Aran Sei

“சேரிகளின் குடியரசுத் தலைவர்” – உகாண்டா அரசியலை உலுக்கிய பாபி வைன்

னவரி 14 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில், உகாண்டா மக்கள் எப்படி வாக்களித்திருந்தாலும் ‌தற்போதைய யோவரி முசவேனி(Yoweri Museveni) வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். முசவேனி தொடர்ந்து ஐந்து முறை ஆட்சியில் இருந்தவர். உகாண்டாவின் இராணுவம், நீதித்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய அனைத்தையும் இரும்புக் கரங்கொண்டு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால், வரலாற்று ரீதியாக தேர்தலை சூழ்ச்சியால் தனக்கு ஆதரவாக அவரால் மாற்றமுடியும். ஆயினும், இந்த நீண்டகால அதிபரை ஒரு இளம் போட்டியாளர் தனியாக ஒதுக்கி வைத்து விட்டார். அவர்தான் பிரபல இசைக் கலைஞராக இருந்து, நாடாளுமன்றவாதியாக மாறிய, ராபர்ட் கியாகுலானி அகா பாபி வைன் (Bobi Wine).

தேசிய ஒற்றுமை தளம் என்ற இயக்கத்தின் தலைவரான அவருக்கு வயது 38. நாடாளுமன்றத்திற்கு 2017 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, உகாண்டாவில்  எதிர்கட்சிகளின் புதிய முகமாகிவிட்டார் அவர். பாபி வைன் பற்றியும், உகாண்டாவின் அரசியல் பற்றியும் அறிந்து கொள்ள, நான்கு மதிப்புமிகு விடயங்கள் உள்ளன.

முதல் முறையாக நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து, பாபி வைனை அரசும், அதன் ஆதரவாளர்களும், அவரது விமர்சகர்களும் மீண்டும் மீண்டும் குறைத்து மதிப்பிட்டு வந்தனர். முக்கிய இரு எதிர்கட்சிகளான ஜனநாயக மாற்றத்திற்கான மன்றமும், ஜனநாயகக் கட்சியும் அவரை புறக்கணித்ததால் சுயேட்சை வேட்பாளராகவே அவர் போட்டியிட வேண்டிய கட்டாயம்  ஏற்பட்டது. இருந்தாலும் கூட அவர் கம்பாலாவுக்குள் உள்ள, கியான்டோன்டோ கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில், 78% வாக்குகளுடன் மிக எளிதாக வெற்றிப் பெற்றார். அதைத்தொடர்ந்து,  குப்பையிலிருந்து ஒரு வலிமையான அரசியல் இயக்கத்தை கட்டி, தன்னை ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக நிரூபித்து வருகிறார்.

பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே முசவேனியின் கொள்கைக்கு எதிரான,  கொள்கை ரீதியான, அச்சமற்ற எதிர்ப்பாளராகப் புகழ்பெற்றார். குடியரசு தலைவருக்கான வயது வரம்பை, அரசியலமைப்பிலிருந்து நீக்கும் முசவேனியின் முயற்சியை எதிர்த்து முன்னணியில் குரல் எழுப்பினார் பாபி. 2018 ஆம் ஆண்டு ஜூலையில், அரசால் முன்மொழியப்பட்ட வரி விதிப்பை எதிர்த்த சமூக ஊடக போராட்டங்களை தலைமை தாங்கி நடத்தினார்.

அதே ஆண்டில், அவர் ஆதரித்த எதிர்கட்சி வேட்பாளர்கள், தொடர்ந்து நான்கு நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றனர். 2018 ஆம் ஆண்டு வாக்கில், அவர் ‘மக்கள் அதிகாரம், நமது அதிகாரம்’ என்ற அரசியல் அழுத்தக் குழுவை உருவாக்கினார்.

அரசு அதனை. ஒரு முறையான அரசியல் கட்சியாக பதிவு செய்வதைக் தடுத்த போது, ஏற்கனவே இருந்த சிறிய அரசியல் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டு, தேர்தல் ஆணையத்தை திணறடித்தார். அந்தக் கட்சிக்கு. தேசிய ஒற்றுமை தளம் என மறு பெயர் சூட்டினார். நிறுவனமான எதிர்கட்சிகளிலிருந்து. ஏறத்தாழ 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவரது கட்சியில் உடனடியாக இணைந்தனர். அரசின் முன்னுதாரணமற்ற அடக்குமுறை இலக்குகளில் பாபி வைன் வழக்கமான இலக்காக இருந்தார்.

இவர் இசை நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் மீண்டும் மீண்டும் தடுப்பது, பொது மக்கள்  இவரது கட்சியான, மக்கள் அதிகாரத்தின் முத்திரை பதித்த சிவப்பு நிற தொப்பிகள்(Baret)  அணிவதை தடை செய்வது  போன்றவற்றின் மூலம், இவரது ஆரம்பகால வெற்றிகளைத் தடுக்க அரசு முயன்றது. தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து பாபி வைன், எண்ணிலடங்கா முறை கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் ஒரு முறை கூட, குற்றச்சாட்டுகள் படி தண்டிக்கப்படவில்லை.

அவரது இயக்கத்தின் உறுப்பினர்கள் சிலர், சில சமயங்களில் சந்தேகத்திற்குரிய வகையில்  கொலை செய்யப்பட்டனர். ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் மோசமாக, 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வடமேற்கு உகாண்டாவின் அருவா தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில், ஒரு சுயேட்சை வேட்பாளருக்காக பரப்புரை செய்து கொண்டு இருந்த போது, முசவேனி சென்ற வாகன வரிசையின் மீது கல்லெறிந்ததாக, பாபி வைனும் அவரது ஆதரவாளர்கள் 35 பேரும் கைது செய்யப்பட்டனர். அதே நாள் இரவு, எதிர்கட்சித் தலைவரின் வாகன ஓட்டுநர் சுட்டுக் கொல்லப் பட்டார். உண்மையில் அந்த குண்டு தனக்கானது என பாபி வைன் நம்புகிறார். இந்த கைதுகளுக்குப் பிறகு சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருந்ததாக பாபி, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். காவலில் இருந்த பத்து நாட்களில் அரசு பாதுகாப்பு படையினரால் நடக்கவோ, நிற்கவோ, உட்காரவோ கூட முடியாத அளவு கொடூரமாகத்  தாக்கப்பட்டார். இறுதியில் அவரது காயங்களுக்கு அமெரிக்கா சென்று சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

இந்த சம்பவத்தால் எழுந்த சர்வதேச சீற்றம், நடந்து முடிந்த தேர்தலில், முசவேனி அரசு அதன் அடக்குமுறை தந்திரங்களை அதிகரிப்பதை தடுத்து நிறுத்தவில்லை. ஒட்டு மொத்த தேர்தல் பரப்புரையின் போதும்  கைதுகள் தடையின்றி தொடர்ந்தன. மேலும், பரப்புரை பேரணிகள் கட்டுப்படுத்தப்பட்டன. பல சமயங்களிலும் எதிர்கட்சி ஆதரவாளர்களை அரசு பெரும் படையுடன் சந்தித்தது. மிகவும் கொடூரமான விடயமாக, நவம்பர் மாத நடுவில் பாபி வைன் கைதுக்குப் பின்னர், நாடு தழுவிய எதிர்ப்புப் போராட்டங்கள் எழுந்தன. அரசு பாதுகாப்புப் படை, குறைந்தது  54 பேரைக் கொன்றது.

இந்த முறைகேடுகளுக்கு பதிலளிக்கும் வண்ணம், ஜனவரியில் பாபி வைனும், மற்ற இரண்டுபேரும், முசவேனி மற்றும் அவரது அரசாங்கத்தின் 9 பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், 47 பக்க புகாரை பதிவு செய்தனர்.  அதில் 2018 லிருந்து அவர்கள் மொத்தமாகப் செய்த மனித உரிமை மீறல் குற்றங்களை பதிவு செய்தனர்.

தலைமுறை வெளிப்பாடு

உகாண்டாவின் மக்கள் தொகைப் பிரிவில் ஏற்பட்டுள்ள மாற்றம், பாபி வைனின் தேர்தல் முறையீட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நான்கு கோடியே அறுபத்தைந்து லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டா, உலகிலேயே மிக அதிக இளையவர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இவர்களுடைய சராசரி வயது 16.7. ஐந்தில் ஒருவர் 15 லிருந்து 24 வயதிற்குட்பட்டவர்கள். நாட்டின் 77% பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள். இவர்கள் முசவேனி அரசின் பொதுக் கல்வி சீர்திருத்தங்களால் பயன்பெற்றிருந்தாலும் எதிர்காலத்தை பற்றி குறைவான நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கின்றனர். சில மதிப்பீடுகள் உகாண்டாவின் வேலையின்மை விழுக்காடு 70 எனத் தெரிவிக்கின்றன. விரக்தியுற்ற இளைஞர்கள்  கம்பாலாவின் கம்வோக்யா சேரிப்பகுதியில் வளர்ந்த பாபி வைனுடன் எளிதாக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர். அவரைப் போலவே, அவர்களுக்கு முசவேனி ஆட்சியின் கீழ் வாழும் வாழ்க்கை மட்டுமே தெரியும். 1986 ஆம் ஆண்டு, முதன் முறையாக முசவேனி ஆட்சிக்கு வந்த போது பாபிக்கு நான்கு வயது கூட நிரம்பவில்லை.

பாபி வைன் இந்த மக்கள் தொகைப் பிரிவினரிடம் தன் அறைகூவலை விடுத்தார். அவர் தனது அரசியல் இயக்கத்தை தலைமுறை சொற்களில் வடிவமைத்தார்: ‘முகநூல் தலைமுறை’ முசவேனி ஆட்சியின் தலைமுறையின் நலன்களுக்கு எதிரானவர்களை பிரநிதித்துவப் படுத்துகிறது‌. இளம் உகாண்டா மக்களின் முசவேனி ஆட்சிக்கு எதிரான கோபம் மற்றும் குறைகளின் ஆழமான உணர்வுகளை, பாபியால் பேசவும், வெளிப்படுத்தவும் முடிந்தது. அவ்வாறு செய்யும்போது, உகாண்டாவின் “சேரி குடியரசுத் தலைவர்” பாபி வைன், தலைமுறை அரசியல் மாற்றத்திற்கான இளைஞர்களின் ஒன்றுபட்ட  விருப்பத்தின் முகமாகவும் குரலாகவும் வருகிறார்.

பெருந்திரள் வாதம் (Populism)

முசவேனி, தேர்தல் பரப்புரையில் கடைசி வாரத்தில், பாபி வைனை ஒரு பெருந்திரள்வாத அயசியல்வாதி என கேலி செய்தார். இதை அவர் தனது இளம் எதிரியை நிராகரிக்கும் நோக்கில் கூறினாலும், இந்த முத்திரையில் சிறிது உண்மை உள்ளது. எனது ஆய்வின்படி, பாபி வைனின், உள்ளடக்கிய பெருந்திரள்வாதம்தான் அவரது வெற்றியின் திறவுகோல் என கூறுவேன். அவர் பெருந்திரள் வாத சொல்லாட்சியைப் பயன்படுத்துவது “மக்கள்” என்ற முக்கியப் புள்ளியைச் சுற்றி பெரும்பாலும் நாட்டின் அரசியல் உயரடுக்கிற்கு எதிரான தீவிர எதிர்ப்பில், அவரது  பெரும்பான்மையான இளைய ஆதரவாளர்களுக்கிடையே   ஒரு புதிய கூட்டு அடையாள உணர்வை உருவாக்கி உள்ளது. ஆனால் பாபி வைனின் பெருந்திரள்வாதம்  புதுமையானது. ஏனெனில் “மக்கள்” என்பதற்கான அவரது கருத்து (அமெரிக்கா அல்லது மேற்கு ஐரோப்பாவில் வலது அரசியல்வாதிகள் கூறுவது போல) இன- தேசியவாத அடிப்படையிலானது அல்ல. மாறாக அது, பெரும்பாலும் தலைமுறைகளில் வரையறுக்கப்படுகிறது. இது அவருக்கு இன- நிலப்பகுதி வழியிலான அரசியல் கூட்டணியை உருவாக்க உதவியது. பாபி வைனின், தலைமுறை பெருந்திரள்வாதம் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டால், அதன் விளைவுகளை ஆப்பிரிக்கா முழுவதும் உணர முடியும். இதே போன்ற மக்கள்தொகை பிரிவுகளைக் கொண்ட, இதே போன்ற அரசியல் தடைகளை எதிர்கொள்ளும் எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கு, இது ஒரு முன் மாதிரியாக இருக்கும்.

(www.thewire.in இணைய தளத்தில் லூக் மெல்ச்சியோர் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்) 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்