கடந்த அக்டோபர் 29ம் தேதி தங்களுடைய ஸ்டூடியோவை உயர்சாதி குண்டர்கள் எரியூட்டி விட்டு தங்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில், அண்ணல் அம்பேத்கரின் கருத்துகளை பரப்பி வந்த பாடகர்கள் விஷால் கஜிபூரி மற்றும் சப்னா பௌத்-ன் ஜோடி கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர்.
தனியார்மயம் மற்றும் வேலையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசும் இந்த ஜோடியின் பாடல்கள் ‘நாட்டை விற்பவன் வந்துவிட்டான் ( ஆயா தேஷ் விக்ரேதா), தனியார்மயம் என்னும் ஏமாற்று ( நிஜிகரன் ஏக் தோக்கா ஹே), ஹிட்லர் என்ற ஒருவன் இருந்தான், இப்போது இருப்பவன் பொய்யன் ( ஏக் தா ஹிட்லர், இப்போதிருப்பவன் ஜூட்லர்) .
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டாலும் யாருமே கைது செய்யப்படாத நிலையில், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தங்களுடைய இரண்டு வயது குழந்தையோடு தப்பிச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருக்கிறது.
விழிப்புணர்வுக்கான பாடல்கள்
விஷால் சிங் பாதல் என்ற விஷால் கஜிபூரி மற்றும் சப்னா பௌத் ஆகியோர் நோனாகரா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட விஷ்ணுபூர் கிராமத்தை சார்ந்தவர்கள் ஆவர். கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் உருவாக்கிய ஸ்டூடியோவில் அவர்கள் வசித்து வந்தனர். விவசாயத்திற்காக பிறரிடமிருந்து தன்னுடைய பெற்றோர் குத்தகைக்கு பெற்ற இரண்டு ஏக்கர் நிலத்தின் விளைச்சலையே உயிராதாரமாக கொண்டு வாழ்ந்து வந்த விஷால் ஜான்பூர் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் அலாஹபாத்தில் இசை கற்றுக் கொண்டார்.
பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டய படிப்பு படித்துக் கொண்டிருந்த போது ரவிதாஸ் பள்ளியின் நிர்வாகத்திற்கு நெருக்கமாக இருந்த ராம்ஜி ராவோடு தொடர்பு ஏற்பட்டது. ராம்ஜி அவருக்கு இருக்க இடமும், பள்ளியில் இசையாசிரியர் பணியையும் பெற்று தந்தார். மேலும், பி.ஆர்.அம்பேத்கர், ஜ்யோதிபா புலே, சத்ரபதி சாஹு மகாராஜ், சாவித்ரிபாய் புலே, கான்ஷிராம் ஆகியோரை அறிமுகப்படுத்தி, அவர்களது கருத்துகளை இசையின் வழி பரப்புமாறு கேட்டுக் கொண்டார்.
2014ம் ஆண்டு ஆண்டு முதல் ஒரு இயக்க கண்ணோட்டம் கொண்ட பாடகரானார், தலித் பகுஜன் அறிவுஜீவிகளின் கருத்துகளை பரப்ப பாடல்கள் எழுத தொடங்கினார்.
2016ம் ஆண்டு சித்தார்த்நகர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போது விஷால் சப்னாவை சந்தித்தார். சப்னா சித்தார்த் நகரின் தேபுராய் பகுதியை சார்ந்தவர். அதன் பிறகு பல்வேறு நிகழ்ச்சிகள் ஒன்றாக பாடியபடி சந்தித்து கொண்டார்கள். நட்பு காதலாகி ஓராண்டுக்குள் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு தற்போது இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.
விஷாலும், சப்னாவும் இணைந்து நூறு ஆல்பங்களை வெளியிட்டிருப்பார்கள், அவற்றில், ’கேளுங்கள் பீம் இராணுவ வீரர்களே’ (சுனோ சிபாஜி பீம்), ’ஜெய் பீம் நமோ புத்தாய’, ’யுத்தமில்லை புத்தன் வேண்டும்’, ’பீம் காதலர்களே புத்தனை நோக்கி பயணியுங்கள்’ (பீம் திவானோ சலோ புத்த கி ஓர்) உள்ளிட்டவை பிரபலமானவை. தங்களுடைய இயக்க பாடல்களால் பிரபலமடைந்தவர்கள், நாட்டை பாதிக்கும் விசயங்களையும், அதன் பின்னிருக்கும் நாட்டின் உச்ச தலைவர்களையும் பாடல்களின் வழி கேள்வி கேட்க தொடங்கினர்.
எடுத்துக்காட்டாக, வந்தான் தேச விற்பனையாளன் (आया देश विक्रेता) என்ற அவர்களின் பாடலின் மொழிபெயர்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
எங்கள் பாரதம் துண்டு, துண்டுகளாக சிதறியபோது, சந்திரகுப்தர் அதை முழுமையானதாக மாற்றினார்
பிம்ராவ் அதை தனது பேனாவால் மேலும் உயர்த்தினார்
அத்தகைய நாட்டின் சிம்மாசனத்தில் இப்போது ஒரு மோசடி பேர்வழி அமர்ந்திருக்கிறார்
யார் நாட்டை விற்கிறார்களோ, விற்பனையாளர் என்ற பெயரில்தானே அறியப்படுவார்கள்
அவர் தேநீர் விற்றார், இப்போது ஒரு நாடு விற்கிறார்
”கருப்பு பணத்தை கொண்டு வருவேன்” என்று தொடை தட்டினார், இருந்த புதையலை தின்றழித்துவிட்டார்.
பணக்காரனுக்கு வட்டி விலக்கு, ஏழைக்கில்லை பசிவிலக்கு
கோடி ரூபாயை சுருட்டினாலும், தன்னை ஏழைத்தாயின் மகன் என்கிறார்
நாட்டை விற்கிறவன், நாடு விற்பனையாளர்தானே?
பாடல் இணைப்பு :
”ஹிட்லர் என்றொருவன் இருந்தான், இப்போதிருப்பவன் பொய்யன்” என்றொரு பாடல் சந்தன் என்பவரால் எழுதப்பட்டு, விஷால் மற்றும் சப்னா பாடினர். அரசியல் சாசனத்திற்கு ஏற்பட்டு வரும் நெருக்கடி குறித்து பேசியது அந்த பாடல்
ஒரு காலத்தில் ஹிட்லர் என்றொருவன் இருந்தான், இப்போதிருப்பவன் பொய்யன்
அவன் ஜெர்மனியை சீரழித்தான், இன்னொருவன் இந்தியாவை சீரழித்தான்
அச்சே தின்களின் கனவுகளை காண்பித்து, மலக்குழிக்குள் தள்ளிவிட்டான்
ஈடியும், ஈசியும் அவனது தரகர்கள், ஊடகங்கள் அவனது கைப்பாவைகள்
நீதித்துறையே அவனுக்கு அஞ்சி அடிபணிய செய்துவிட்டான்
தன்னுடைய பக்தர்களையே அவ்வப்போது சோதிக்கும் சந்தேக புத்தி கொண்டவன்
பேரிடர் காலத்தில் தட்டில் ஒலி எழுப்பவும், கைதட்டவும் கோருவான்
மதவாதத்தை தின்ன கொடுத்து, பக்தர்களின் இராணுவத்தை கட்டியெழுப்பியிருக்கிறான்
வேலைக்கு உத்தரவாதமென்றான், கோடிக்கணக்கானவர்களின் வேலையை பறித்தான்
ரிசர்வ் வங்கியை காலி செய்தான், பொருளாதாரத்தை பாதாளத்திற்கு தள்ளினான்
சந்தா, மீண்டும் நாட்டின் கடன் விண்ணை முட்டுகிறது
பாடல் இணைப்பு :
வன்முறையான எதிர்வினை
இரண்டு பாடல்களும் உடனடியாக ஹிட் பாடல்கள் ஆயின. ஆனால், உயர்சாதி குண்டர்களின் கோபத்திற்கு இந்த ஜோடி ஆளாக நேர்ந்தது. நான்கு வெவ்வேறு எண்களிலிருந்து விஷாலுக்கு கொலை மிரட்டல் வரத் தொடங்கியதையடுத்து, விஷால் நானோஹாரா காவல்நிலையத்திற்கு தகவல் சொன்னார். இரண்டு நாட்கள் கழித்து சிலர் ஸ்டூடியோ கதவை வேகமாக தட்டியபடி கெட்டவார்த்தையில் வசைபாடியபடி, இவ்வாறான பாடல்களை பாடக்கூடாதென மிரட்டல் விடுத்தனர். பின்னர், ஸ்டூடியோவுக்கு வெளியில் இருந்த ஃபிளெக்ஸ், பேனர், கொடி அனைத்தையும் தீயிட்டு கொளுத்தினர்.
சம்பவம் தொடர்பாக, நோனஹரா காவல்நிலையத்தில் விஷால் எழுத்து வடிவில் புகார் கொடுத்தார். காவல்துறையினர் திக் விஜய் சிங், ரிஷி அவஸ்தி மற்றும் அடையாளங்காணப்படாத இரண்டு நபர்கள் மீது பிரிவு 506,507,435 மற்றும் 32 உள்ளிட்ட பட்டியல்சாதியினர் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் முதல் தகவலறிக்கையை பதிவு செய்தனர்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட மறுநாள் விஷாலுக்கு மூன்று மிரட்டல் அழைப்புகள் வந்தன. அக்டோபர் 31 மற்றும் நவம்பர் 4 ஆகிய நாட்களில் மீண்டும் வந்த கொலை மிரட்டல்கள் நின்றபாடில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் ஆன பின்னரும் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
தன்னுடைய குடும்பத்திற்கு பாதுகாப்பு வேண்டி விஷால் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு விண்ணப்பம் எழுதி இருக்கிறார். வேறுவழியில்லாமல், தன்னுடைய குடும்பத்தின் நலன்களுக்காக கிராமத்தை விட்டு வெளியேறிய பின்னரும் அவருக்கு கண்மூடி பக்தர்களிடமிருந்து மீண்டுமொரு மிரட்டல் வந்ததாக குறிப்பிடுகிறார்.
மாவட்ட நீதிபதி மற்றும் மாநில மனித உரிமை ஆணையம், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கு குண்டர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி கடிதம் எழுதியதாக விஷால் குறிப்பிடுகிறார்.
பாடகராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய பொழுது போஜ்புரி நடிகர்கள் மற்றும் பாடகர்கள் மனோஜ் திவாரி மற்றும் ரவி கிஷன் போன்றோரை முன்னோடிகளாக கொண்டிருந்தார். இலட்சியத்திற்காக அர்ப்பணித்துக் கொண்டார். “நாங்கள் எங்களுடைய லட்சியத்தை நீங்கள் பாடல்களின் வழி கொண்டு செல்கிறோம்.” என்று விஷால் கூறுகிறார்.
விசாலுக்கு வந்த மிரட்டல் கால் :
தனக்கு பிடிக்காத விசயத்தை வன்முறையில் வழி எதிர்கொள்வது சரியில்லை என்று கருதுவதால், தன்னுடைய பாடல்கள் குறித்து யாருக்கேனும் விமர்சனங்கள் இருந்தால் அவர்களோடு விவாதிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அஹிம்சையின் மீது பற்று கொண்டிருப்பவராக தன்னை அறிவித்துக் கொள்ளும் விஷால், அண்ணல் அம்பேத்கரின் லட்சியங்களுக்காக மிரட்டல்களுக்கு அப்பாலும் உழைப்பேன் என்று கூறுகிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.