Aran Sei

வங்கிகளின் கட்டணக் கொள்ளை – மக்கள் சந்திக்கும் மற்றொரு பிரச்சனை

றக்குறைய ஆறு மாதங்களுக்குப் பிறகு கொரோனாவுக்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சிறு குறு நிறுவனங்கள் தற்போதுதான் இயங்கத் தொடங்கி உள்ளன. இத்தனை நாள் வேலையின்றி சரியான வருமானமின்றி தவித்த சாமானிய மக்களின் வங்கிக் கணக்குகளில் 7 மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் சம்பளப் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

சம்பளப் பணம் வந்து விட்டது என்ற நம்பிக்கையோடு ஏடிஎம் மெஷினிலோ, வங்கி கிளைக்கோ பணம் எடுக்க செல்லும் மக்களுக்கு ஒரு பேரதிர்ச்சி ‘மினிமம் பேலன்ஸ் சார்ஜஸ்’ என்ற பெயரில் காத்திருக்கிறது.

கடந்த ஏழு மாதமாக வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் என்று கூறப்படும் குறைந்தபட்ச வைப்புத்தொகையை வைத்திருக்காத காரணத்தினால் சில ஆயிரம் ரூபாய்கள் வங்கிகளால் கட்டணமாக வசூலிக்கப்பட்டிருக்கின்றன.

லாக்டவுனில் வருமானமே இல்லாத சூழலில் கூட, வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச வைப்புத்தொகையை வைத்திருக்க வேண்டும் என்று கூறி ஏழை எளிய மக்களின் சட்டைப்பையிலிருந்து பல கோடிகளை சுருட்டி இருக்கிறது வங்கிகள்.

அதுமட்டுமல்லாமல் பஜாஜ் அலையன்ஸ், ஐடிஎஃப்சி போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் அரசாங்கம் அறிவித்த எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் ‘ECS’ எனப்படும் மின்னனு பரிவர்த்தனை மூலம் தொடர்ந்து மக்களினுடைய கணக்குகளில் வட்டிப் பணத்தை வசூலிக்க முயற்சி செய்திருப்பதாக கூறப்படுகிறது

கணக்கில் பணம் இல்லாமல் தோல்வியடையும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூபாய் 250 முதல் 300 ரூபாய் அபராத தொகையாக கணக்கில் பிடிக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார் பெயர் கூற விரும்பாத ஒரு வாடிக்கையாளர். இவ்வாறு மாதத்திற்கு குறைந்தது ஐந்து முறை வீதம் ஒவ்வொரு கணக்கிலும் ரூபாய் 6000 முதல் 10000 ரூபாய் அபராத தொகை நிலுவையில் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

பணம் இருக்கிறது என்று நம்பி வரும் சாமானிய மக்களின் வங்கிக்கணக்கில் ஏற்கனவே பல ஆயிரம் அபராத தொகை மட்டுமே மிஞ்சியிருப்பதாக அரண்செய் – யிடம் பேசிய சில வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அந்த பணத்தை செலுத்தினால்தான் கணக்கை மறுபடியும் பயன்படுத்த முடியும் என்ற நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

கடன் வாங்கியவர்களிடம் வட்டியை வசூலிக்க வேண்டாம் என்று வழிகாட்டிய அரசு வங்கிகளால் விதிக்கப்படும் இதுப்போன்ற மறைமுக கட்டணங்களையும் ரத்து செய்ய அறிவுறுத்தி இருக்க வேண்டும்‌.லாக்டவுன் காலத்தில் அரசின் வழிகாட்டுதலை மீறி மக்களிடம் இருந்து கடனை வசூலிக்க முயற்சி செய்த நிறுவனங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மக்களிடம் வசூலிக்கப்பட்ட இந்த அபராத தொகைகளை திருப்பி மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

– அரண் செய் ஆசிரியர் குழு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்