Aran Sei

கொரோனா பேரிடர்: வைரசின் இரக்கமின்மைக்கும்,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சம பங்கு உண்டு – மருதையன்

ங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று உலகமே சொல்கிறது. ஆனால் அந்த  தடுப்பூசியில் கொள்ளை இலாபம் பார்க்கும் மருந்துக் கம்பெனிகளுக்குத் தரகரைப் போலச் செயல்படுகிறது மோடி அரசு.

காசு கொடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் அளவுக்கு வருமானமுள்ள அமெரிக்க, ஐரோப்பிய நாட்டு குடிமக்களுக்குக் கூட அந்த நாட்டு அரசுகள் இலவசமாகவே தடுப்பூசி போட்டு வருகின்றன. ஏனென்றால் ஒரு பெருந்தொற்றுக் காலத்தில் தடுப்பூசி என்பது ஒரு குடிமகனின் உயிர் வாழும் உரிமையைக் குறிப்பதாகும். அந்த உரிமைக்கு எந்த அரசும் விலை வைக்க முடியாது.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காத அயோக்கியத்தனம் இந்தியாவில் மட்டும்தான் நடக்கிறது. தடுப்பூசிக்கு விலை வைத்திருப்பது மட்டுமல்ல, ஊசிக்கு மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுகளுக்கு ஒரு விலை, தனியார் மருத்துவமனைகளில் ஒரு விலை என்று மருந்துக் கம்பெனிகள் பலவிதமாக  கொள்ளையடிப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது மோடி அரசு. இதனைக் கண்டிக்காதவர்கள் பாக்கி இல்லை. எல்லா கட்சிகளும் கூட்டறிக்கை விட்டிருக்கின்றனர். ஆனால், யாருக்கும் மோடி பதிலளிப்பதில்லை.

ஆகஸ்டு தொடக்கத்துக்குள் சாவு எண்ணிக்கை குறைந்த பட்சம் பத்து இலட்சத்தை தாண்டும் என்று பல வல்லுநர்களும் கூறுகின்றனர். கிராமப்புற சாவுகளுக்கு கணக்கே இல்லை. மருத்துவம் நடுத்தர வர்க்கத்துக்கே எட்டாக்கனியாகி விட்டது. கிராமப்புற ஏழை மக்களிடமோ மயானச் செலவுக்குக்கூட  காசில்லாத காரணத்தினால் பிணங்கள் கங்கையில் மிதக்கின்றன.

மத்திய அரசு நிர்வாகத்தின் யோக்கியதை கிழிந்து தொங்குகிறது. இருட்டடிப்புக்குப் பெயர் போன இந்திய ஊடகங்களை,  மோடியின் வளர்ப்பு நாய்கள் என்று உலகமே காறித்துப்புகிறது.

ஜனநாயகத்தின் தூண்களில் மிச்சமிருப்பது நீதிமன்றம் மட்டும்தான்.

நீதிபதிகளுக்கு  ஜனநாயக உணர்வூட்டிய கொரோனா!

உச்ச நீதிமன்றத்தின் நேர்மை  நாம் அறியாததல்ல.  சென்ற ஆண்டு மோடி அறிவித்த திடீர் ஊரடங்கின் காரணமாக ஏழைமக்கள் அனுபவித்த பட்டினி, புலம்பெயர் தொழிலாளர் துயரம், சாவுகள் உள்ளிட்ட எந்த பிரச்சனை தொடர்பான மனுவுக்கும் தலைமை நீதிபதி பாப்டே அசைந்து கொடுக்கவில்லை.

தற்போது, ஆக்சிஜன் இல்லை என்று டில்லியே அலறியபோதிலும், பாப்டேயின் உறக்கம் கலையவில்லை. ஆனால், சென்னை, அலகாபாத், குஜராத், டில்லி  உள்ளிட்ட பல உயர் நீதிமன்றங்கள் மோடி அரசுக்கு எதிரான கண்டனங்களை வெளியிடத் தொடங்கியவுடனே, பாப்டே திடுக்கிட்டு விழித்துக் கொண்டார்.  நாடெங்கும் கொரோனா தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றி, உயர்நீதி மன்றங்களை முடக்க முயற்சித்தார். இதற்குத் தோதாக, சர்வதேச கார்ப்பரேட்டுகளின் தரகனான ஹரிஷ் சால்வே என்ற வழக்கறிஞரை, அமிகஸ் கியூரியாக நியமிக்க முயற்சி செய்தார்.

2020 ஊரடங்கின் போதும்,  இதே தந்திரத்தை கையாண்டுதான், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரிய  அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார் பாப்டே.  இந்த முறை பல மூத்த வழக்கறிஞர்கள், பாப்டேயை வெளிப்படையாக கண்டித்தனர். “உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்தை  உச்ச நீதிமன்றம் பறிப்பதையும், ஹரிஷ் சால்வேயை நியமிப்பதையும் விமர்சித்தனர். தனது திட்டம் நிறைவேறாமலேயே பாப்டே ஓய்வு பெற வேண்டியதாயிற்று.

சென்ற ஆண்டு கொரோனா முதல் அலை  பெரும்பாலும் உழைக்கும் வர்க்கத்தின் துயரமாகவே இருந்தது. இரண்டாவது அலை,  நடுத்தர வர்க்கத்தை மட்டுமின்றி,  நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனைவரையும் சுடுகாட்டுக் கியூவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டது.  மோடியின் ஆட்சியில்,  பணக்காரர்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்கவில்லை, மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்கவில்லை, சுடுகாட்டிலும் சுலபமாக இடம் கிடைக்கவில்லை.

பணத்தைக் கொண்டு  தங்கள் உயிரையும், உரிமையையும் காப்பாற்றிக் கொள்ள இயலாது என்ற எதார்த்தமும்,  வைரசிடமிருந்து மொத்த சமூகமும் பாதுகாக்கப்பட்டால் மட்டும்தான், தங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையும் மேட்டுக்குடி வர்க்கங்களின் தோலில் சுரீரென்று உரைத்த இந்தத் தருணத்தில்தான், சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகளின் அறவுணர்ச்சி விழித்துக் கொண்டிருக்கிறது.

அரசியல் சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவம்) பிரிவு 21  (உயிர் வாழும் உரிமை) ஆகிய அடிப்படை உரிமைகள் அவர்களின் நினைவுக்கு வந்திருக்கிறது.

நீதியரசர்களுக்கு ஜனநாயக உணர்வை “ஊட்டியதற்கான” பெருமை யாரைச் சேரும்? இதில் வைரசின் “இரக்கமின்மைக்கும்”,  மோடி அரசின் இரக்கமின்மைக்கும் சமபங்கு இருப்பதைப் போலத் தோன்றலாம்.  ஆனால் மோடியின் தடுப்பூசிக் கொள்கையில் நிரம்பியிருக்கும் வக்கிரத்தைப் புரிந்து கொண்டால்,  கொரோனாவை விஞ்சி நிற்பவர் மோடிதான் என்பதையும் நாம் புரிந்து கொள்ள இயலும்.

மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்!

ஏப்ரல் 20 ஆம் தேதியன்று டெல்லி உயர்நீதிமன்றம் (நீதிபதிகள் விபின் சங்கி, ரேகா பல்லி) மைய அரசுக்கு கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டது.

“ஒவ்வொரு நாளும் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.  தடுப்பூசிக்கான காப்புரிமையை வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள், அதனை மற்றவர்கள் உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு ஈட்டுத்தொகை கொடுத்துவிடலாம். அவர்கள் இதை ஏற்க மறுத்தால் காப்புரிமை சட்டத்தின் கீழ் அரசுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துங்கள். மக்களின் உயிரைக் காட்டிலும் மேலானது வேறொன்றும் இல்லை. மத்திய அரசு உடனே முடிவெடுக்க வேண்டும்” என்றது டில்லி உயர்நீதி மன்றம்.

மோடி அரசு அசைந்து கொடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதியன்று, நீதிபதிகள் சந்திரசூட்,  நாகேஸ்வர ராவ், ரவீந்திரபட் ஆகியோர் அடங்கிய அமர்வு, கொரோனா நிவாரணம் தொடர்பாக தானாக முன்வந்து எடுத்துக்கொண்ட வழக்கில், மோடி அரசை நோக்கி  கீழ்வரும் கேள்விகளை எழுப்பியது.

“காப்புரிமை காரணமாக முடக்கப்பட்டுள்ள  Remdesivir, Tocilizumab, Favipiravar ஆகிய  கொரோனாவுக்கான மருந்துகளின் உற்பத்தியைப் பெருக்கும் பொருட்டு, காப்புரிமை சட்டத்தின் 92  அல்லது 100 வதுபிரிவைப் பயன்படுத்தி அரசு ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை? ஒரு பொதுச் சுகாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்த சூழலில் கூட அவ்வாறு ஏன் செய்யவில்லை?”

“சிறுநீரகப் புற்றுநோய்க்கான மருந்தின் காப்புரிமையை வைத்திருந்த பேயர் நிறுவனத்தின் தடையை மீறி, ஐதராபாத்தில் உள்ள நாட்கோ நிறுவனம் அந்த மருந்தை உற்பத்தி செய்ய  இந்திய அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறதே, அவ்வாறு இப்போது ஏன் செய்யாமலிருக்கிறீர்கள்? ஜெர்மனி, பிரான்சு,  கனடா போன்ற நாடுகள் இதை செய்திருக்கும்போது நீங்கள் ஏன் செய்யாமலிருக்கிறீர்கள்? மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின்படி உயிர் காக்கும் மருந்துகளின் விலையைக் குறைப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இருக்கிறதே, ஏன் செய்யவில்லை?”

“அரசின் தடுப்பூசிக் கொள்கை, அரசியல் சட்டத்தின் பிரிவு 14, 21 க்கு எதிராக உள்ளது. மூன்று வித விலைகள் எப்படி சரியாகும்? தனியார் கோவிஷீல்டு ஊசியின் விலை இந்தியாவை விட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மலிவாக இருக்கிறதே, எப்படி? “

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மோடி அரசு மே 10 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

ஆனால், இவ்வாறு உத்தரவிட்ட மேற்கண்ட  அமர்வின் மூத்த நீதிபதி சந்திரசூட்  கொரோனா தொற்றுக்கு ஆளாகிவிட்டார். எனவே,   மே 13ம் தேதி அன்று நடைபெறவேண்டிய விசாரணை நடைபெறவில்லை.

உச்ச நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு மோடி அரசு பதிலளித்து விட்டது.  தனது பதிலில்  அரசமைப்புச் சட்டம்  உச்ச நீதிமன்றத்துக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

“கொரானா மருந்துகள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமையை கேள்விக்குள்ளாக்கும் நிலையை நாம் எடுப்பது, எதிர்மறையான விளைவை மட்டுமே ஏற்படுத்தும்….  இந்த  விவகாரத்தில் நீதித்துறை தலையீட்டின் நோக்கம் நல்லதாக இருக்கலாம். நீதித்துறையின் வரம்பு மீறிய தலையீட்டின் விளைவுகள் விபரீதமானவையாகவும் எதிர்பாராதவையாகவும் இருக்கும்” என்று உச்ச நீதிமன்றத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது மோடி அரசு.

வழக்கறிஞர் தவே விடுக்கும் எச்சரிக்கை!

மோடி ஆட்சியில் அரசமைப்பின் எல்லா உறுப்புகளும் பாசிசமயமாகி வருகின்றன.  அரசமைப்பு சட்டத்துக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிராக மோடி அரசு எடுத்து வரும் எல்லா சட்டவிரோத நடவடிக்கைகளையும் உச்ச நீதிமன்றம் ஆமோதித்து வருவதை நாம் அறிவோம். காஷ்மீர், குடியுரிமை திருத்த சட்டம், வேளாண் சட்டங்கள், ஊஃபா கைதுகள் என்று இதற்கு எடுத்துக்காட்டுகள் பல.

தற்போது ஒரு பேரழிவையும் சமூக நிலைகுலைவையும் நாடு சந்தித்து வரும் சூழலில், இனிமேலும், அரசை விமர்சிக்கத் தவறினால், நீதித்துறை என்ற அமைப்பின் இருத்தலே கேள்விக்குள்ளாகி விடும் என்ற நிலையில்தான் நீதிமன்றங்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

நீதிமன்றத்தின் இந்த தலையீட்டைக்கூட சகித்துக் கொள்ள முடியாது என்று மோடி அரசு விடுத்திருக்கும் எச்சரிக்கை,  அரசமைப்பு சட்டத்தின் ஆட்சியையே முடிவுக்கு கொண்டு வருவதற்கான எச்சரிக்கை என்று கூறுகிறார் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் துஷ்யந்த் தவே.

தி வயர் இணையதளத்தில், பத்திரிகையாளர் கரண் தபாருக்கு அளித்திருக்கும் பேட்டியில் அவர் கூறியிருக்கும் கருத்துகளின் சாரம் கீழ் வருமாறு.

“அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 32 இன் கீழ் குடிமக்களின் அடிப்படை உரிமையைப் பாதுகாக்கும்  பொருட்டு, அரசின் முடிவுகளில் தலையிடும் உரிமை உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.

அரசின் (executive) எல்லா முடிவுகளையும் மீளாய்வுக்கு உட்படுத்தும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு என்பது 1971 கேசவானந்த பாரதி வழக்கில் நிறுவப்பட்டிருக்கிறது.

சிவில் மற்றும் நீதித்துறை சார்ந்த எல்லா அதிகார உறுப்புகளும் உச்ச நீதிமன்றத்துக்குத் துணையாக இயங்க வேண்டும் என்று அரசமைப்பின் 144 வது பிரிவு கூறுகிறது.

சட்டப்பிரிவு 21 கூறுகின்ற உயிர்வாழும் உரிமை என்பது ஒரு அடிப்படை மனித உரிமை. அரசியல் சட்டம் வழங்கிய பின்னர்தான் அந்த உரிமையைக் குடிமக்கள் பெற்றதாக கருதுவது தவறு என்று அவசர நிலையை எதிர்த்து தீர்ப்பளித்த நீதிபதி எச்.ஆர்.கன்னா கூறியிருக்கிறார்.

இன்று அதுபோன்றதொரு சூழலைத்தான் எதிர்கொண்டிருக்கிறோம்.  மோடி அரசு, உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்தையே கேள்விக்குள்ளாக்கியிருக்கும் நிலையிலும்,  உச்ச நீதிமன்றம் வாய்திறக்காமல் மவுனம் சாதிக்கிறது. சந்திரசூட் உடல்நலம் பெற்று வரும்வரை இதனை தள்ளிப்போடக்கூடாது. 11 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வை தலைமை நீதிபதி அமைக்க வேண்டும்.

இத்தகைய முக்கியமான வழக்குகளில் ஆர்.எஸ்.நாரிமன், யு.லலித் போன்ற மூத்த நீதிபதிகள் கொண்டதாக அமர்வு இருந்திருக்க வேண்டும்.  அவர்கள் தவிர்க்கப்படுகிறார்கள். மைய அரசின் தலைமை வழக்கறிஞர் இந்த வழக்கில் அரசுக்கு வழிகாட்டியிருக்க வேண்டும். அவரையும் காணவில்லை.

இவையெல்லாம் தவறான அறிகுறிகள். தேசம் அழிந்து கொண்டிருக்கிறது. நாள்தோறும் மக்கள் மடிந்து  கொண்டிருக்கிறார்கள். நான் கையெடுத்துக் கும்பிட்டு கேட்கிறேன். அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாக்கும் கடமையை செய்வதற்கு, உச்ச நீதிமன்ற்த்தின் அதிகாரத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கு நீதிபதிகள் முன்வர வேண்டும். உறக்கத்திலிருந்து விழித்தெழ வேண்டும்”

துஷ்யந்த் தவேயுடைய நேர்காணலை முடித்து வைத்து கரண் தபார் கூறியிருக்கும் கருத்து நம் கவனத்துக்குரியது.

“தவே அவர்களே, நீங்கள் உணர்ச்சி வயப்படுகிறீர்கள், மன்றாடுகிறீர்கள். ஆனால் அவர்களிடம் இல்லாத ஒன்றை எதிர்பார்க்கிறீர்கள். விழிக்க விரும்பாத மனிதனை நாம் எப்படி எழுப்ப முடியும்? கண் விழித்தால் எதார்த்தம் எனும் கொடுங்காட்சியைக் காண வேண்டியிருக்கும். இனிமையான கனவுகளை நேசிப்பவர்கள் உறங்கவே விரும்புகிறார்கள். உச்ச நீதிமன்றமும் அதைத்தான் விரும்புகிறது என்று நினைக்கிறேன்.

இன்று, நம் கவனமெல்லாம் கொரோனா நெருக்கடியின் மீது இருக்கின்ற இந்த சூழலில், இரண்டாவது நெருக்கடி ஒன்று உருவாகி வருவதையும், அதனை முளையிலேயே கிள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தியிருக்கிறீர்கள்.  நன்றி.”

விழிக்க விரும்பாதவனை எழுப்ப இயலுமா?

“விழிக்க விரும்பாதவனை எழுப்ப இயலுமா?” என்று கரண் தபார் எழுப்பியிருக்கும் கேள்வி, உச்ச நீதிமன்றத்தை நோக்கி மட்டுமல்ல,  நம் ஒவ்வொருவரையும் நோக்கி எழுப்பப்படும் கேள்வியல்லவா?

நீதித்துறை என்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மட்டுமல்ல. பாரும் பெஞ்சும் இணைந்ததுதான் நீதித்துறை என்பதை அனைவரும் அறிவர்.

நாட்டின் லட்சக்கணக்கான வழக்கறிஞர்களும் அவர்களது சங்கங்களும் நீதித்துறையின் அதிகாரம் பறிக்கப்படுவதையும், நீதிபதிகள் மோடி அரசின் தலையாட்டி பொம்மைகளாக மாறி வருவதையும் அறிவார்களா, அது பற்றிக் கவலைப் படுகிறார்களா? பேசுகிறார்களா?

கண் விழித்துப் பார்த்தால் நமக்கு ஆபத்து என்று சிந்திப்பவர்கள் நீதிபதிகள் மட்டுமா?

முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளிகளுக்கும் ஊரடங்கால் வாழ்விழந்த ஏழைகளுக்கும் ஆதரவாக வழக்கு தொடுத்தவர்கள், நேர்ந்து விட்டவர்களைப் போல சில வழக்கறிஞர்கள் மட்டும்தான். உச்ச நீதிமன்றத்தின் வழக்கறிஞர் சமூகம் அக்கறைப்படவில்லை.  எனவேதான், பாப்டேயால் எல்லா வழக்குகளையும் எளிதாகத் தள்ளுபடி செய்ய முடிந்தது.

இன்று உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது எத்தனை வழக்கறிஞர்களுக்குத் தெரியும்?

“Executive இன் முடிவில் நீதிமன்றம் தலையிடக் கூடாது” என்று மோடி அரசு கூறுவது ஒரு நடிப்பு. தனக்குத் தேவைப்படும் போது உச்ச நீதிமன்றத்தை ஒரு அடியாளாக அது பயன்படுத்திக் கொண்டதை நாம் பார்க்கவில்லையா?

புலம்பெயர் தொழிலாளர்களின் பட்டினியையும் சாவையும் கண்டுகொள்ள மறுத்த உச்ச நீதிமன்றம், விவசாயிகள் போராட்டத்தை கலைப்பதற்காகத் தலையிட்டது. “வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்து, நான் கமிட்டி அமைத்து பஞ்சாயத்து செய்கிறேன்” என்று பாப்டே தலையிட்ட போது,  மோடி அரசு அதனை எதிர்க்கவில்லை. அது போராட்டத்தை உடைப்பதற்கு செய்யப்படும் முயற்சி என்பதால் அதனை கள்ளச் சிரிப்புடன் வரவேற்றது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடந்தது என்ன?  ஆலையை மூடுவது என்பதும் தமிழக அரசின் (Executive) முடிவுதான். உயர்நீதி மன்றத் தீர்ப்பும் இருக்கிறது. ஆனால் பாப்டேயின் தலையீட்டை மோடி அரசு ஆதரித்தது. எல்லா நெறிமுறைகளையும் மீறி வேதாந்தாவின் புரோக்கரைப் போல உச்ச நீதிமன்றம் அன்று செயல்பட்டதை நாடே கண்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த முறைகேட்டை விமர்சிக்கும் தைரியம் எத்தனை பேருக்கு இருந்தது?

வழக்கறிஞர்களே, குரலெழுப்புங்கள்!

ஆக்சிஜன் இல்லை என்று சமூக ஊடகத்தில் பதிவிட்டால் கைது செய்கிறது யோகி அரசு. தடுப்பூசியை ஏற்றுமதி செய்ததற்காக மோடியை விமர்சித்து சுவரொட்டி ஒட்டியவர்கள் டில்லியில் கைது செய்யப்படுகிறார்கள். கோவிட் முதல் அலையின்போது மக்கள் பட்ட பாட்டை ஊடகத்தில் சொன்னதற்காக பத்திரிகையாளர்கள் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். இன்று ஓயாமல் எரியும் சுடுகாட்டையும், கங்கையில் மிதக்கும் பிணங்களையும் காட்டுகின்ற ஊடகவியலாளர்கள் “அந்நியக் கைக்கூலிகள்” என்று மிரட்டப்படுகிறார்கள்.

இத்தனையும் பார்த்துக் கொண்டு வழக்கறிஞர் சமூகமும், அறிவுத்துறையினரும், ஊடகவியலாளர்களும் உறங்கும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மட்டும் விழிப்புடன் இருந்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவார்களா என்ன?

மோடி, ஷா வுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலரின் நிலை என்ன? லோயாவுக்கு நேர்ந்த கதி என்ன? இவர்கள் அனைவரும் மோடியாலும் அமித் ஷாவினாலும் மட்டும் பழி வாங்கப்பட்டவர்கள் அல்ல. வழக்கறிஞர் சமூகத்தின் மவுனத்தினாலும் பழிவாங்கப்பட்டவர்கள்.

அவசர நிலைக்காலத்தில் எச்.ஆர் கன்னா என்ற ஒரு நீதிபதியைத் தவிர மற்ற நீதிபதிகள், உயிர்வாழும் உரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை இந்திரா அரசு ரத்து செய்ததை ஆதரித்தார்கள். அவசர நிலையை வரலாற்றின் கரும்புள்ளி என்கிறோம்.

அவசர நிலைக்குப் பின்னர்தான் சிவில் உரிமை அமைப்புகள் தோன்றின. இன்று தலையாய சிவில் உரிமைப் போராளிகள் விசாரணைக் கைதிகளாக ஆண்டுக் கணக்கில் சிறையில் இருக்கிறார்கள். அவர்களை சிறைப்படுத்தியதன் மூலம் எதை சாதிக்க மோடி அரசு விரும்பியதோ அதை அநேகமாக சாதித்து விட்டது. எதிர்ப்புக் குரல்களை அடக்கிவிட்டது.

இதோ, மருத்துவமனை இல்லை, ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசி இல்லை, ஊரடங்கு காலத்தில் நிவாரணம் இல்லை.. என்று உயிர்வாழும் உரிமை நடைமுறையில் பறிபோய் விட்டதைப் பார்க்கிறோம்.

பிணங்கள், எரியூட்டப்படும் உரிமையையும் இழந்து கங்கையில் மிதப்பதைப் பார்க்கிறோம்.

“மோடிக்கு இரக்கமே இல்லையா?” என்று சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. மவுனம் சாதிப்பவர்கள் ஒவ்வொருவரும் தம்மை நோக்கியும் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி.

அரசியல் சமூகப் பிரச்சனைகளுக்காகப் போராடுவதில் நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் தமிழகத்தின் வழக்கறிஞர்கள். இந்தத் தருணத்தில் தமிழகத்தின் வழக்கறிஞர்கள் ஓங்கிக் குரலெழுப்பினால் அது நிச்சயமாக நாடெங்கும் எதிரொலிக்கக் கூடும். நீதிதேவன் உறக்கத்தைக் கலைக்கவும் கூடும்.

  • மருதையன்
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்