Aran Sei

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

உத்தமரை இழந்தோம்

யமுனை நதி  – இந்திய துணைக் கண்டத்து மக்கள் மட்டுமல்ல, உலகிலேயே பல இடங்களிலும் உள்ள மனிதாபிமானமும் நல்லறிவும் விடுதலை வேட்கையும் கொண்ட மக்கள் அனைவருமே, சிந்திய கண்ணீரையே, கொண்டு செல்கிறது. அவ்வளவு கண்ணீ ரும் சேர்ந்து கடல் நீரில் கலக்கிறது உலகைத் திருத்த வேண்டு மென்று உழைத்த உத்தமர்கள் எத்தகைய தியாகக் கடலிலே வீழ்த்தப்பட்டனரோ, அதே நிலைக்கு, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாரின் வாழ்க்கையும் உத்தமர் அனைவரும் சென்ற வழியே சென்று தீர வேண்டி நேரிட்டுவிட்டது.

யமுனை நதிக்கரையிலே 31-1-48 மாலை 5 மணிக்கு மூட்டப்பட்ட தீ, அங்கு காந்தியாரின் சடலத்திற்கு மட்டுமல்ல, உலகிலே இலட்சக்கணக்கான மக்களின் அடிவயிற்றில் கூட அல்ல இருதயத்தையே தீண்டிய தீ ஆகும். உலக வரலாற்றிலே இதுபோன்ற துக்ககரமான, துடிதுடிக்கச் செய்யும் திடுக்கிட்டு திகைக்கச் செய்யும் நிகழ்ச்சி, வேறு இல்லை. இந்திய பூமி மட்டுமல்ல, இருதயம் படைத்த நல்லறிவாளர்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம், இந்தத் துக்கம் மக்களை இதுவரை அவர்கள் அனுபவித்தறியாத விதமாக ஆக்கி விட்டிருக்கும்

எங்கு நோக்கினாலும் ஒரே திகைப்பு! கலங்கிய கண்கள்! ஏக்கம் !

ஒவ்வொருவருக்கும் அவரவர் குடும்பத்திலே, அவர்களின் இருதயத்தில் முதலிடம் முக்கிய இடம் பெற்ற எவரேனும் இறந்து போய், அந்தத் துக்கத்தின் தாக்குதலால் அவதிப்பட்ட அனுபவம் இருக்கத்தான் செய்யும் என்ற போதிலும் எதுவும் இந்தச் சமயத்திலே ஆறுதல் அளிக்கும் ஆற்றலைப் பெற்றதாகக் காணோம்.

இந்தத் துக்கம் ஏதோ ஓர் புதுவிதமானதாக, இதுவரை அனுபவித்த எந்தத் துக்கத்தையும் விட, அதிகமானதாக இருக்கிறது. மரணம் எவ்வளவு தொண்டு கிழவருக்கு ஏற்படினுங்கூட, துக்கம் தரத்தான் செய்யும். ஆனால் இது மரணமா! அல்லவே! அவர் சாகவில்லை, மாபாவியினாலே கொல்லப்பட்டார்.

மாலை நேரத்தில், ஒரு நாட்டு மக்களையே உலகறிய வைத்த உத்தமர் தம் பேத்திமார் இருபக்கமும் வர, தம் சொல்லை எதிர் நோக்கிக் கூடியிருக்கும். ஆர்வமிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கிறார் – இதோ இன்னோர் நிமிஷம் அவர் மேடை மீது அமர்ந்து, ஒற்றுமையை பற்றி ஒருவருக்கொருவர் குரோதம், துவேஷம் நீங்கி, நாட்டு நன்மதிப்பை நாசமாக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டுமென்று அன்புரை அளிக்கப் போகிறார். எத்தனையோ நாட்களாக அளித்தது போலவே – அந்த ஒரு நிமிஷம் எவ்வளவு பெரிய மாறுதலை உண்டாக்கி விட்டது – நினைத்தாலே நெஞ்சு வெடித்து விடும் நிலைமையை ஏற்படுத்தி விட்டது. அந்த நிமிஷத்தில், அவர் மேடை மீதேறப் படிக்கட்டுகளில் கால்வைக்கும் நேரத்தில் எவனோ ஒரு கயவன், மனித உருவில் உலவிய மிருகம், மாநிலத்தோர் எவரும் காரி உமிழத்தக்க மாபெரும் துரோகம் புரிய மனதைத் துவேஷக் கூடாக்கிக் கொண்ட மாபாவி, ஒன்று இரண்டு, மூன்று என்று துப்பாக்கியால் சுட்டான் மார்பிலே, அடி வயிற்றிலே – கண்கள் மூடிக் கொண்டன அவர் சாய்ந்தார். நாடு முழுவதும் சோகக் கடலிலே வீழ்ந்துவிட்டது – உள்ளே கொண்டு சென்றனர் – உடனிருந்தோர் கதறினர் உயிர் அவருக்குப் பிரிந்தது – அந்த நிமிஷமே கௌரவமே நாட்டை விட்டுப் பிரிந்து விட்டது

எவ்வளவு பெரிய கேடு செய்கிறோம், எத்துணைப் பெரிய துரோகம் என்பதை எண்ணிப் பார்க்காமலே அந்த வெறியன் செய்த காரியம், ஏசுவை சிலுவையில் அறைந்த ரோம் வெறியர்களும் வெட்கித் தலை குனியும் படியானதாகும். ரோம் ஆதிக்க வெறியர்களாவது, ஏசுவின் செல்வாக்கு பரவுவதால் தங்கள் ஆதிக்கம் கெடுகிறது என்று பொறாமையும், துவேஷமும் கொண்டதால், அக்கொடுஞ்செயல் புரிந்தனர். இந்த வெறியனோ, எந்த மாபெரும் தலைவரால் இவன் மதிப்புப் பெற்றானோ. இவனுடைய வாழ்வுக்கு ஓர் புது அந்தஸ்து கிடைத்ததோ, நாட்டுக்கு ஓர் புதுநிலை ஏற்பட்டதோ, அந்த மாபெரும் தலைவரையல்லவா, மார்பிலே சுட்டுக் கொன்றான். பெற்ற தாயைக் கொல்லும் பேயன், அந்த மாலை நேரத்திலே மக்களுக்கு மதிமொழி கூற வந்தபொழுது, மஞ்சள் நிற வெயிலில் அவருடைய முதுமை தெரிந்தபொழுது, ஒரு பெரிய துணைக் கண்டத்தில் சர்க்கார் அவன் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக் காத்திருந்தும், ஒரு பாதுகாப்பையும் விரும்பாமல், தனியாக வந்த தூய்மையைக் கண்டபோது, சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வீசினான் வேறோர் வெறியன் என்பதறிந்தும், மீண்டும் எவனாவது இதுபோல் செய்தால் என்ன செய்வது என்பது பற்றியே எண்ணமே கொள்ளாமல் வந்த போக்கைக் கண்டபோது, மரணத்தின் பிடியிலே தன்னைத்தானே சிக்க வைத்துக் கொள்ளும் விதமாகப் பட்டினியிருந்து,  அதன் மூலம் நாட்டு மக்களிலே சில பலருக்கு ஏறியுள்ள வெறி விஷத்தைப் போக்க முயற்சித்தாரே என்ற சம்பவத்தையும் எண்ணிப் பாராமல், கடந்த முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தம் சொந்த வாழ்க்கை என்பதையே மறந்து நாட்டுக்குப் புது வாழ்வு பெற்றுத் தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்றி வந்தவராயிற்றே என்பதையும் எண்ணிப் பாராமல் சுட்டான் மும்முறை – அவர் கீழே சாயும்வரை,

முப்பதாண்டுகளாக எந்த ஏகாதிபத்தியத்தின் மீது அவர் தாக்குதலை நடத்தினாரோ, அந்த ஏகாதிபத்தியம் செய்யத் துணியாத காரியத்தை, எவனை ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுவித்தாரோ அவன் செய்திருக்கிறான். தீயிலே வீழ்ந்த நாகத்தை வெளியே எடுத்துப் போட்டால், பாம்பு, அவனையே தீண்டும் என்பார்கள். இந்தப் பாவியின் செயல் அதைவிடக் கொடுமை நிரம்பியது.

நாட்டுக்கு உலகிலே புது நிலை ஏற்பட்டு ஆண்டு ஒன்றும் பூர்த்தியாகவில்லை. இதற்குள், அவர் இயற்கையாக மரணமடைந்திருந்தால் கூட, துக்கம் ஏற்படத்தான் செய்யும் ஆனால் இப்போதோ, அவர் சாகவில்லையே!

கொல்லப் பட்டார் ஒரு கொடியவனால் அவன் வாலிபனாம் – இந்துவாம்

”இந்தியா என்றோர் நாடுண்டு, அங்கு ஏலம், கிராம்பு பெறுவதுண்டு, பொன்னும் பொருளும் மிகமிக உண்டு. போக்கறியாதார் நிரம்ப உண்டு” என்ற அளவில் பதினாறாம் நூற்றாண்டிலேயே உலகம் அறிந்திருந்தது. பிறகு படிப்படியாக இந்தியா பிரிட்டிஷ் பிடியிலே சிக்கி விட்டது, அப்போது ”இந்தியா என்றோர் நாடுண்டு, அது ஆங்கிலேயருக்கு நல்ல வேட்டைக் காடு’ என்று உலகம், இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டது. திலகர் காலத்திலே விடிவெள்ளி தோன்றுவது போல, விடுதலைக்கு முயற்சி செய்யப்பட்டது என்ற போதிலும் காந்தியார் காங்கிரசுக்குள் புகுந்த பிறகே, “இந்தியா என்றோர் நாடுண்டு, அங்க விழிப்பும் எழுச்சியும் உண்டு” என்று உலகம் அறிந்து கொள்ள முடிந்தது.

காந்தியாரின் புகழொளி மூலமே, உலகம் இந்தியாவைக் கண்டு வந்தது, தன்னலமற்ற, விளைவு பற்றியே கவலையற்ற போராட்ட மனோபாவத்தை நாட்டிலே காந்தியாரால்தான் உண்டாக்க முடிந்தது. அதற்கு முன்பு வரையில், விடுதலை கோரி மனுச் செய்யும் மேதாவிகளிடமே நாடு இருந்தது, அவருடைய உருவமோ, உடலமைப்போ , பேச்சோ நடவடிக்கையோ ராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடிய விதமாக இல்லை . ஆனால் அவரால் ராணுவங்களையும் எதிர்த்து நிற்கக் கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களுக்கு உண்டாக்க முடிந்தது. எத்தனை எத்தனைப் போராட்டங்கள்! அவைகளிலே கலந்து கொண்ட வாலிபர்கள் எத்தனை எத்தனை இலட்சம்! எத்தகைய வீரச் செயல்கள், தியாகச் செயல்கள் அவர் காலத்திலே நேரிட்டன.

இவ்வளவையும் தந்த தலைவருக்கு, அந்தத் துரோகி தந்தது மூன்று குண்டுகள், காக்கை கழுகு, நாய், நரியும் அந்த மாபாவியின் உடலைத் தின்னக் கூசும். அவ்வளவு பெரிய துரோகச் செயலை அந்த வாலிபன் செய்து விட்டான். அந்த வெறியனின் செயலால் இருள் சூழ்ந்து கிடக்கும் நேரம் இது.

எவரும் எதிர்பாராதது நடந்து விட்டால், எவ்வளவு பேசிப் பேசிப் பார்த்தாலும், ஆற்றிக் கொள்ள முடியாத விதமான நிலை ஏற்பட்டு விட்டது. இந்தத் துக்கத்தை எளிதில் துடைத்திட முடியாது, ஒரு நாட்டுக்கே பெரியதோர் நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரம்

இருள் கவிந்து கொண்டு இருதயம் பிடித்துக் கொண்டு கண்களிலே நீர் கொப்பளித்துக் கொண்டுள்ள இந்த நேரத்தில் நாம் ஆறுதல் பெறுவது மிக மிகச் சிரமமான காரியம். ஆனால் என்ன செய்வது? ஒரு வெறியன் செய்து விட்ட துரோகம், நாட்டையே நிலை குலையச் செய்து விட்ட துரோகம்: மனம் பதறுகிறது. மக்கள் மனம் பதறியுள்ள நிலையிலே, நாட்டுத் தலைவர்கள் தான், ஆறுதலைத் தர வேண்டும் துக்கத்தை ஆளுக்கோர் அளவு பங்கிட்டுக் கொள்வதன் மூலம், இந்த காட்டு முறையை நாட்டிலே கண்டோமே என்பது பற்றி எண்ணித் தலை இறங்குவதன் மூலமும் அவர் கீழே சாயும் வரையிலே அஞ்சாமல் பணிபுரிந்தது போல, ‘வெறியர்கள் டில்லியில் உலவுகிறார்கள்: வெடிகுண்டும் வீசினார்கள் என்பதறிந்திருந்தும் மாபெருங் கூட்டத்திற்குப் பாதுகாப்புத் தேடாமல் வந்த மாண்பு போல நாமும் இந்த தாங்க முடியாத துக்கத்தையும் தாங்கிக் கொள்ளும் சக்தியைப் பெற வேண்டும்.

காந்தியாரின் புகழொளியை அல்ல. அவருடைய உழைத்து அலுத்த உடலைத்தான், வெறியன் சுட்டு வீழ்த்தினான் எனவே கண்ணீரைத் துடைத்துக் கொள்வோம்; மனவேதனையைக் கட்டுக்குக் கொண்டு வருவோம்; அவரவரும் தன் வாழ்நாளில் மக்கள் பணி செய்வதே, மறைந்த மாபெருந் தலைவருக்குக் காட்டும் மரியாதை, செலுத்தும் காணிக்கையாகும் என்பதை அறிந்து யமுனைக் கரையிலே மூண்ட தீயை, தியாக தீயாக்கி, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்.

அவர் விரும்பியது அதுதான் அவர் பணி புரிந்ததும் அதற்கே, குரோதம் நீங்கித் துவேஷத்தை விரட்டி, அனைவரும் ஒன்றுபட்டு நின்று, நாட்டுப் பணிபுரியுங்கள் – என்றே அவர் கூறிவந்தார் – அந்தப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்திலேயே, மாபாவியால் கொல்லப்பட்டார். அவருடைய மறைவு, மனவேதனை தருவதோடு நில்லாமல், நமது மனதுக்குப் புதிய உறுதியைக் கொடுத்துப் புதிய உண்மையைக் காட்டுமாக,

மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன் அவரை இழந்தோம் அவனி அவரை மறவாது

”உலகிலேயே படை பலமும் ராஜ தந்திர பலமும் மிகுந்தோர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டு வெற்றிகாண முடியும்.  ஆயுத பலமுமின்றி”  என்ற திடமனதை எந்த உத்தமர் உண்டாக்கினாரோ, அவரை ஏகாதிபத்தியமே பணிந்துவிட்ட நேரத்தில், எவனோ வெறியன் சுட்டு விட்டான் இந்த நாடும் உலகமும் இதனை மறப்பதற்கில்லை. நமது வாழ்நாளிலே நாடு விடுதலை பெறக் கண்டோம்; நாம் சாகுமுன் ஆங்கில நாட்டுக்கு நாமோர் அடிமை என்று இருந்த இழிவு நீக்கப்பட்டு அதனால் நமது மக்களெல்லாம் தலை நிமிர்ந்து நின்று, பூரித்து நமது தலைமுறை மகத்தானது என்று மார்தட்டிக் கூறினோம். இன்றோ மாபாவியினால் மகாத்மா கொல்லப்பட்ட காலத்திலே வாழ்ந்தவர்கள் நாம் என்ற துக்கம், மனதைப் பிய்த்துத் தின்னுகிறது

அவருடைய முப்பதாண்டுப் பணியிலே. ஒரு கடுமையான சொல், ஒரு நேர்மையற்ற செயல், ஒரு சுயநலத்திட்டம் இருந்ததில்லை அவருடைய சேவையினால் ஏற்பட்ட செல்வாக்கு இந்தியாவின் ஒளியையும் ஆசியாவின் புகழையும், நிறத்திமிர் கொண்டு இறுமாந்திருந்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் கிலி உண்டாக்கக் கூடிய அளவுக்குப் பரப்பிற்று. அவருடைய மொழியைக் கேட்க வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்கள் ஓடோடி வந்தனர். அவர் மண் குடிசையிலே தங்கினால், அங்கு செல்வதை மதிப்பளிக்கக் கூடிய தென்று மன்னர் மன்னர்கள் எண்ணினர். அவருடைய மறைவு கேட்டு மாநிலமே துடிதுடித்தது போல, வேறு எங்கும் எந்தத் தலைவருக்கும் ஏற்பட்டதில்லை, புதிய மார்க்கம் துவக்கிய புத்தர், வீரத்தாலும் பிறகு விவேகத்தாலும் இந்தியாவின் புகழை வளரச் செய்த அசோகன், பெரிய வல்லரசுகளைக் கட்டி ஆண்ட மன்னர்கள் ஆகியோர் படித்தவர்களுக்கு மட்டுமே தெரியக் கூடிய நிலை பெற்றனர். மகாத்மாவையோ, மாநிலம் முழுவதும், படித்தவர் பாமரர். பாராளுமன்றத்தினர் அனைவரும் அறிந்து கொண்டதும், அவர்களின் மனதிலே, அவர் இடம் பெற்றார் சத்தியம், அஹிம்சை எனும் இரு தத்துவங்களை நாடு கொள்ள வேண்டுமென்பதை அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தார். அரசியலிலே மோசடிகளும், படுகொலைகளும் நிகழ்ந்த போதும், அவர் மனம் வேதனைப்பட்டதேயன்றி. அவர் அந்த இரு தத்துவங்களை வலியுறுத்தத் தவறவில்லை. கடைசி வரையில் அந்தக் கொள்கையை அவர் கொண்டிருந்தார். நாடு, அந்தக் கொள்கை வழி நிற்கவில்லையே என்ற எண்ணம் அவர் மனதிலே கிளப்பிய வேதனைப் கொஞ்சமல்ல. கடந்த சில மாதங்களாகவே, இந்த மன வேதனையை அவர் எடுத்துக் கூறி வந்தார்.

 

எவரும் இயலாதது என்று எண்ணி, போகத் துணிவு பெறாமல் இருக்கும் இடத்துக்குச் சென்று காரியம் செய்ய அவர்முன் வந்தார் படுகொலைகள் நடைபெற்ற நவகாளி, கல்கத்தாப் பகுதிகளிலே, அவர் கிராமம் கிராமமாக, ஒற்றையடிப் பாதைகளிலே, வயல் வரப்புகளின் மீது குக்கிராமங்களுக் கெல்லாம் சென்று நொந்த உள்ளங்களுக்கெல்லாம் ஆறுதல் அளித்தார். மிருகத்தன்மையை மாற்றினார். மக்களிடம் புதியதோர் மனமாறுதலை ஏற்படுத்தினார். ஆபத்து நிரம்பிய இடம், அறிவற்ற மூர்க்கர்கள் உலவிய இடம் என்று பயந்தனர் பலரும் – அவருடைய புன்சிரிப்பு அவ்வளவுக்கும் பதிலளித்து என் உயிரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் –

என்று கூறினார் எரிமலை மீது நடந்தார்; தீ அண்டவில்லை – ஆனால் சர்க்காரின் தலைமைப் பீடத்தைத் தன்னிடம் கொண்ட டில்லியில், அக்கிரமம் நடந்து விட்டது

”சாம்ராஜ்யங்களின் சவக்காடு, இந்த பாழாப்போன டில்லி, இது நமக்குத் தலைநகராக இருக்க வேண்டாம்” என்று கிருபாளனி போன்ற தலைவர்கள் சொன்னார்கள் உண்மையிலேயே டில்லியிலே முன்னர் அமைக்கப்பட்ட பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் அவ்வளவும், சதிச் செயலால், படுகொலையால், பாவிகளின் துரோகத்தால், சரிந்து போயின. சவக்காடு – சாம்ராஜ்யங்களின் சவக்காடு ஆம், அதுமட்டுமல்ல இப்போது, உலகைத் திருத்திய உத்தமரையே சாகவைத்த துரோக புரியாகிவிட்டது. டில்லியிலே என்ன இருக்கிறது என்று உலகிலே. எதிர்காலத்திலே, கேள்வி கேட்கப்படும்போது, நாமும் பின் சந்ததியும் எப்படிப் பதில் கூற முடியும் தலை கவிழ்ந்து தழதழத்த குரலிலே, “மகாத்மாவை மாபாவி கொன்ற இடம் இந்த இடம் அந்த டில்லி” – என்று கூறிக் கதற வேண்டும்

மகாத்மா கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, அவருடன் சர்தார் பட்டேல் பேசிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சில், காலம் போய் விடுவதை அறிந்து தன் அன்புரை கேட்க மக்கள் கூடி இருப்பரே என்ற எண்ணம் கொண்டு, சர்தாரிடம் விடை பெற்றுக் கொண்டு சென்றார் – மீண்டும் சந்திக்கும்போது படேல் கண்டது குண்டு பாய்ந்த மார்பும், அப்போதும் மலர்ச்சி குன்றாத முகமும் கொண்ட மகாத்மாவின் ஆவி பிரியும் கோலத்தை, துக்கம் துளைக்கும் நிலையிலே உள்ள நாம் அவர்களைச் சற்று நம் அகக்கண்முன் கொண்டு வந்து பார்க்க வேண்டும். சர்தார், நேரு, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார், சரோஜினி அம்மையார். தேவதாஸ் இவர்களின் உள்ளம் இந்தச் செய்தியைத் தாங்க முடியுமா? எவ்வளவு தொடர்பு, எத்தகையத் தொடர்பு, எத்தனை ஆண்டுகளாகத் தொடர்பு, கஷ்டத்திலும் சுகத்திலும் கலந்திருந்த அவர்களின் உள்ளம், எப்படி இருந்திருக்கும். பிர்லா மாளிகை யிலே அவருடைய சடலம் இருந்த நிலையைக் கண்டபோது அவர்கள் அந்தத் துக்கத்தைத் தாங்கிக்கொண்டுள்ளனர். நாட்டு மக்களின் துக்கத்தைத் துடைக்கும் கடமை உணர்ச்சியுடன், அவர்களின் பக்கம் நின்று நாமும், இந்தச் சகிக்க முடியாத துக்கத்தைத் தாங்கிக் கொள்வோம்

உலகிலே உள்ள எல்லா நகர்களிலும், மக்களின் மனம் துடிதுடித்துப் போயிற்று. தூர தேசமான அமெரிக்காவிலே அழுகுரல், பற்பல நாடுகளிலேயும் பிரலாபம். எவரும் ஆ ஆ என்று அலறிய நிலை, எங்கும் ஏற்பட்டதில்லை இத்தகைய கோரச் சம்பவம்.

கட்சிகளைக் கடந்த கர்மயோகி துக்கம் நம்மைப் பிணைக்குமாக

காலை 1 மணிக்குப் புறப்பட்ட பிரேத ஊர்வலம், யமுனைக் சுரை போய்ச் சேர, மாலை ஐந்தாயிற்று. ஜன சமுத்திரத்தைச் கடந்து சென்று,  கதறும் மக்களைக் கடந்து சென்றது . ஐந்து மைல் இருக்குமாம் அந்தப் பாதை. அவ்வளவு இடமும் மக்கள் கூட்டம். ஆனால் அந்த ஐந்து மைல்களில் மட்டுமல்ல, இந்தியாவின் 2000 x 1000 மைல்கள் என்றுள்ள அளவு பூராவிலும் உள்ள நகரம் கிராமம் அவ்வளவு இடமும், மக்களின் சோகப் பயணமே நடந்தது, யமுனையை நாமெல்லாம் காணவில்லை. ஆனால் பல கண்ணீர் ஆறுகளைக், கண்ணீர் ததும்பும் கண்களால் கண்டோம் அங்கே மாலை 6 மணிக்குத் தீயிட்டனர்.

இங்கே பாதகன் அவரைக் கொன்றான் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் நமது இருதயத்திலே தியிடப்பட்டது;

ஆறாத அணையாத தீ: ஆத்திரக்காரன் நமது நாட்டின் உயிருக்குத் வைத்ததீ: நானிலமெங்கும் நம்மை அறியச் செய்த உத்தமரின் உடலிலே தீ வைத்த அந்த உலுத்தன், எவ்வளவு கொடிய துரோகம் செய்து விட்டான் என்பதை எண்ணும்போதே நமது இருதயத்தில் பட்ட தீ. மேலும் மூண்டு விடுகிறது.

 

நாம், மிகமிக, மகத்தான நஷ்டத்துக்கு ஆளாக்கப்பட்டு விட்டோம். கட்சிகளை. கட்டுகளை , ஆபாசங்களை, கோபத் துவேஷங்களைக் கடந்து நின்ற ஒரு உத்தமரை இழந்து விட்டோம்.

இந்தத் துக்கம், கட்சிக் குரோதச் சுவர்களை இடித்தெறிந்து நாட்டு மக்கள் அனைவரையும் குன்றாகப் பிணைக்கிறது. பல தலைவர்களின், ஆறுதலுரைகளிலும் இந்த எண்ணம் திண்ணமாகத் தெரிகிறது. மனதைக் கட்டுக்குக் கொண்டு வர நேரம் தவறினால், துக்கம் மக்களைக் கல்லாக்கிவிடும் அவ்வளவு ஆழப் பாய்ந்து விட்டது துக்கம்

கடைசி முறையாக, அவரைக் காண, இந்தியாவிலே உள்ள வெளிநாட்டுத் தூதுவர்களெல்லாம் ஓடோடி வந்து, அவர் பக்கம் நின்று புலம்பினர். சில நாட்களுக்கு முன்பு, தங்கள் தலைவர் அவுங்சானை, கொலை பாதகனால் இழந்து தவிக்கும் பர்மியப் பிரதிநிதிகளும் வந்திருந்தனர். கவர்னர்கள் அவர் காலடி நின்றனர் – வைசிராய் அவர் நிலை கண்டு வாய்விட்டு அழுதார் வல்லரசுகளிலே எல்லாம், வருத்தம் தெரிவித்து அறிக்கைகள் வெளிவந்தன. ஆனால், இவை அவ்வளவும் உள்ள அதிகப்படுத்துவதாக, அமைகின்றனவேயொழிய, துக்கத்தை  குறைக்கும் வழியாகத் தோன்றவில்லை. எந்தவிதமான ஆறுதலை நாடினாலும், அதனைத் தாண்டி அப்பால் நம்மை இழுத்துச் சென்று, இந்தத் துக்கம் தாக்குகிறது இந்தப் பயங்கர நிலையிலிருந்து விடுபடும் ஒரே வழி, இந்த துக்கத்தை நம்மை ஒரு சேரப் பிணைக்கும் சக்தியாக மாற்றுவதுதான்.

இந்த மகத்தான வேலையை முன்னிருத்தி, அழுத கண்களுடன் தின்றபோதிலும், அறநெறியைக் கைப்பிடித்து நிற்போமாக, இவ்வளவு பெரிய கஷ்டத்தைத் தாங்கிக் கொள்வோமானால் இனி நமது வாழ்நாளிலே நம்மை வதைக்கக் கூடிய அளவுக்கு ஆற்றலை, எந்தக் கஷ்டமும் பெற முடியாது. அவர் மறைந்தார் அவரை அவனி மறவாது அவருக்கு இருந்த மன உறுதியில் ஆயிரத்திலோர் பாகமேனும் நாம் பெற்றால்தான், அவனி நம்மைக் கண்டு, அவர் வாழ்ந்த நாட்டு மக்கள் தான் இவர்கள் என்று கூறும்.

மனிதருள் இருந்து கொண்டு சமயம் கிடைக்கும்போதெல்லாம் வெளிவந்து வெறிச் செயல் புரியும் மிருகத்தை அடக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும், அகில உலகமும் இந்தத் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள புதிய நிலையைக் காப்பாற்ற, இந்த உறுதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏகாதிபத்தியக் கோட்டையைத் தகர்த்து, யுகம் யுகமாக மூடிக் கிடந்து ஆலயங்களைத் திறந்து, மக்களிடையே புதிய மாண்பை காண்பதற்குத் தளராமல் பாடுபட்டு வந்த புனித புருஷனை இழந்து விட்டோம் நமது வாழ்நாளிலே நேரிட்ட இந்த மகத்தான நஷ்டத்துக்கு, பலப்பல தலைமுறைகளுக்குப் பிறகும் ஈடு செய்யக் கூடிய நிலை வராது.

இந்து மதத்தில் ஏறிப்போய், ஊறிப்போய் இருந்த கேடுகளை எல்லாம், தமது பரிசுத்த வாழ்க்கையாலும், தூய்மையான உபதேசத்தாலும்; புதிய தத்வார்த்தத்தலும், நீக்கும் காரியத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். இந்த அரும்பணியால், அன்பு மார்க்கம் தழைக்கும். அனைவரும் ஆண்டவனின் குமாரர்களே என்ற உண்மை துலங்கும் என்று மனமார நம்பினார்.

அந்தோ! இந்த அகத் தூய்மையோ, புறத் தூய்மையோ நெடுங்காலமாகக் குவிந்து வளர்ந்து போயுள்ள மதவெறியர்களைத் திருத்தாதே என்று கூறி வந்தோம் –

அவர் யாரிடமிருந்து அன்பு மார்க்கத்தை எதிர்பார்த்தாரோ, அங்கிருந்தே அவர் உயிரைக் குடிக்கும் ஒரு வெறி பிடித்த இந்து கிளம்பினான், இவன் இந்து மார்க்கத்தையும் இந்து அரசையும் நிலைநாட்டும் நோக்கம் கொண்டவன் என்று கூறப்படுகிறது. ஹைதராபாத் சமஸ்தான சத்தியாக்கிரஹத்திலும் கலந்து கொண்டவனாம். பெயர் நாதுராம் விநாயக் கோட்சே.

உலகை நோக்கி நமது உள்ளத்தை நோக்கி, “உத்தமரை வீழ்த்தி விட்டான் ஓர் உலுத்தன். அவருடைய உடலை நாங்கள் இழந்து விட்டோம் அவருடைய உத்தமக் கொள்கைகளின் மூலம் அவர் இனி என்றென்றும் வாழ்வார். இந்தத் துக்க நாளன்று அவர் எங்கள் ஒவ்வொருவருடனும் கலந்து விட்டார் அவரை எங்களை விட்டுப் பிரிக்க முடியாது. யமுனைக் கரையிலே அவருடைய சடலத்தைக் கொளுத்தினோம். ஆனால், வீடு திரும்புமுன், எங்கள் உள்ளங்களிலே அவர் இடம் பெற்றிருப்பதைக் கண்டோம். அவர் இதோ இருக்கிறார். எங்கள் நற்குணத் இனி துக்கும் நல்ல நடத்தைக்கும் காரணமாக விளங்கி வருகிறார் என்று கூற வேண்டும் சொல்லால் மட்டுமல்ல, செயலால் – அனைவரும்.

(1948 ஆம் ஆண்டு, காந்தி படுகொலை தொடர்பாக, அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை)

Source: www.arignaranna.net

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்