தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி கிராமத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பயின்ற அரியலூரை சேர்ந்த மாணவி, பூச்சிகொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துகொண்ட வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், மாணவி இறந்த பிறகு வெளியான வீடியோவில், அவர் கூறியுள்ள தகவல்கள் அடிப்படையில் அவருடைய தந்தை கூடுதல் புகார் அளித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த புகரின் அடிப்டையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் மாற்றம் செய்வதற்கு பதிலாக, அந்த வீடியோவை வெளியிட்டவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது குறித்து நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
வீடியோ வெளியான பிறகும், அதுகுறித்து மாணவின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்த பிறகும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மதமாற்றம் தொடர்பான புகாரில் உண்மையில்லை என்று கூறியது, காவல்துறை விசாரணையின் மீது நம்பிக்கையில்லை என்று மாணவின் பெற்றோர்கள் கூறுவதற்கு போதுமான ஆதரமாக உள்ளது என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.
“மின்சார வயரை தொட்டதுபோல் காவல்துறை கண்காணிப்பாளர் நடந்து கொண்டது ஏன் என்பது புரியவில்லை” என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
பைபிளில் உள்ள “ஆகையால் நீங்கள் போய் எல்லா தேசத்தாரையும், சீடர்களாக்குங்கள். பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்தானம் வழங்குங்கள். நான் உங்களுக்கு கட்டளையிட்ட அனைத்தையும் அவர்களை பின்பற்றச் செய்யுங்கள்” என்ற வசனத்தையும், “உலகமெங்கும் சென்று அனைத்து ஜீவராசிகளுக்கும் நற்செய்தியை பிரசங்கம் செய்யுங்கள். விசுவாசித்து, ஞானஸ்தானம் பெற்றவர் ரட்சிக்கப்படுவார்கள். நம்பாதவர்கள் தண்டிக்கப்படுவார்கள்” என்ற வசனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், குற்றச்சாட்டுககுள்ளான பள்ளி கிறிஸ்தவ சபையால் நடத்தப்படுவதையும், அந்த பள்ளி மதமாற்றத்தில் ஈடுபட்டவதாக குற்றம்சாட்டப்பட்டிருப்பதையும் இந்த வசனங்களுடன் இணைத்து சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வசனங்களில் கூறியிருப்பது, கிறிஸ்தவ மத நம்பிக்கையின் அடிப்படையில் மிகப்பெரிய பணி என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
இதேபோல், ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள “சீரியஸ் மேன்” (Serious Man) என்ற தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில், கிறிஸ்தவ பள்ளியின் முதல்வர், மாணவரின் பெற்றோரை மதம் மாறச்சொல்லும் காட்சியை நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
1985 ஆம் ஆண்டு, இயக்குநர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான “கல்யாண அகதிகள்” என்ற தமிழ் திரைப்படத்தில், கிறிஸ்துவரை காதலிக்கும் பெண், அவரை திருமணம் செய்துகொள்ள மதம் மாறவேண்டும் என்று வற்புறுத்தப்படும்போது, அவர் திருணத்தையே வேண்டாம் என்று சொல்வதையும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
நீதிமன்றம், இதுபோன்ற திரைப்படங்களை தீர்ப்பில் சுட்டிக்காட்டலாமா என்று தனக்கு தானே கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், கலை நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும், தமிழ் சினிமாவில் மிகைப்படுத்தல்கள் இருந்தாலும் அதில் உண்மையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அரசியல்சான அவையில் இடம்பெற்றிருந்த சில கிறிஸ்துவ உறுப்பினர்கள், மைனர்களையும் மதமாற்றம் செய்ய உரிமை வேண்டும் என்று கேட்டதாக கூறியுள்ள நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் இந்திய அரசியல்சாசனத்தின் பிரிவு 25, மதத்தை பரப்புவதற்கு வழங்கியுள்ள உரிமையை மதமாற்றம் செய்வதற்கான உரிமையாக கருதக்கூடாது என்று உச்சநீதிமன்றம் ஒருவழக்கில் குறிப்பிட்டிருப்பதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டிற்குள்ளான பள்ளி அமைந்துள்ள இடத்தின் பெயர் மைக்கேல்பட்டி என்பதை சுட்டிக்காட்டியுள்ள நீதிபதி, அது அந்த பகுதியின் உண்மையான பெயராக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஆகவே, மதமாற்ற முயற்சி நடைபெற்றது என்ற குற்றச்சாட்டு தவறு என்று முழுவதுமா மறுக்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.
மரணமடைந்த குழந்தைக்கு நீதி வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை என்று கூறியுள்ள நீதிபதி, அமைச்சர் (பள்ளிக்கல்வித்துறை) கூட ஒரு நிலைபாட்டை எடுத்துள்ளதால், மாநில காவல்துறை விசாரணை நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.