Aran Sei

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

“அறுவடை செய்வதா?  அல்லது அதை விற்க முயற்சிப்பதா? எது தனக்கு அதிக மன அழுத்தத்தைக் தருகிறது எனத் தெரியவில்லை” என்கிறார் பீகார் விவசாயி ராஜீவ் குமார் ஓஜா. “இது உங்களுக்கு வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் இந்தப் பருவத்தில் எனக்கு நல்ல மகசூல் கிடைத்திருக்கிறது. நல்ல மகசூல் கிடைக்க காலநிலை, தண்ணீர், வேலையாட்கள் இன்னும் பல விடயங்கள் ஒன்று சேர்ந்து வரவேண்டும். ஆனால் அதற்குப் பிறகும் அதை விற்க முடியவில்லை. நான் அறுவடை செய்து சேமித்ததை எங்கள் கிராமத்தில் உள்ள ஒரு இடைத்தரகருக்குத்தான் விற்க வேண்டியிருந்தது. அதுவும் அவர் கூறிய விலையில்.அந்த தரகர் அதை மொத்த விற்பனையாளருக்கு தரகு பெற்று விற்று விடுவார்” என்கிறார் ஓஜா. இவர் வட- மத்திய பீகாரில் உள்ள சௌமுக் என்னும் கிராமத்தில் ஒரு பாழடைந்த வீட்டின் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டு இதை கூறுகிறார். 47 வயதான ஓஜா, சம்பா பருவத்தில் (ஜூன்-நவம்பர்) நெல்லும், குறுவையில் (டிசம்பர்-மார்ச்சு) கோதுமை மற்றும் சோளம் ஆகியவற்றையும் பயிரிவார். இவரது ஐந்து ஏக்கர் நிலம் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த போச்சா தாலுக்காவில் உள்ளது.

2019 ல், தனது நெல்லை குவின்டால் ரூ 1,100 வீதம் (கிலோ 11ரூபாய்) விற்றிருக்கிறார். இது ரூ.1,815 என அப்போதிருந்த குறைந்தபட்ச ஆதார விலையை விட 39% குறைவாகும். ” எனக்கு வேறு வழி இல்லை. எங்களால் வேறு எங்கும் இதை விற்க முடியாது என்பது தரகர்களுக்கு  நன்றாகத் தெரியும். அதனால் அவர்கள் குறைந்த விலைக்கு  வாங்குகிறார்கள். இதனால் எங்களுக்கு லாபம் கிடைப்பது அரிதுதான்,” என்கிறார் அவர்.

பீகாரில் ஒரு விவசாயி  நெல்லை சாகுபடி செய்ய ஒரு ஏக்கருக்கு 20,000 ரூபாய் செலவிடுகிறார் என்று கூறும் ஓஜா,” எனக்கு ஏக்கருக்கு 20-25 குவின்டால் நெல் கிடைத்தது. நான் 1,100 ரூபாய்க்கு விற்றால் எனக்கு 2,000- 7,000(ஒரு ஏக்கருக்கு) லாபம் கிடைக்கும். ஆறு மாத கடின உழைப்பிற்குப் பிறகு இது நியாயமான வியாபாரம்  என நீங்கள் நினைக்கிறீர்களா? ” என்று கேட்கிறார் ஓஜா.

குறிப்பாக 1960ல் கொண்டு வரப்பட்ட பீகார் விவசாயப் பொருட்கள் சந்தைச் சட்டத்தை (தமிழகத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் போன்றது) 2006ல் ரத்து செய்ததற்குப் பிறகு ஓஜாவைப் போலவே பீகாரில் உள்ள பல விவசாயிகளும் தங்கள் பயிருக்கு நல்ல விலை கிடைக்க அரும்பாடு படுகிறார்கள்.  2006 ல் விவசாயப் உற்பத்திப் பொருட்கள் விற்பனை கழக (APMC) மண்டி முறை இந்த மாநிலத்தில் ஒழிக்கப்பட்டது.

இது செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயப் சட்டங்களால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதைச் சந்திக்கப் போகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தில்லியின் எல்லையிலும் மற்றும் நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் 2020, நவம்பர் 26 லிருந்து இந்த சட்டங்களுக்கு எதிராகப் போராடிய வருகிறார்கள்.

அந்த மூன்று சட்டங்களில் ஒன்றான விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வணிகச் சட்டம்(2020), மாநிலங்களின் ஏபிஎம்சி சட்டங்களை மீறுகிறது. இந்த சட்டம் மாநில அரசால் வழிகாட்டப்பட்ட சந்தைகளைத்(ஏபிஎம்சிகள்)  தாண்டி விவசாயிகள் விற்பனை செய்ய அனுமதிக்கிறது. இதன்மூலம் தனியார் நிறுவனங்கள் விவசாய உற்பத்தியைக் கொள்முதல் செய்ய வழி செய்கிறது. இந்த நகர்வு விவசாயத் துறையை  தாராளமயமாக்குவதாகவும், இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள் இனி விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் தங்கள் பொருட்களை விற்கத் தேவையில்லை எனவும் கூறுகிறார்கள். பீகார் அரசு இதே நோக்கத்துடன்தான் ஏபிஎம்சி சட்டத்தை ரத்து செய்தது. ஆனால் அதிலிருந்து கடந்த 14 ஆண்டுகளில் விவசாயிகளின் நிலை மிகவும் மோசமடைந்தது விட்டது. தேசிய மாதிரி கணக்கெடுப்பு (70 வது சுற்று)   விவசாய நிலத்தை நம்பி உள்ளவர்களின் மாத வருவாய் ரூ. 5,000 க்கும் குறைவாக உள்ள ஆறு மாநிலங்களில் பீகாரும் ஒன்று எனக் குறிப்பிடுகிறது. ” பல பொருளாதார வல்லுனர்களும் ‘பீகார் புதிய சந்தைப் சார்ந்த  புரட்சியின் முன்னோடியாக விளங்கப்போகிறது’  என்று கூறியதாக சண்டிகரைச் சேர்ந்த விவசாயப் பொருளாதார வல்லுநர் தேவிந்தர் சர்மா கூறுகிறார். ” தனியார் முதலீடு விவசாயிகளுக்கு நல்ல விலையை உறுதி செய்யும் என்று அவர்கள் வாதிட்டனர். ஆனால் அது எதுவும் நடக்கவில்லை,” என்கிறார் அவர்.

“தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACS), பிப்ரவரி மாதம் வரை தொடர்கின்றன. நான் எனது நெல்லை நவம்பர் மாதத்தில் அறுவடை செய்தேன். நான் டிசம்பரில் துவங்கும் அடுத்த குறுவை சாகுபடிக்கு தயாரிப்பு செய்ய எனக்குப் பணம் தேவை. நான் எனது நெல்லை என்னிடமே சேமித்து வைத்திருந்தால், மழை வந்தால், எனது முழு அறுவடையும் கெட்டுவிடும்,” என்கிறார் ஓஜா. போதிய சேமிப்பு வசதிகள் இல்லாதது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஓஜா விற்பதைத் தடுக்கிறது. ” அது மிகவும் அதிகளவு ஆபத்தானது,” என்கிறார் அவர்.

பாட்னாவின் மாவட்ட நீதிபதி குமார் ரவி, கடன் சங்கங்கள் நவம்பர் மாதத்திலேயே கொள்முதல் நடைமுறைகளை தொடங்கி விடுவதாகக் கூறுகிறார். “குளிர்காலத்தில் நெல் அதிக ஈரத்தை  உறிஞ்சிக் கொள்கிறது. விவசாயிகள் அதனை காய வைத்து கடன் சங்கங்களில் விற்கின்றனர். அதனை மாவட்ட நீதிபதியும், மாநில கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் மேற்பார்வை இடுவார்கள்,” என்கிறார் அவர். சௌமுக் கிராம தொடக்க வேளாண்மை கடன் சங்க மையத்தின் தலைவர் அஜய் மிஸ்ரா, மாவட்ட நீதிபதி கொள்முதலுக்கு ஒரு இலக்கை நிர்ணயிப்பார் என்று தெரிவிக்கிறார். ” ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு வரம்பு உள்ளது அதை மீற முடியாது. கடந்த பருவத்தில்(2019-20) எங்கள் வரம்பு 1,700 குவின்டால்களாக இருந்தது. சௌமுக் கிராம பஞ்சாயத்தில் 20,000 குவின்டால்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. என் நிலைமை மிகவும் மோசமாக விட்டது. விவசாயிகள் நான் அவர்களை திருப்பி அனுப்பி விடுவதால் எப்போதும் என்னை தவறாகப் பேசுகிறார்கள். ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது,” என்கிறார் மிஸ்ரா.

2015-16 ம் ஆண்டு நிலவரப்படி, பீகாரின் ஏறத்தாழ 97% விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகளே என்கிறது தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக் குழு (National Council of Applied Economic Research) வின் அறிக்கை ஒன்று. இது இந்திய சராசரியான 86.21%ஐ விட மிக அதிகமாகும். ” பணக்கார விவசாயிகள் தங்கள் அறுவடையை கடன் சங்கங்களில்  முன்னரே விற்றுவிடும் நிலையில், சிறு, குறு விவசாயிகள் இடைத்தரகர்களையே நம்பி இருக்க வேண்டி உள்ளது,” என்று கூறுகிறார் மிஸ்ரா.

கடன் சங்கங்கள் நெல்லை மட்டுமே கொள்முதல் செய்கின்றன. எனவே, ஓஜா தனது கோதுமை மற்றும் சோளத்தை குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலைக்கு தரகர்களிடம் விற்கிறார். ” நான் நான்கு கிலோ சோளத்தை விற்றால் ஒரு கிலோ கிழங்கைத்தான் வாங்க முடியும். இந்த ஆண்டு (2020)முழு முடக்கம் காரணமாக நான் எனது சோளத்தை ஒரு குவிண்டால் ரூ. ஆயிரத்திற்கு விற்றேன் ( கிலோ ரூ. 10). கடந்த ஆண்டு அது 2,200 ஆக இருந்தது. நாங்கள் இடைத்தரகர்களின் தயவில்தான் இருக்கிறோம்,” என்கிறார் ஓஜா.

குறைந்த விலை கொடுப்பது மட்டுமல்ல  துலாக்கோலை தவறாக பயன்படுத்துவதாகவும் பாட்னாவில் பாலிகஞ்ச் தாலுக்காவில் உள்ள கப்புரா கிராமத்தைச் சேர்ந்த, 40 வயதான கமல் சர்மா கூறுகிறார்.” ஒவ்வொரு குவின்டாலிலும் ஐந்து கிலோ தானியத்தை திருடி விடுகிறார்கள். இடைத்தரகர்களிடம் உள்ளதும் ஏபிஎம்சியில் உள்ளதும் ஒரே அளவான பொருளுக்கு எப்போதும் வெவ்வேறான எடைகளையே காட்டும்,” என்று விளக்குகிறார் அவர்.  இடைத்தரகர் ஒரு விவசாயியை ஏமாற்றினால் அவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்திற்குச் செல்லலாம்.  எத்தனை விவசாயிகள் அதைச் செய்ய முடியும்? எனக் கேட்கிறார் சிஎம்ஏ வைச் சேர்ந்த சிங். ஏபிஎம்சியை இயக்கும் வர்த்தகர்கள் உரிமம் பெற்றவர்களாக இருப்பதால் அவர்களுடைய செயல்களுக்கு அவர்களைப் பொறுப்பாக்க முடியும் என்கிறார் அவர். ” விவசாயச் சந்தைகள் அனைவருக்குமான சமதளமாக இருப்பதால், அதனை நீங்கள் கட்டுப்பாடில்லாமல் வைத்திருக்க முடியாது. ஏபிஎம்சி அந்த கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது,” என்று அவர் கூறுகிறார்.

இடைத்தரகர்களின்  கடினமான ஒப்பந்தங்கள் பலரை பீகாரை விட்டு வெளியேறி வேறு எங்கேயாவது வேலை தேட கட்டாயப்படுத்துகிறது. கட்டுப்படியாகும் ஊதியம் கொடுத்து அவர்களை எங்களால் வேலைக்கு வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவர்கள் பஞ்சாப் மற்றும் அரியானாவுக்குச் செல்கின்றனர்,” என்கிறார் கமல் சர்மா. ”

பஞ்சாப் மற்றும் அரியானா வில் உற்பத்தி ஆகும் பெரும்பகுதி கோதுமை மற்றும் நெல்லை அந்தந்த மாநில அரசுகளே கொள்முதல் செய்து கொள்கிறார்கள். ” அங்குள்ள விவசாயிகள் நல்ல விலை கிடைப்பதால் அவர்களால் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் தர முடிகிறது,” என்று விளக்குகிறார் சௌமுக் கிராமத்தைச் சேர்ந்த செயற்பாட்டாளர் விஷ்வா ஆனந்த். ” பீகாரில் வேலை செய்ய விரும்பாததற்காக தொழிலாளர்களை நாம் குறை சொல்ல முடியாது. விவசாயிகள் தங்கள் பயிர்களை குறைந்த பட்ச ஆதார விலையில் விற்க முடிந்தால் அவர்கள் இங்கிருந்து வெளியேற மாட்டார்கள்,” என்கிறார் ஆனந்த்.

கடந்த அக்டோபர்- நவம்பர் மாதங்களில் பீகாரின் பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் நான் பேசிய போது, அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க வேண்டும். இதே கோரிக்கையாளர் தில்லியின் எல்லையில் போராடும் விவசாயிகளிடமிருந்தும் எதிரொலிக்கிறது. இந்த புதிய சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் என அவர்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் மிகப் பெரிய கார்பரேட்டுகள் விவசாயத்தின் மீதும் , விவசாயிகள் மீதும் மேலும் அதிக அதிகாரத்தை பெறும் வகையில்  அவர்களுக்கு இன்னும் அதிக இடத்தை அவை ஏற்படுத்திக் கொடுக்கும். புதிய சட்டங்கள் வேளாண் மக்களுக்கு தற்போது  குறைந்த பட்ச ஆதார விலை, ஏபிஎம்சி, மாநில அரசு கொள்முதல் இன்னும் பல முக்கிய ஆதரவு வடிவங்களை  அடியோடு அழிக்க  வல்லன.  அவை ஒவ்வொரு இந்தியருக்கும் கிடைக்க வேண்டிய சட்டப்படியான நிவாரண உரிமையை செயலற்றதாக்குவதால், அரசியலமைப்பு சட்டத்தின் 32 ம் பிரிவிற்கு  குழிபறிக்கிறது எனவும் அவை விமர்சிக்கப்படுகின்றன.

அரசாங்கம் (மத்திய) ஒரு விலையை நிர்ணயிக்கிறது. அதன்பின்  அந்த குறைந்தபட்ச ஆதார விலையில் விற்க முடியாத விவசாயிகளை மறந்து விடுகிறது. “குறைந்தபட்ச ஆதார விலையை விட குறைவான விலைக்கு வாங்குவதை ஒரு குற்றமாக ஏன் அரசு அறிவிக்கக் கூடாது? வர்த்தகர்கள் அவர்களை ஏமாற்றினால் அவர்கள் எங்கே போவார்கள்?” என்று கேட்கிறார் ஆனந்த்.

தங்களிடமிருந்து  12 ஆண்டுகளுக்கு முன் ஒரு வர்த்தகர் கடனாக வாங்கிச் சென்ற 2,500 ரூபாயைத் திரும்பப் பெறுவதற்காக காத்துக்கிடக்கிறார்கள்  கப்பூராவைச் சேர்ந்த கமல் சர்மாவும் அவரது மனைவி பூனமும். ” அதை எங்கள் நெல்லை கொண்டு செல்லும் வண்டிக்கான முன் தொகை என்று எங்களிடம் கூறினார். இன்றும் கூட அது எங்களுக்குப் பெரியத் தொகைதான். அன்று இதைவிட பெரியதுதான். அன்று ஒரு பாக்கெட் உரத்தின் விலை இன்றைய விலையில் ஐந்தில் ஒரு பங்கு தான்,” என்கிறார் பூனம்.

ஆனால் இது போன்ற நிகழ்வுகள் பீகாரில் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருக்கின்றன. இனிமேலும் அவை நமக்கு ஆச்சரியமாக இருக்காது.

(www.thewire.in இணைய தளத்தில் வெளியாகியுள்ள, எம்.என்.பார்த் என்பவர் பரி (PARI) இணையதளத்திற்காக எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்