Aran Sei

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு விதிகள் வகுக்கப்படுகிது – நாடாளுமன்ற குழுவிற்கு ஏப்ரல் மாதம் வரை அவகாசம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கான விதிகளை வகுப்பதற்கு, துணை சட்டங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் பதவிக்காலம், ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த தகவலை, நேற்று (02.02.21) மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்ற மக்களைவில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில் “குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 தொடர்பாக, கடந்த 12.12.2019 அன்று அறிவிக்கை வெளியானது. அதைத்தொடர்ந்து 10.01.2020 அன்று சட்டம் நடைமுறைக்கு வந்தது. குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான விதிகளை வகுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விதிகளை வகுப்பதற்காக, நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையின் துணை சட்டங்களுக்கான நாடாளுமன்ற குழுவின் பதவிக்காலம் முறையே 09.04.21 மற்றும் 09.07.21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சட்டங்கள் இயற்றப்பட்டாலும், அதற்கான விதிமுறைகளை வகுக்காமல், அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியாது.

முன்னதாக, கொரோனா தடுப்பு மருந்து அளிக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு, குடியுரிமை சட்டத்திருத்தச் சட்டத்திற்கான விதிகள் வகுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருந்தார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்ளாதேஷ் நாடுகளிலிருந்து 2014 ஆம் ஆண்டு, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்கிறது.

இந்த சட்டம் மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை உறுதி செய்வதாகவும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாகவும் கூறி, கடந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்