்டாக்காததும் உண்மையாகவே வியப்பளிக்கிறது.

ஒரு சம்பிரதாயத்திற்காகவே அமைச்சரவைத் தீர்மானங்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆளுநர் அதை நிராகரிக்கும் போதோ கால வரையின்றி கிடப்பில் போடும் போதோ மாநில அரசின் அமைச்சரவைக்கு தனது அதிகாரத்தை நிலைநாட்டும் துணிவிருக்க வேண்டும். ஆளுநர் பேரறிவாளன் மனுவை நிராகரித்த நிலையில் தமிழக அரசுக்கு தனது அதிகாரத்தை நிலைநிறுத்த மீண்டும் அருமையானதொரு வாய்ப்பு உருவானது. மறுபடியும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பேரறிவாளனை தானாகவே விடுதலை செய்வதுதான் அது. தொடர்ந்து ஏனைய அறுவரையும் கூட அவ்வாறு விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. தமிழகத்தில் இதற்கு முன்னர் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழ்த் தேசிய இயக்க தலைவர் தோழர் தியாகுவை முன் விடுதலை செய்து அப்படியொரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆனால், அதற்கெல்லாம் ஒரு தலைமைப் பண்பும் துணிச்சலும் தேவை.

2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் எழுவர் விடுதலையையும் ஒரு முக்கியத் திட்டமாக குறிப்பிட்டிருந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால், தேர்தலுக்கு பின்னர் அது சார்ந்து தானாக எந்த முன்னெடுப்பும் செய்யவில்லை. பேரறிவாளன் தொடுக்கிற வழக்குகள் மற்றும் அனுப்புகிற மனுக்களுக்காக பதில் பேச வேண்டிய நிலை வந்தால் பேசுவது என்ற அளவிலேயே முதலமைச்சரும் அமைச்சரவையும் செயல்படுகின்றனர். ஆளுநரின் தற்போதைய முடிவு குறித்து, அதாவது அவர் பேரறிவாளனின் கருணை மனுவை மட்டும் நிராகரித்தாரா அல்லது அமைச்சரவையின் பரிந்துரையையும் சேர்த்தா என்பதை கூட அரசு கேட்க தயாராக இல்லை. மீண்டும் இதுகுறித்து பேரறிவாளன்தான் ஆளுநர் அலுவலகத்தில் தகவல்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளார்.

ஜெயலலிதாவின் துணிவிலும் மாநில உரிமைகள் பற்றிய புரிதலிலும் ஒரு சதவிகிதமேனும் அவர் பெயர் சொல்லி ஆட்சி நடத்துகிறவர்களுக்கு இருக்குமானால் மாநில உரிமைகளை பறித்தெடுக்கும் இன்றைய அவலம் நேர்ந்திருக்காது. முதுகெலும்பற்ற மக்கள் விரோத, மாநில உரிமைகளுக்கு எதிரான அரசு இன்றைய மாநில அரசு என்பது எழுவர் விடுதலை விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க நினைக்கும் திமுகவிற்கும் இது எச்சரிக்கையாகும்.

ஆள்கிறவர்களின் அறியாமையும் அடிமை மனநிலையும் தமிழகத்தை எத்தகைய படுகுழியில் தள்ளக்கூடும் என்பதற்கான ஆபத்தான எடுத்துக்காட்டு பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையின் நிலை. இதுவே தான் தமிழகத்தின் நலன் சார்ந்த இனிவரும் எல்லா பிரச்சனைகளிலும் பிரதிபலிக்கும். ஆனால் எந்த கட்சியும் அந்த பேராபத்தை உணர்ந்ததாகத் தெரியவில்லை.

(www.thewire.in இணையதளத்தில் பத்திரிகையாளர் ஜெயராணி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்